வீரா தமிழ் காதல் மற்றும் அதிரடித் திரைப்படம். இத்திரைப்படத்தை ராஜாராமன் இயக்க, கிருஷ்ணா, ராஜேந்திரன், யோகி பாபு, கருணாகரன் ஆகியோர் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளனர்.
கதை :
வட சென்னைப் பகுதிகளில் காலங்காலமாக நிலவும் ஆதிக்கப்போட்டியும், அதனால் எளிய மனிதர்களுக்கு விளையும் தீமைகளையும், அதிகார வர்க்கத்தினரின் கைதேர்ந்த அரசியலையும் பற்றிப் பேசும் படமாக வந்திருக்கிறது 'வீரா'. மாவட்டத் தலைவருக்கு நெருக்கமானவராக இருக்கும் கண்ணா ரவி குறிப்பிட்ட ஏரியாவில் மன்றத் தலைவராக இருக்கிறார். அவருக்கு இருக்கும் மரியாதையைப் பார்த்து, தாங்கள் ஏன் அந்த இடத்திற்கு வரக்கூடாது என நெருங்கிய நண்பர்களான கிருஷ்ணாவும், கருணாகரணும் நினைக்கிறார்கள்.
இதற்கிடையே அந்த ஏரியாவில் டானாக இருக்கும் ஆடுகளம் நரேனுடனான முன்பகையால் ஒருவர் அவரது பெண்ணைக் கடத்திக் கொண்டுபோய் திருமணம் செய்வேன் எனச் சவால் விடுகிறார். அந்த ரௌடியிடம் இருந்து தனது பெண்ணைக் காப்பாற்ற பெரும் பாதுகாப்பு ஏற்பாடுகளைச் செய்திருக்கிறார் ஆடுகளம் நரேன். அந்தப் பெண்ணை கிருஷ்ணாவும் காதலிக்கிறார். நாயகன் கிருஷ்ணா, நாயகியின் அப்பாவான நரேன் மற்றும் நாயகியை திருமணம் செய்துகொள்ளத் துடிக்கும் இன்னொரு ரௌடி இருவரையும் சமாளித்து, தான் காதலிக்கும் பெண்ணை அடைந்தாரா, மன்றத் தலைவராகி அதிகாரத்தைக் கைப்பற்றினாரா என்பதுதான் கதை.