ஒரு நொடி - இயக்குனர் பி மணிவர்மன் இயக்கத்தில் தமன் குமார், எம் எஸ் பாஸ்கர், வேல ராமமூர்த்தி, பழ கருப்பையா என பல தமிழ் சினிமா பிரபலங்கள் இணைந்து நடித்திருக்கும் திரில்லர் திரைப்படம். இப்படத்தினை தயாரிப்பாளர் அழகர் ஜி மற்றும் கே ஜி ரத்தீஷ் இணைந்து தயாரிக்க, இசையமைப்பாளர் சஞ்சய் மாணிக்கம் இசையமைத்துள்ளார்.
அதிரடி - திரில்லர் திரைக்கதையில் உருவாகியுள்ள 'ஒரு நொடி' திரைப்படத்திற்கு ஒளிப்பதிவாளர் கே ஜி ரத்தீஷ் (இப்பட தயாரிப்பாளர்) ஒளிப்பதிவு செய்ய, படத்தொகுப்பாளர் குரு சூர்யா எடிட்டிங் செய்துள்ளார்.
ஒரு நொடி திரைப்படம் 2024 ஏப்ரல் 26ல் உலகமெங்கும் வெளியாகியுள்ள நிலையில், இப்படத்திற்கு தமிழக திரைப்பட தணிக்கை குழு 'யு/ஏ' சான்றிதழ் அளித்துள்ளது.
ஒரு நொடி திரைப்படத்தின் கதை
இப்படத்தின் நாயகன் மதுரை அலங்காநல்லூரில் காவலராக பணியாற்றி வருகிறார். மதுரையில் கட்ட பஞ்சாயத்து மற்றும் ரியல் எஸ்டேட் செய்து வரும் வேல ராமமூர்த்தி, மதுரை எம்.எல்.எ பழ கருப்பையா அவர்களின் உதவியோடு ரௌடிசம் செய்து வருகிறார்.
மகளுக்காக கடன் வாங்கிய எம் எஸ் பாஸ்கர், சரியான நேரத்தில் அந்த கடனை திருப்பி செலுத்தாத காரணத்தால் அவரிடம் இருந்து வேல ராமமூர்த்தி, எம் எஸ் பாஸ்கரின் சொந்தமான நிலத்தை சாதுரியமாக பிடுங்குகிறார். பின் எம் எஸ் பாஸ்கர் சிறுது காலம் கழித்து அந்த பணத்தை ஏற்பாடு செய்து தான் இழந்த நிலத்தை மீட்க செல்கிறார். ஆனால் எம் எஸ் பாஸ்கர் திடீரென காணாமல் போகிறார்.
ஒரு பெண் தற்கொலை செய்து கொள்கிறார், விசாரணையில் அந்த பெண் கர்ப்பமாக இருந்துள்ளார் என தெரிய வருகிறது. வேறு மதத்தினரை காதல் செய்ததால் அந்த பெண்ணை ஆணவ கொலை செய்திருக்கலாம் என சந்தேகம் எழுகிறது.
எம் எஸ் பாஸ்கர் காணவில்லை மற்றும் இளம் பெணின் தற்கொலை என இந்த இரண்டு வழக்கையும் விசாரிக்க தொடங்குகிறார், நாயகன். இறுதியில் என்ன ஆனது என்பதே இப்படத்தின் கதை.