Tamil»Movies»O2»Story

  ஓ2 (O2) கதை

  ஓ2 (O2) இயக்குனர் ஜி எஸ் விக்னேஷ் இயக்கத்தில் நயன்தாரா, ரித்விக் முன்னணி கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் திரைப்படம். இப்படத்தினை பிரபல தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் எஸ் ஆர் பிரபு மற்றும் எஸ் ஆர் பிரகாஷ் பாபு இணைந்து 'ட்ரீம் வாரீர் பிக்சர்ஸ்' மூலம் தயாரிக்க, இசையமைப்பாளர் விஷால் சந்திரசேகர் இசையமைத்துள்ளார்.

  இப்படத்தினை ஒளிப்பதிவாளர் தமிழ் எ அழகன் ஒளிப்பதிவு செய்ய, படத்தொகுப்பாளர் செல்வா எடிட்டிங் செய்துள்ளார். இத்திரைப்படம் 'டிஸ்னி பிளஸ் ஹாட்ஸ்டார்' ஓடிடி செயலியில் நேரடியாக ஸ்ட்ரீமிங் செய்யப்பட்டுள்ளது.

  ஓ2 (O2) படத்தின் அதிகாரப்பூர்வமான அறிவுப்பு 2022 மே 06 படக்குழு சார்பில் இணையதள ட்விட்டர் பக்கத்தில் வெளியிடப்பட்டது.

  ஓ2 (O2) படத்தின் கதை

  சுவாச நோயால் கணவரை இழந்தவரான பார்வதி (நயன்தாரா), சிறு வயதிலேயே சுவாச நோயால் பாதிக்கப்பட்டு, உயிருக்கு போராடும் 8 வயது மகன் வீரா (ரித்விக்) உடன் வாழ்ந்து வருகிறார். ஆக்சிஜன் சிலிண்டரின் உதவியுடன் உயிர் வாழும் சிறுவன். ஒவ்வொரு 100 நிமிடங்களுக்கு ஒரு முறை சிலிண்டர் மாற்றி ஆக வேண்டும். இதனால் ஆக்சிஜன் சிலிண்டரை போகும் இடமெல்லாம் கொண்டு செல்கிறார்கள். மகனின் ஆப்பரேஷனுக்காக ஆம்னி பஸ்சில் கோவையில் இருந்து கொச்சி செல்கிறார்.

  அதே பஸ்சில், அப்பாவின் எதிர்ப்பை மீறி ஒன்று சேர பிளான் செய்யும் ஒரு காதல் ஜோடி, செய்யாத குற்றத்திற்காக 14 வருட சிறை தண்டனை அனுபவித்து விட்டு தனது தாயை பார்க்க ஊருக்கு திரும்பும் ஒருவர், உதவியாளருடன் செல்லும் முன்னாள் எம்எல்ஏ, போதைப் பொருளை கடத்திச் செல்லும் போலீஸ் ஆகியோர் பயணம் செய்கிறார்கள். வழியில் டிராபிக் ஜாம் காரணமாக வழக்கமான வழியில் செல்ல முடியாமல், பாலக்காடு செல்லும் பயணிகளை மட்டும் வழியில் இறக்கி விட்டு விட்டு, கொச்சி செல்லும் 8 பேருடன் மலைப்பாதையில் செல்கிறது பஸ்.

  வழியில் பாறை விழுந்து கிடப்பதால் மீண்டும் பஸ்சை ரிவர்ஸ் எடுக்க முயற்சிக்கும் போது அங்குள்ள மோசமான மண்ணின் தன்மை காரணமாக பெரும் நிலச்சரிவு ஏற்படுகிறது. இதில் நயன்தாரா உள்ளிட்டோர் வந்த பஸ் மண்ணிற்குள் புதைகிறது. பஸ்சில் இருந்து வெளியே தப்பிக்க எடுக்கும் அத்தனை முயற்சிகளும் தோல்வியில் முடிகிறது. நயன்தாராவிற்கு போன் செய்யும் அவரது தம்பி மற்றும் பஸ்சை தவற விட்ட பயணி ஒருவர் கொடுக்கும் தகவலின் அடிப்படையில் மண்ணிற்குள் புதைந்த பஸ்சை தேடும் மீட்புப் பணியினரின் முயற்சியும் தோல்வியை சந்திக்கிறது.

  ஒரு கட்டத்தில் பஸ்சிற்குள் ஆக்சிஜன் அளவு குறைய துவங்கி, அனைவரும் உயிருக்காக போராடுகிறார்கள். சிறுவன் வீராவிடம் இருக்கும் ஆக்சிஜன் சிலிண்டரை வைத்து தங்கள் உயிரை காப்பாற்றிக் கொள்ள அனைவரும் நினைக்கிறார்கள். ஆனால் நயன்தாரா தனது மகனை காப்பாற்ற போராடுகிறார். மண்ணிற்குள் புதைந்த பஸ்சில் சிக்கியவர்கள் தப்பினார்களா, அவர்களுக்கு ஆக்சிஜன் கிடைத்ததா, நயன்தாராவின் தாய் பாசம் வென்றதா, பஸ்சில் சிக்கியவர்களுக்கு என்ன நடந்தது என்பது தான் படத்தின் மீதிக்கதை.
  **Note:Hey! Would you like to share the story of the movie ஓ2 (O2) with us? Please send it to us (popcorn@oneindia.co.in).