டியர் - இயக்குனர் ஆனந்த் ரவிச்சந்திரன் இயக்கத்தில் ஜி வி பிரகாஷ் குமார் & ஐஸ்வர்யா ராஜேஷ் முன்னணி கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் காதல் - நகைச்சுவை திரைப்படம். இப்படத்தினை தயாரிப்பாளர் வருண், அபிஷேக் ராமிசெட்டி தயாரிக்க, இசையமைப்பாளரும் இப்படத்தின் நாயகனுமான ஜி வி பிரகாஷ் குமார் இசையமைத்துள்ளார்.
காதல் மற்றும் குடும்ப பின்னணியில் உருவாகியுள்ள டியர் படத்திற்கு ஒளிப்பதிவாளர் ஜெகதீஷ் சுந்தரமூர்த்தி ஒளிப்பதிவு செய்ய, படத்தொகுப்பாளர் ருகேஷ் எடிட்டிங் செய்துள்ளார். இப்படத்தில் ஜி வி பிரகாஷ் - ஐஸ்வர்யா ராஜேஷ் உடன் இணைந்து காளி வெங்கட், ரோகினி, இளவரசு என பல தமிழ் சினிமா நட்சத்திரங்கள் நடித்துள்ளனர்.
டியர் திரைப்படம் தமிழ் - தெலுங்கு என இரு மொழி படமாக 2024 ஏப்ரல் 11ல் ரம்ஜான் பண்டிகை தினத்தை முன்னிட்டு உலகமெங்கும் வெளியாகிறது. இப்படத்திற்கு தமிழக திரைப்பட தணிக்கை குழு 'யு' சான்றிதழ் அளித்துள்ளது.
டியர் திரைப்படத்தின் கதை
கதைக்கரு - புதிதாக திருமணம் செய்துக் கொண்ட நாயகன் - நாயகி தங்களின் வாழ்க்கை தொடக்கத்திலையே குறட்டை காரணமாக பாதிக்கப்படுகின்றனர். தூக்கத்தில் நாயகி எழுப்பும் குறட்டை சத்தத்தால் நாயகனுக்கு ஏற்படும் பிரச்சனைகள் அதற்கான தீர்வை இவர்கள் எப்படி அறிகின்றனர், என்பதே இப்படத்தின் மையக்கதை.
சின்னதா ஒரு டிவி சேனலில் வேலை பார்த்து வரும் அர்ஜுன் (ஜி.வி. பிரகாஷ்) லேசா சத்தம் கேட்டாலும் எழுந்து விடும் பழக்கம் கொண்டவர். குன்னூரில் தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து வரும் தீபிகா (ஐஸ்வர்யா ராஜேஷ்) தூக்கத்தில் முரட்டுத்தனமாக குறட்டை விடும் பழக்கம் உடையவர். அதன் காரணமாகவே திருமணம் லேட்டாகி வருகிறது. பெரிய சேனலில் வேலைக்கு செல்ல வேண்டும் என துடித்துக் கொண்டிருக்கும் அர்ஜுன் தீபிகாவை திருமணம் செய்துக் கொண்ட பின்னர், தூங்க கூட முடியாமல் ஒரு கட்டத்தில் தனது வேலையையே இழக்கிறார். இதற்கு மேல் செட்டாகாது என நினைக்கும் அவர் தீபிகாவிடம் டைவர்ஸ் கேட்க, அதன் பின்னர் என்ன ஆனது என்பது தான் டியர் படத்தின் கதை.