ராட்சசி இயக்குனர் கவுதம்ராஜ் எஸ்.வொய் இயக்கத்தில் ஜோதிகா, பூர்ணிமா பாக்யராஜ் நடிக்கும் அரசியல் கலந்த கல்வி திரைப்படம்.
பெண் கதாபாத்திரத்தை மையமாக கொண்டு உருவாகும் இத்திரைப்படத்தினை ட்ரீம் வாரீர் பிக்சார்ஸ் நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர் எஸ்.ஆர்.பிரபு மற்றும் எஸ் ஆர் பிரகாஷ்பாபு ஆகியோர் இணைந்து இப்படத்தினை தயாரித்துள்ளனர். இசையமைப்பாளர் சீன் ரோல்டன் இசையில், ஒளிப்பதிவாளர் கோகுல் பெனோய் மற்றும் படத்தொகுப்பாளர் பிலோமின்ராஜ் பணிகளில் இப்படம் உருவாகியுள்ளது.
இத்திரைப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரானது 2019 மே 31-ல் இணையத்தளத்தில் வெளியானது, மேலும் அன்றே இப்படத்தின் ட்ரைலரும் வெளியானது.
கதை
உருப்படாமல் இருக்கும் ஒரு அரசு பள்ளியை மாவட்டத்தின் சிறப்பான பள்ளியாக மாற்றும் ஒரு தலைமை ஆசிரியையின் கதை தான் ராட்சசி.
ஆர்.புதூர் அரசு மேல்நிலைப்பள்ளி தான் படத்தின் கதைக்களம். கவனிக்கப்படாத ஒரு அரசு பள்ளி எப்படி இருக்குமோ அதற்கு கொஞ்சமும் தப்பாமல் அப்படியே இருக்கிறது ஆர்.புதூர் பள்ளியும். மோசமான ஆசிரியர்கள், மோசமான கட்டமைப்பு, ஒழுக்கமில்லா மாணவர்கள், பொறுப்பில்லா பெற்றோர்கள் என அந்தப் பள்ளியே சீர்க்குலைந்து கிடக்கிறது.
இப்படிப்பட்ட அந்த பள்ளிக்கு தலைமை ஆசிரியராக வருகிறார் கீதா ராணி (ஜோதிகா). எடுத்ததுமே அதிரடி தான். மிரண்டு போகிறது பள்ளிக்கூடம். வேலை செய்யாத ஆசிரியர்களை வெளுத்து வாங்குகிறார். மாணவர்களை ஒழுங்காக்குகிறார். பெற்றோர்களை பொறுப்பாக்குகிறார். பள்ளியை மேம்படுத்துகிறார். கூடவே ஒன்பதாம் வகுப்பில் பெயிலான 82 மாணவர்களை பத்தாம் வகுப்புக்கு பாஸ் செய்கிறார். இதுபோல் நல்லது செய்தால் பகை வராமல் இருக்குமா?.
தனியார் பள்ளி நடத்தும் ராஜலிங்கம் (ஹரீஷ் பிதாரி) கீதா ராணியின் முயற்சிகளுக்கு தடைக்கற்களை உருவாக்குகிறார். சக ஆசிரியர்கள் 'ராட்சசி'யை வேலையைவிட்டு காலி செய்ய பார்க்கிறார்கள். இந்த பிரச்சினைகளில் இருந்து தப்பி வந்து, அந்த பள்ளியை கீதா ராணி எப்படி முதன்மை பள்ளியாக மாற்றுகிறார் என்பதே ராட்சசி சொல்லும் உணர்வுப்பூர்வமான மீதிக்கதை.
அப்படி இந்த ராட்சசி யார்? எதற்காக இந்த பள்ளிக்கு வந்தார்? என்பதற்கான விடையையும் தருகிறது பின் பாதிப்படம்.