புஷ்பா - தி ரைஸ், இயக்குனர் சுகுமார் இயக்கத்தில் அல்லு அர்ஜுன், ரஷ்மிக மந்தனா, பஹத் பாஸில் முன்னணி கதாபாத்திரத்தில் நடிக்கும் அதிரடி - திரில்லர் திரைப்படம். இப்படத்தினை தயாரிப்பாளர் நவீன் தயாரிக்க, இசையமைப்பாளர் தேவி ஸ்ரீ பிரசாத் இசையமைத்துள்ளார்.
ஒரு அதிரடி திரில்லர் திரைக்கதையில் கேங்ஸ்டர் படமாக உருவாகியுள்ள இப்படத்திற்கு ஒளிப்பதிவாளர் மிரோஸ்லாவ் குபா ஒளிப்பதிவு செய்ய, படத்தொகுப்பாளர் ரூபன் மற்றும் கார்த்திகா ஸ்ரீனிவாஸ் எடிட்டிங் செய்துள்ளனர்.
ஒரு பான் இந்தியா படமாக 'புஷ்பா - தி ரைஸ்' திரைப்படம் உலகமுழுவதும் 2021 டிசம்பர் 17ல் வெளியாகி பெரிய வரவேற்பினை பெற்று பிரபலமாகியுள்ளது. இப்படத்தின் தொடர்ச்சியாக 'புஷ்பா - தி ரூல்' திரைப்படம் 2022 ஆம் ஆண்டு வெளியாகும் என படக்குழுவினர் கூறியுள்ளனர்.
புஷ்பா - தி ரைஸ் திரைப்படத்தின் கதை
தெலுங்கானாவில் உள்ள சித்தூர் பகுதியில் செம்மரக் கடத்தல் அதிகம் நடைபெறுகிறது. அந்த கடத்தல் கும்பலின் தலைவரான அஜய் கோஷ் பல குற்றங்களை செய்து வருகிறார். அவரிடம் ஒரு சாதாரண கூலியாக பணிக்கு சேரும் நாயகன் அல்லு அர்ஜுன் படிப்படியாக உயர்ந்து தலைவரின் பார்ட்னராக மாறுகிறார்.
ஒரு கட்டத்தில் போட்டி மற்றும் பொறாமை காரணத்தால் அல்லு அர்ஜுனுக்கு பிரச்சனைகள் கிளம்புகிறது. பின் பல சிக்கல்கள் உண்டாகி அதிலிருந்து நாயகன் எவ்வாறு தப்பித்தார் என்பதே புஷ்பா முதல் பாகத்தின் கதை.