80ஸ் பில்டப் (80's Buildup) - இயக்குனர் எஸ் கல்யாண் இயக்கத்தில் சந்தானம், ராதிகா பிரீத்தி, மன்சூர் அலி கான், கே எஸ் ரவிக்குமார் என பல பிரபலங்கள் இணைந்து நடித்துள்ள நகைச்சுவை திரைப்படம். இப்படத்தினை தயாரிப்பாளர் கே ஈ ஞானவேல் ராஜா தனது 'ஸ்டூடியோ கிரீன்' தயாரிப்பு நிறுவனத்தின் மூலம் தயாரிக்க, இசையமைப்பாளர் ஜிப்ரான் இசையமைத்துள்ளார்.
நகைச்சுவையான திரைக்கதையில் தமிழ் திரைப்பட ரசிகர்கள் குடும்பங்களோடு ரசிக்கும் வண்ணத்தில் உருவாகியுள்ள இப்படத்தில் ஒளிப்பதிவாளர் ஜகோப் ரத்தினராஜ் ஒளிப்பதிவு செய்ய, படத்தொகுப்பாளர் பாரதி எம் எஸ் எடிட்டிங் செய்துள்ளார்.
80ஸ் பில்டப் திரைப்படம் 2023 நவம்பர் 24ல் திரையரங்கில் வெளியாகியுள்ளது. இப்படத்திற்கு தமிழக திரைப்பட தணிக்கை குழு 'யு' சான்றிதழ் அளித்துள்ளது.
80ஸ் பில்டப் திரைப்படத்தின் கதை
கதைக்கரு: கமல்ஹாசனின் தீவிர ரசிகனான சந்தானம், கமலின் புதிய படத்தை காண தியேட்டர் செல்லும் நேரத்தில் அவரது தாத்தா ஆர் சுந்தர்ராஜன் தீடிரென இறக்கிறார். இதனால் சந்தானம் படம் பார்க்க முடியாமல் போகிறது. எப்படியாவது கமல் படத்தை பார்க்க துடிக்கும் சந்தானத்திற்கும் வீட்டில் உள்ளோருக்கு இடையே நடக்கும் நகைச்சுவை படலங்கள் தான் இந்த 80ஸ் பில்டப் திரைப்படத்தின் மையக்கதை.
80ஸ் பில்டப் படம் பற்றிய தகவல்கள்
2023 ஆம் ஆண்டு வெளியாகியுள்ள 80ஸ் பில்டப் திரைப்படம், சந்தானம் நடிப்பில் இந்த ஆண்டு வெளியாகும் 3வது படமாகும். டிடி ரீட்டர்ன்ஸ், கிக் படங்களை தொடர்ந்து இப்படம் தற்போது தமிழ் சினிமாவில் வெளியாகியிருக்கிறது.
தமிழ் சின்னத்திரை நடிகையான ராதிகா ப்ரீத்தி இப்படத்தில் நாயகியாக நடித்துள்ளார். 2019 ஆம் ஆண்டு எம்பிரான் படத்தில் நடித்து தனது வெள்ளித்திரை பயணத்தை தொடங்கியுள்ளார்,ராதிகா ப்ரீத்தி. இவர் சின்னத்திரையில் சன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான 'பூவே உனக்காக' தொடரில் நாயகியாக நடித்துள்ளார்.
மன்சூர் அலிகான், மொட்டை ராஜேந்திரன், ஆனந்த் ராஜ், மனோபாலா, மயில்சாமி, ஆர் சுந்தரராஜன், கே எஸ் ரவிக்குமார், முனீஷ்காந்த் ராமதாஸ் என தமிழ் நடிகர் - நடிகைகள் பட்டாளமே இப்படத்தில் நடித்து அசதியுள்ளனர். இப்படத்தில் நடிகர் சந்தானம் 'உலகநாயகன்' கமல் ஹாசனின் தீவிர ரசிகனாக நடித்துள்ளார்.