கேப்டன் இயக்குனர் சக்தி சௌந்தர் ராஜன் இயக்கத்தில் ஆர்யா, ஐஸ்வர்யா லட்சுமி, சிம்ரன் என தமிழ் திரைப்பட நட்சத்திரங்கள் பலர் நடித்திருக்கும் அறிவியல் புனைவு திரைக்கதையில் உருவாகியுள்ள திரில்லர் திரைப்படம். இப்படத்தினை நடிகர் ஆர்யா தனது 'தி ஷோ பீபில்' என்ற தயாரிப்பு நிறுவனத்தின் மூலம் தயாரிக்க, இசையமைப்பாளர் டி இமான் இசையமைத்துள்ளார்.
தமிழ் திரைப்பட ரசிகர்கள் ரசிக்கும் வண்ணத்தில் ஏலியன்ஸ் போன்ற உயிரினங்களை கொண்டு ஒரு அறிவியல் புனைவு சார்ந்த படமாக திரில்லர் & அதிரடி திரைக்கதையில் உருவாகியுள்ள இப்படத்திற்கு ஒளிப்பதிவாளர் எஸ் யுவா ஒளிப்பதிவு செய்ய, படத்தொகுப்பாளர் பிரதீப் ஈ ராகவ் எடிட்டிங் செய்துள்ளார்.
இப்படத்திற்கு தமிழக திரைப்பட தணிக்கை குழு 'யு/ஏ' சான்றிதழ் அளித்துள்ளது. கேப்டன் திரைப்படம் 2022, செப் 8ல் உலகமுழுவதும் திரையரங்குகளில் வெளியாகியுள்ளது. இப்படத்தினை தமிழகம் முழுவதும் தமிழ் திரைப்பட நடிகரும், தயாரிப்பாளருமான உதயநிதி ஸ்டாலின் தனது 'ரெட் கெய்ன்ட் மூவிஸ்' தயாரிப்பு நிறுவனத்தின் மூலம் விநியோகம் செய்துள்ளார்.
கேப்டன் படத்தின் கதை
எப்படிப்பட்ட எதிரியாக இருந்தாலும் கேப்டன் வெற்றிச்செல்வன் (ஆர்யா) டீம் அதை முறியடித்து விடும். அப்படிப்பட்ட டீமுக்கு செக்டர் 42ல் என்ன நடக்கிறது என்பதை கண்டு பிடிக்கும் டாஸ்க் கொடுக்கப்படுகிறது. ஏனென்றால், அங்கே போனவர்கள் யாரும் திரும்பி வரவில்லை என்பது தான். அப்படி அங்கு என்ன இருக்கிறது என்பதை கண்டறிய செல்லும் ஆர்யாவின் டீம் minotaur எனும் ஒரு வகையான பிரேட்டரிடம் சிக்கிய நிலையில் தப்பித்ததா? இல்லையா? அந்த உயிரினம் அங்கு வர என்ன காரணம் என்பது தான் கேப்டன் படத்தின் கதை.
கேப்டன் திரைப்படத்தின் பிரத்யேக தகவல்கள்
கேப்டன் திரைப்படத்திற்கு முன்னர், இப்படத்தின் இயக்குனர் சக்தி சௌந்தர் ராஜன் - ஆர்யா கூட்டணியில் உருவான டெடி திரைப்படம் தமிழ் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பு பெற்று ஹிட் அடித்துள்ளது. டெடி திரைப்படம் 2021 ஆம் ஆண்டு நேரடி ஓடிடி படமாக 'டிஸ்னி பிளஸ் ஹாட்ஸ்டார்' ஓடிடி செயலியில் ஸ்ட்ரீமிங் செய்யப்பட்டது.
டெடி படத்தின் வெற்றிக்கு பின்னர், மீண்டும் இதே கூட்டணி அமைந்துள்ளது. இப்படம் நடிகர் ஆர்யா திரைவாழ்வில் இவர் நடிக்கும் 33வது திரைப்படமாகும்.
இப்படத்தின் தலைப்பு & அறிவிப்புகள் அதிகாரப்பூர்வமாக 2021, நவம்பர் 18ல் வெளியானது. டெடி, சர்பட்டா பரம்பரை போன்ற வெற்றி படைப்புகளுக்கு பின்னர் வெளியாகும் ஆர்யாவின் இப்படத்திற்கு ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பு உள்ளது.
இப்படத்தில் நடிகை ஐஸ்வர்யா லட்சுமி முன்னணி கதாபாத்திரத்தில் நடிக்க, சிம்ரன், கோகுல் நாத், மாளவிகா அவினாஷ், ஆதித்ய மேனன் என பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். இப்படத்தின் டிரைலர் மற்றும் பாடல்கள் வெளியாகி தமிழ் திரைப்பட ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்று பிரபலமாகியுள்ளது.
இப்படத்தின் தொலைக்காட்சி மற்றும் ஓடிடி ஸ்ட்ரீமிங் உரிமையை ஜீ நிறுவனம் பெற்றுள்ளது.