twitter

    சவரக்கத்தி கதை

    சவரக்கத்தி தமிழ் அதிரடித் திரைப்படம். இத்திரைப்படத்தை ஜி ஆர் ஆதித்யா இயக்க, மிஸ்கின், ராம் மற்றும் பூர்ணா ஆகியோர் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளனர்.

    கதை : 

    பார்பராக இருக்கும் பிச்சைமூர்த்தி (ராம்) தனது மனைவி சுபத்ரா (பூர்ணா) மற்றும் இரண்டு பிள்ளைகளோடு வண்டியில் போகும்போது எதிர்பாராவிதமாக தாதா மங்காவை (மிஷ்கின்) சந்திக்கிறார். மங்கா சிலபல குற்றங்கள் புரிந்து பரோலில் வெளியே வந்திருக்கும் குற்றவாளி. அன்று மாலை ஆறு மணிக்கு மீண்டும் ஜெயிலுக்கு செல்லவேண்டும். இதற்கிடையே, ஒரு பிரச்னையால் பார்பர் பிச்சை மூர்த்திக்கும் தாதா மங்காவுக்கும் இடையே தகராறாகிறது. தனது மனைவியின் தம்பியின் திருமணத்திற்காக செல்லும் பிச்சை மூர்த்தியை மங்கா தனது ஆட்களுடன் துரத்துகிறான். இன்னொரு பக்கம் பிச்சை மூர்த்தியின் மைத்துனர் தனது மகளுடன் திருட்டுத் திருமணம் செய்யவிருப்பதாக ஒரு தாதா துரத்துகிறார்.

    பரோலில் வெளிவந்திருக்கும் தாதா மங்காவாக இயக்குநர் மிஷ்கின். தன்னைச் சீண்டியவனை வெறிகொண்டு தேடித் தீர்த்துக்கட்டிவிட வேண்டும் என்கிற வைராக்கியத்தில் அலைகிற காட்சிகளில் அசத்துகிறார். வழக்கமான மிஷ்கினின் வெறித்தன ரியாக்‌ஷன்ஸ் இப்படத்திலும் தொடர்கிறது. பெரிய கண்கள், முரட்டு உடம்பு, லவுட் ஸ்பீக்கர் பேச்சு என கூட இருப்பவர்களையே நடுங்க வைக்கும் ரௌடியாக மிரட்டியிருக்கிறார். பிச்சை மூர்த்தியை தேடி ஓடுவது, தப்பித்ததும் வீறிட்டுக் கத்துவது, அடியாட்களை போட்டு மொத்துவது என எதையும் யோசிக்காமல் செய்யும் வில்லனுக்கான மேனரிசங்களை வெளிப்படுத்தியிருக்கிறார். பூர்ணா வயிற்று வலியால் துடிக்கும் காட்சியில் ஒருவர் மருத்துவமனைக்கு அழைத்துப்போகச் சொல்லி கோபமாகப் பேச, 'நீ ரொம்ப பேசிட்ட... கூட்டிட்டு போ' என சிம்பிளாக சொல்லும் இடம் என சிற்சில காட்சிகளில் அப்ளாஸ் அள்ளுகிறார்.

    பிச்சை மூர்த்தியின் பார்பர் ஷாப்பில் வேலை பார்க்கும் கொடுக்கு கேரக்டரில் நடித்தவர், மங்காவின் அடியாட்கள், காதல் ஜோடிகளாக நடித்திருப்பவர்கள், அவர்களது பெற்றோர் என எல்லோரும் மிகையில்லாத நடிப்பை வெளிப்படுத்தி இருக்கிறார்கள். மிஷ்கின் - ராம் துரத்தல்களுக்கு இடையே, நிறைமாதக் கர்ப்பிணி பூர்ணா மற்றும் குழந்தைகளின் சென்டிமென்ட் பகுதிகள், கர்ப்பிணிப் பெண்ணை இயல்பாகவே சாஃப்ட் கார்னருடன் பார்க்கும் மனிதர்கள், நெகிழவைக்கும் காதல் ஜோடி, காதலுக்கு பிரச்னை என்றவுடன் ஜோடி மாறி நிற்கும் காதலர்கள் என உருக வைக்கிறது இன்னொரு பக்கம். இதற்கு மத்தியில் தனி ட்ராக் இல்லாமல் சீரியஸான காட்சிகளிலேயே மெல்லிய நகைச்சுவையும் தூவியிருக்கிறார்கள்.

    **Note:Hey! Would you like to share the story of the movie சவரக்கத்தி with us? Please send it to us ([email protected]).