ஆகம் கதை

  ஆகம் தமிழ் திரையுலகில் டாக்டர் அப்துல் காலமின் கனவிற்கு சமர்ப்பணம் செய்யும் வகையில் எடுக்கப்பட்ட திரைப்படம். இத்திரைப்படத்தை விஜய் ஆனந்த் ஸ்ரீராம் இயக்க, இர்பான், ஜெயப்ரகாஷ், ரியாஸ் கான், தீக்ஷிதா மற்றும் பலர் நடித்துள்ளனர். இப்படத்திற்கு இசையமைத்துள்ளார் விஷால் சந்திரசேகர்.

  கதை : 

  ஒரு நடுத்தரவர்க்க குடும்பத்தில் பிறந்த இரண்டு மகன்களிடமிருந்து கதை ஆரம்பிக்கின்றது.மூத்த மகன் ரவி ராஜா ஒரு சராசரி படித்த பட்டதாரி. எப்படியாவது வெளிநாட்டிற்கு சென்றுவிட வேண்டும் என்று முயற்சிக்கின்றார். ஆனால், இளைய மகன் சாய் (இர்பான்) நல்ல திறமையுள்ள இளைஞன் மற்றும் இந்தியாவில் படித்து விட்டு வெளிநாடு செல்லும் பட்டதாரிகளை தடுத்து நிறுத்துவதற்காகவே, இந்தியாவிலேயே தகுதியான வேலை வாங்கித் தருவதற்கென்றே , DQIM – Dont Quit India Movement என்ற அமைப்பை நடத்துகிறார். 

  ஆனால், சாயின் அண்ணன் வெளிநாட்டில் சென்று நல்ல சொகுசான வாழ்கையை வாழ ஆசைப்படுகின்றார். சாய்,  இந்தியாவில் பிறந்து  படிப்பறிவு பெற்று வளரும் இந்திய மூளைகள்  இந்தியாவுக்கே பயன்படவேண்டும் என்ற முடிவில் திட்டவட்டமாக செயல்படுகிறார். 

  இதற்கிடையில், சாய்க்கும் அவரது சிறு வயது தோழி ஜெயஸ்ரீக்கும் காதல் மலர்கிறது. மற்றொருபுறம், சாயின் அண்ணனுக்கும் வெளிநாட்டில் பணிபுரியும் தீக்ஷிதா என்பவருக்கும் காதல் மலர்கிறது. 

  இந்திய பட்டதாரிகளை வெளிநாட்டிற்கு அனுப்பி வைத்து அதன் மூலம் கிடைக்கும் டாலரில் குளிக்கும் ஏஜன்ட் ரியாஸ் கான் சாயின் அண்ணன் வெளிநாடு செல்ல முப்பது லட்சம் கேட்கிறார். சாய் DQIM என்ற அமைப்பை நடத்தும் நிலையில், அவருக்கு தெரியாமல், சாயின் அண்ணனுக்கு பணத்தை ஏற்பாடு செய்கிறனர் அவர்களது தாயும், தந்தையும். 

  சாய்க்கு தெரியாமல் வெளிநாடுக்கு செல்லும் அவரது அண்ணனை போலி சான்றிதழ் காரணமாக கைது செய்கிறது அந்நாட்டு அரசு. அச்சமயத்தில், மற்றவர்களுக்கு வெளிநாடு செல்லவேண்டாம் என்று கூறிவிட்டு, தன் அண்ணனை மட்டும் வெளிநாட்டிற்கு சாய் அனுப்பியுள்ளார் என மற்ற பட்டதாரிகள் கோவம் கொண்டு சாயின் அலுவலகத்தை அடித்து நொறுக்குகின்றனர்.

  மற்றொருபுறம் இந்தியாவை வல்லரசாக்க வேண்டும் என்ற எண்ணத்தோடு செயல்படும் ஜெயபிரகாஷ், இந்திய இளைஞர்களுக்கு இந்தியாவிலேயே நல்ல வேலை மற்றும் தொழில் வாய்ப்ப்பு கொடுத்தால் அவர்கள் வெளிநாடு போவதைத் தடுக்கலாம் என்று திட்டமிட்டு, அதற்காக ஓர் ஆராய்ச்சி செய்கிறார். 

  இந்த திட்டம் நிறைவேற முப்பது கோடி வரை தேவைப்பட்டது. ஆனால், பணம் இல்லாததால் அவரால் செயல்படுத்த முடியவில்லை. இந்த திட்டத்தை அறிந்த மனித வளத்துறை அமைச்சர் ஆச்சார்யா (ஒய் ஜி மகேந்திரன்)  அதை நூறு கோடி ரூபாய் திட்டம் என்று சொல்லி அரசிடம் சமர்ப்பித்து தான் எழுபது கோடி ரூபாயை ஊழல் செய்ய திட்டமிடுகின்றார்.

  அவரது மகன் ஜூனியர் ஆச்சார்யா அந்த திட்டத்தை அயல்நாட்டுக்கு விற்று 5000 கோடி சம்பாதிக்க திட்டமிடுகிறார். அதோடு  ஜெயபிரகாஷ் மற்றும் அவரது உதவியாளர் இந்திரஜித் (இயக்குனர் டாக்டர் விஜய் ஆனந்த் ஸ்ரீராம் ) ஆகியோரிடம் பழகி நன்மதிப்பை பெறுகிறார். ஆனால், இந்திரஜித்திற்கு ஜூனியர் ஆச்சார்யா மீது சந்தேகம் எழ, கண்காணிக்க தொடங்குகிறார்.

  இந்த நிலையில் ஜெயபிரகாஷ் மற்றும்  இந்த்ரஜித் இருவரும் ‘வல்லரசு இந்தியா’  என்ற ஆராய்ச்சிக் குறிப்புகளை ஒரு நவீன விஞ்ஞான காப்பகத்தில் வைக்கின்றனர் . மேலும் அதை திறக்கும் பாஸ்வேர்டு ரகசியம் ஜெயபிரகாஷ்,  இந்த்ரஜித், ஜூனியர் ஆச்சார்யா மூவருக்கு மட்டுமே தெரியும். 

  ஒரு நாள் ஆச்சார்யா வீட்டுக்கு வருமான வரித்துறை ரெய்டு வர இருப்பதாகத் தகவல் வர,  ஜெயபிரகாஷ்க்கும் இந்திரஜித்துக்கும் தெரியாமல் ஆச்சார்யாவின் கறுப்புப் பணம்  உள்ளிட்ட  விவரங்களை, ஆராய்ச்சி காப்பகத்தில் மறைத்து வைக்கிறார் ஜூனியர் ஆச்சார்யா.

  இதற்கிடையில், எந்த சாவியோ பாஸ்வேர்டோ ரேகையோ விழித்திரை அடையாளமோ இன்றி, மூளை மற்றும் சிந்தனையின் சக்தி கொண்டு  பெட்டகங்களை திறக்கவும் மூடவும் செய்வது முதல் பல்வேறு வியப்பூட்டும் செயல்களை செய்ய வைக்கும், brain mapping (மூளை வரைவு) என்ற தொழில் நுட்பத்தை கொண்டு வருகிறார்கள் ஜெயபிரகாசும் இந்திரஜித்தும் . அது ஜூனியர் ஆச்சார்யாவுக்குத்  தெரியாது.

  ஒரு வாகான சந்தர்ப்பத்தில் பதுக்கிய பணத்தையும் புராஜக்ட கோப்பையும் ஜூனியர் ஆச்சார்யா எடுக்கப் போகிறார். ஆனால்  brain mapping காரணமாக அவரால் எடுக்க முடியாமல் போகிறது. இதனால் கோவம் கொண்டு ஜெயப்ரகாஷ் மற்றும் அவரது உதவியாளர் இந்திரஜித்தையும் கொல்ல முற்படும் போது இருவரும் தப்பி விடுகின்றனர்.

  இதனால், அந்த ஆராயிச்சிக் குறிப்புகளை வெளிநாட்டிற்கு விற்கமுடியாமல் போகின்றது ஜூனியர் ஆச்சர்யாவிர்க்கு. இவர்தான் சாயின் அண்ணனை வெளிநாட்டிற்கு அனுப்பிவைத்ததும். 

  இந்த ஆராய்ச்சிக்கும் சாய்க்கும் இருக்கும் தொடர்பு என்ன? அந்த ஐநூறு கோடிக்கு விற்க்கப்படவேண்டிய ஆராய்ச்சி குறிப்புகள் என்ன ஆனது? சாய் தன் அண்ணனை காப்பாற்றினாரா? இறுதியில் இவர்களது வல்லரசு திட்டம் நிறைவேறியதா..? என்பதே விறுவிறுப்பான மீதிக்கதை. 
  **Note:Hey! Would you like to share the story of the movie ஆகம் with us? Please send it to us (popcorn@oneindia.co.in).