லால் சலாம் - இயக்குனர் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இயக்கத்தில் ரஜினிகாந்த், விக்ராந்த், விஷ்ணு விஷால், நிரோஷா என பல முன்னணி தமிழ் திரைப்பட நட்சத்திரங்கள் நடித்திருக்கும் திரைப்படம். இப்படத்தினை கிரிக்கெட் விளையாட்டை சார்ந்த திரைக்கதையில் வடிவமைத்து இயக்கியுள்ளார், இயக்குனர். லால் சலாம் படத்தினை தமிழ் திரைப்பட முன்னணி தயாரிப்பாளர் சுபாஷ்கரன் தனது 'லைக்கா புரொடக்ஷன்ஸ்' நிறுவனத்தின் மூலம் தயாரிக்க, இசையமைப்பாளர் ஏ ஆர் ரஹ்மான் இசையமைத்துள்ளார்.
சமூக கருத்துகள் உள்ளடக்கிய ஒரு ஜனரஞ்சகமான படமாக லால் சலாம் படம் உருவாகியுள்ளது. இப்படத்திற்கு ஒளிப்பதிவாளர் விஷ்ணு ரங்கசாமி ஒளிப்பதிவு செய்ய, படத்தொகுப்பாளர் பிராவின் பாஸ்கர் எடிட்டிங் செய்துள்ளார்.
லால் சலாம் திரைப்படம் 2024 பிப்ரவரி 9ல் உலகமெங்கும் பல மொழிகளில் டப்பிங் செய்யப்பட்டு வெளியாகிறது. இப்படத்திற்கு தமிழக திரைப்பட தணிக்கை குழு 'யு/ஏ' சான்றிதழ் அளித்துள்ளது.
லால் சலாம் திரைப்படத்தினை லைக்கா புரொடக்ஷன்ஸ் நிறுவனம் தயாரிக்க, இப்படத்தினை ரெட் ஜெயண்ட் மூவிஸ் நிறுவனம் மூலம் தமிழ் சினிமா நடிகர் மற்றும் தமிழக அரசியல்வாதி திரு. உதயநிதி ஸ்டாலின் விநியோகம் செய்துள்ளார்.
லால் சலாம் திரைப்படத்தின் டிஜிட்டல் ஸ்ட்ரீமிங் உரிமையை நெட்ப்ளிக்ஸ் நிறுவனம் கைப்பற்றியுள்ள நிலையில், இப்படத்தின் தொலைக்காட்சி ஒளிபரப்பு உரிமையை சன் டிவி நிறுவனம் கைப்பற்றியுள்ளது.
லால் சலாம் திரைப்படத்தின் கதை
கதைக்கரு: பல வழிகளில் நாட்டில் மத சண்டை ஏற்பட்டு வரும் நிலையில், குழந்தைகள் மற்றும் மாணவர்களின் விளையாட்டில் மத சண்டையை ஆரம்பித்து அரசியல் செய்யும் சிலரை எதிர்ப்பதே லால் சலாம் படத்தின் கதைக்கரு.
கதை
கிரிக்கெட், மதம், அரசியல், ஊரில் நடக்கும் தேர் திருவிழா, ஊருக்குள் நடக்கும் மதக்கலவரம், அதன் மூலம் நடத்தப்படும் மதநல்லிணக்க பாடம் என இந்த கதையை உருவாக்கி இருக்கிறார் ஐஸ்வர்யா ரஜினிகாந்த். விஷ்ணு விஷால் மற்றும் விக்ராந்த் இடையே சிறுவயதில் இருந்தே மோதல்கள் இருந்து வருகிறது. இஸ்லாமியரான விக்ராந்த் மீது இந்து மதத்தை சேர்ந்த விஷ்ணு விஷால் கோபம் கொள்வது போன்ற காட்சிகள் குறியீடாக வைக்கப்பட்டது போலவே திரைக்கதை அமைந்துள்ளது.
ஊரில் உள்ள 3ஸ்டார் அணி கிரிக்கெட் டீமில் விளையாடி வெற்றிப் பெற்று வரும் விஷ்ணு விஷால் இன்னொரு டீமில் சேர்ந்து விடுகிறார். அதன் பின்னர் அந்த டீம் தான் வெற்றி பெறுகிறது. 3ஸ்டார் அணியை வெற்றி பெற வைக்க விக்ராந்தை அந்த அணியில் சேர்க்கின்றனர். சிறு வயதில் இருந்தே விஷ்ணு விஷாலுக்கும் விக்ராந்துக்கும் ஆகாத நிலையில், விக்ராந்த் தனக்கு எதிராக ஆடுவது விஷ்ணு விஷலுக்கு பிடிக்கவில்லை. இவர்களுக்குள் நடக்கும் சண்டையை சிலர் பயன்படுத்தி பிரச்சனையை பெரிதுபடுத்த முயலும் போது, தனது மகனுக்கு எதிராக விஷ்ணு விஷால் ஏன் இப்படி நடந்துக் கொள்கிறார் அதே பிரச்சனையுடன் ஊர் மக்கள் ஏன் சண்டை போடுகின்றனர். இது தப்பாச்சே என மொய்தீன் பாய் பாடம் நடத்துவது தான் இந்த படத்தின் கதை.