களவாணி மாப்பிளை தமிழ் நகைச்சுவை காதல் திரைப்படம். இத்திரைப்படத்தினை காந்தி மணிவாசகம் இயக்க, தினேஷ் மற்றும் அதிதி மேனன் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளனர்.
கதை :
தொழிலதிபர் தேவயானிக்கு தமிழில் பிடிக்காத வார்த்தை பொய். கார் ஓட்ட தெரியாததை மறைத்து தன்னிடம் பொய் சொன்னதற்காக கணவர் ஆனந்தராஜையே ஓரங்கட்டி டம்மி பீஸாக வைத்திருக்கும் அளவுக்கு கறார்காரர். இவருடைய மகள் அதிதி மேனன் எதிர்பாராத விதமாக நாயகன் தினேஷ் மீது காதலில் விழுகிறார். ஆனால் தினேஷுக்கு வாகன தோஷம் இருப்பதால், டூவிலர், ஃபோர் வீலர் என எதையும் ஓட்டத்தெரியாது. இதனால் கிராமத்தில் ஆடு, மாடுகளை மட்டும் ஓட்டித் திரிகிறார்.
தனக்கு வண்டி ஓட்டத் தெரியாது என்பதை மாமியார் தேவயானியிடம் மறைத்து, காதலியை கரம்பிடிக்க முயல்கிறார் தினேஷ். தன்னை மதிக்காமல் நிச்சயிக்கப்படும் இந்த கல்யாணத்தை எப்படியாவது தடுத்து நிறுத்த வேண்டும் என அதிரிபுதிரி வேலைகள் செய்கிறார் மாமனார் ஆனந்த்ராஜ். கல்யாணம் நடக்கவும், தடுக்கவும் இருவரும் செய்யும் களவாணி வேலைகள் தான் படம்.