பயணிகள் கவனிக்கவும் இயக்குனர் ஷக்தி வேல் இயக்கத்தில் விதார்த், கருணாகரன், லட்சுமி பிரியா, மஸூம் ஷங்கர் என பலர் நடித்திருக்கும் திரில்லர் திரைப்படம். இப்படத்தினை தயாரிப்பாளர் விஜயா ராகவேந்திர தயாரிக்க, இசையமைப்பாளர் சமந்த் நாக் இசையமைத்துள்ளார்.
பயணிகள் கவனிக்கவும் திரைப்படம் நேரடியாக 'ஆஹா தமிழ்' ஓடிடி தளத்தில் 2022 ஏப்ரல் 28ல் ஸ்ட்ரீமிங் செய்யப்பட்டுள்ளது. இத்திரைப்படம் மலையாள சினிமாவில் 2019ஆம் ஆண்டு வெளியாகி பெரிய அளவில் புகழ் பெற்ற 'விக்ருதி' திரைப்படத்தின் தமிழ் ரீமேக் படமாகும்.
பயணிகள் கவனிக்கவும் திரைப்படத்தின் கதை
புத்தகக் காப்பாளராக பள்ளி நூலகத்தில் பணிபுரியம் விதார்த், செவித்திறன் மற்றும் பேச்சுத்திறன் இல்லாத மாற்றுத்திறனாளி ஆவார். அவரது மனைவி லஷ்மி ப்ரியாவும் மாற்றுத்திறனாளி தான். இவர்களுக்கு ஒரு மகன், ஒரு மகள் என இரு குழந்தைகள் உள்ளனர். எளிமையான வாழ்க்கையாக இருந்தாலும் மகழ்ச்சியாக வாழ்ந்து வருகின்றனர்.
வெளிநாட்டில் வேலை செய்யும் கருணாகரன், திருமணத்திற்காக சென்னை வருகிறார். சமூக வலைத்தளங்களில் மிகவும் ஆர்வமுடன் உள்ள கருணாகரன், தொடர்ந்து பல பதிவுகளை பகிர்ந்து வருபவர்.
விதார்த்-ன் மகள் உடல்நல குறைவால் மருத்துவமனையில் அனுமதிக்கப்படுகிறார். தனது மகளை கவனித்துக்கொண்டு சில நாட்கள் தூங்காமல் உள்ள விதார்த், சென்னை மாநகர ரயில் வண்டியில் பயணம் செய்யும் போது அசதியில் தூங்குகிறார். அதே ரயிலில் பயணிக்கும் கருணாகரன் விதார்த்தை ஒரு குடிகாரனாக சித்தரித்து சமூக வலைத்தளத்தில் புகைப்படத்தோடு பதிவிடுகிறார்.
கருணாகரன் பதிவிட்ட புகைப்படம், பலரால் பல கோணங்களில் சித்தரிக்கப்பட்டு சமூக வலைத்தளங்களில் தீயாக பரவுகிறது. இதனால் விதார்த் மற்றும் அவரது குடும்பம் பாதிக்கப்பட்டு, காவல் நிலையத்தில் புகார் அளிக்கின்றனர்.
பின் என்ன ஆனது? கருணாகரன் காவலர்களிடம் பிடிபட்டரா? இந்த சிக்கலில் இருந்து விதார்த் எப்படி தப்பித்தார் என்பதே படத்தின் கதை.