அப்பா கதை

  அப்பா சமுத்திரகனி தானே இயக்கி நடிக்கும் திரைப்படம். இத்திரைப்படத்திற்கு இசைஞானி இளையராஜா இசையமைத்துள்ளார். சாட்டையின் இரண்டாம் பாகமாக கருதப்படும் இத்திரைப்படத்திற்கு கதாநாயகி இல்லை.

  கதை : 

  இக்கதை மூன்று குடும்பங்களில் வித்தியாசமான சூழலில் வாழும் பெற்றோர்கள் மற்றும் அவர்களின் குழந்தைகளை மையப்படுத்தி உருவாக்கப்பட்டுள்ளது. சமுத்திரக்கனியின் மகனாக விக்னேஷ், தம்பி ராமையாவின் மகனாக ராகவ், நமோ நாராயணின் மகனாக நாஸத். இவர்கள் தான் கதையின் கருக்கள். 

  சமுத்திரக்கனி தன்மகனுக்கு, எது சரியென்று படுகிறதோ அதை அப்பா கிட்ட சொல்லாதே, நீயே முடிவெடு, எது தப்புன்னு தோணுதோ அதை மட்டும் அப்பா கிட்ட சொல்லு என்று கூறி விக்னேஷிற்கு முழு சுதந்திரம் அளிக்கின்றார். ஆனால், சமுத்திரக்கனியின் மனைவிக்கு இதில் உடன்பாடு இல்லாமல், அடுத்தவருடன்நம்மை ஒப்பிட்டுப் பேசி தன் வாழ்க்கையைத் தானே கெடுத்துக்கொள்கிறார். “நீ சொல்ற அந்த நாலு பேருக்காக நாம் ஏன் வாழனும் நம்ம இஷ்டத்துக்குச் சந்தோஷமா வாழலாம்" என்று பலமுறை எடுத்துச் சொல்லியும் சமுத்திரகனியிடம் கோபித்துக் கொண்டு பிறந்த வீட்டுக்குச் சென்றுவிடுகிறார் மலர். அம்மாவின் அரவணைப்பு இல்லாத எந்தப் பிள்ளையும் உருப்படாது என்று கூறுவதை இப்படத்தில் உடைத்தெறிந்திருக்கிறார் சமுத்திரகனி. 

  நமோ நாராயணன் தன் மகன் நாசத்திற்கு "டேய் நாம எந்த வம்பு தும்புக்கும் போக கூடாதுடா, நாம் இருக்குற இடமே தெரியாமல் இருந்துக்கனும்" என்று சொல்லியே மட்டம் தட்டுகிறார். ஆனால், நாசத்திற்குக் கவிதை எழுதுவதில் நாட்டம் அதிகம். நாசத்தை ஊக்குவிக்கும் விதமாக, அவரின் கவிதை தொகுப்புகளை ஒரு பிரபலமான கவிஞருக்கு அனுப்புகிறார். அக்கவிதைத் தொகுப்புகளை புத்தகமாக "யார் உயரம்" என்று தலைப்பினை அப்புத்தகத்திற்குச் சூட்டி அதற்கு விழா எழுப்புகின்றார். அந்த நிகழ்ச்சியில் நாசத் பேசும் ஒவ்வொரு வசனமும் பிள்ளைகளின் தேவையை அறியாமல் மிஷின் போல வாழ்க்கை நடத்தும் ஒவ்வொரு அப்பனுக்கும் செருப்படியாக இருக்கும். "நான் உங்கள் வயித்துல பிறந்ததுக்கு பதிலா தயா அப்பா வயித்துல பொறந்திருந்தா வளர்ந்திருப்பேனோ என்னவோ" என்று சொல்லும் அந்தக் காட்சி அனைவரையும் கண்கலங்க வைக்கிறது. 

  மறுபுறம் தம்பி ராமையா, தன் ராகவை கருவிலிருந்தே தன் மகன் டாக்டர் என்று சொல்லியும், அவனை வெளிநாட்டிற்கு அனுப்பி அங்கேயே செட்டிலாகிவிட வைக்க வேண்டும். என்று கூறி கூறியே மகனைப் பாதி மெண்டல் ஸ்ட்ரஸுக்கு கொண்டு வந்துவிடுகிறார். தன் மகனுக்கு ஒரு பெண்ணின் மீது ஈர்ப்பு வந்தால் அதை எப்படிக் கையாளுவது என்பதை, சமுத்திரகனியும், தம்பி ராமைய்யாவும் எப்படிக் கையாள்கிறார் என்பதையும் அழகாக எடுத்துரைத்துள்ளார் கதையில். 

  சமுத்திரக்கனியிடம், "அப்பா எனக்கு அந்தப் பெண்ணை பார்க்கும்போது என்னவோ பண்ணுதுப்பா" என்று விக்னேஷ் கூறுவதும், அதற்கு அவர் நேரடியாக அந்தப் பெண்ணை சந்தித்து விக்னேஷுடன் நட்பு கொள்ள வைப்பதும் ஏன் என்ற கேள்வி எழுவதற்குள் அதற்கான பதிலையும் கூறிவிடுகிறார் சமுத்திரகனி “மனசுல எப்பவும் அழுக்கு சேரவே விடக்கூடாதுப்பா, அப்படி சேர்ந்துட்டா அதுவே பல தப்பான முடிவுகளை எடுக்க வச்சிடும்” என்று கூறுகிறார். 

  இறுதியில், பெற்றோர்கள் மற்றும் அவர்களின் அரவணைப்பில் வளரும் குழந்தைகளுக்கும் ஒரு நல்ல வாழ்க்கை பாடமாக அமைந்துள்ளது அப்பா திரைப்படம்.
  **Note:Hey! Would you like to share the story of the movie அப்பா with us? Please send it to us (popcorn@oneindia.co.in).