தா தா 87 இயக்குனர் விஜய் ஸ்ரீ இயக்கத்தில் சாருஹாசன், சரோஜா மற்றும் ஜனகராஜ் நடிக்கும் அதிரடி திரைப்படம். இத்திரைப்படத்தினை தயாரிப்பாளர் வேணு ரவிச்சந்திரன் தயாரிக்க, இசையமைப்பாளர் லியாண்டர் லீ மார்ட்டி இசையமைத்துள்ளார்.
இத்திரைப்படம் 1988-ம் ஆண்டு வெளிவந்த கமல்ஹாசன், அமலா நடித்திருக்கும் சத்யா திரைப்படத்தின் தொடர்ச்சி ஆகும், மேலும் கமலஹாசனுக்கு பதில் சாருஹாசனும், அமலாவுக்கு பதில் சரோஜா நடித்திருக்கின்றனர், இத்திரைப்படத்தின் நாயகி சரோஜா அவர்கள் நடிகை கீர்த்தி சுரேஷின் பாட்டி ஆகும்.
கதை
வடசென்னையின் ஒரு ஹவுசிங்போர்டு குடியிருப்பு பகுதியில் ரோட் சைட் ரோமியோவாக சுற்றி திரிபவர் ஜொள்ளு பாண்டி (ஆனந்த் ரவி). அதனால் இவரை கண்டாலே தெறித்து ஓடுகிறார்கள் பெண்கள். அப்போது அந்த குடியிருப்புக்கு புதிதாக குடி வருகிறார் ஜனகராஜின் மகள் ஜெனி (ஸ்ரீ பல்லவி). ஜெனியை கண்டதும் காதலில் விழுகிறார் பாண்டி. அவரை சுற்றிச் சுற்றி வந்து தொந்தரவு கொடுக்கும் பாண்டியை, போலீசில் மாட்டிவிடுகிறார் ஜனகராஜ்.
அந்த ஹவுசிங்போர்டு குடியிருப்பு பகுதியில் போட்டி போட்டு சட்டவிரோத தொழில்களை செய்து வருகிறார்கள் எதிர்கோஷ்டியான பாலாசிங்கும், மணிமாறனும். இவர்களை எப்படியாவது காலி செய்ய வேண்டும் என துடிக்கிறார் எம்.எல்.ஏ மனோஜ்குமார். ஆனால் இவர்கள் எல்லோரும் பயப்படுவது ஒரேயொருவருக்குதான். 87 வயதான ஏரியா தாதா சத்யா (சாருஹாசன்). ஒரு கட்டத்தில் இவர்கள் எல்லோரும் சேர்ந்து ஜொள்ளு பாண்டியை போட்டு தள்ளப்பார்க்கிறார்கள். அவர் தப்பி பிழைத்தாரா? ஜெனியுடனான காதல் என்னானது என்பது தான் படம்.