ஜப்பான் - இயக்குனர் ராஜு முருகன் இயக்கத்தில் கார்த்தி, அனு இமானுவேல், கே எஸ் ரவிக்குமார், சுனில், ஜித்தன் ரமேஷ் என பல தமிழ் திரைப்பட நட்சத்திரங்கள் நடித்திருக்கும் அதிரடி - திரில்லர் & கிரைம் திரைப்படம். இப்படத்தினை தயாரிப்பாளர் எஸ் ஆர் பிரபு & எஸ் ஆர் பிரகாஷ் பாபு இணைந்து 'ட்ரீம் வாரியார் பிக்சர்ஸ்' நிறுவனத்தின் மூலம் தயாரிக்க, இசையமைப்பாளர் ஜி வி பிரகாஷ் குமார் இசையமைத்துள்ளார்.
தமிழ் திரைப்பட ரசிகர்களை குடும்பங்களோடு ரசிக்கும் திரைக்கதையில் ஒரு ஜனரஞ்சகமான படமாக உருவாகியுள்ள இப்படத்திற்கு ஒளிப்பதிவாளர் ரவி வர்மன் ஒளிப்பதிவு செய்ய, படத்தொகுப்பாளர் பிலோமின் ராஜ் எடிட்டிங் செய்துள்ளார்.
ஜப்பான் திரைப்படம் 2023 தீபாவளி பண்டிகை முன்னிட்டு உலகம் முழுவதும் திரையில் வெளியாகிறது. இப்படத்தின் தமிழக திரைப்பட தணிக்கை குழு 'யு/ஏ' சான்றிதழ் அளித்துள்ளது. இப்படம் நடிகர் கார்த்தியின் திரைவாழ்வில் இவர் நடிக்கும் 25வது திரைப்படமாகும்.
ஜப்பான் திரைப்படத்தின் கதை
கதைக்கரு: தன் தாயை காப்பாற்ற சிறுவயதில் திருட தொடங்கும் சிறுவன், எதிர்காலத்தில் மிகப்பெரிய திருடனாக பல அரசு அதிகாரிகள் மத்தியில் தேடப்படுகிறார். யார் இவர், இவரின் பின்னணி என்ன என்பது தான் இப்படத்தின் கதைக்கரு.
கதை:
கார்த்தி (ஜப்பான்) சிறுவயதில் இருந்து கொள்ளையடிப்பதில் கைதேர்ந்தவர். நகை கடைகளை ஓட்டை போட்டு கொள்ளையடித்து வருகிறார் என காவலர்களிடம் ஒரு ரிப்போர்ட் உள்ளது. இந்தியாவில் பல இடங்களில் கொள்ளையடித்துள்ள கார்த்தி, பல மாநில காவலர்களால் தேடப்பட்டு வருகிறார்.
கோவையில் உள்ள ராயல் தங்க கடையில் சுவரை உடைத்து ஓட்டை போட்டு சில 200 கோடி மதிப்புள்ள நகைகளை கொள்ளையடிக்கின்றனர். இதனை ஆராயும் காவலர்கள், இது ஜப்பான் திருட்டை போல் உள்ளது என ஜப்பான் தேட தொடங்குகின்றனர்.
ஒரு கட்டத்தில் போலீஸிடம் சிக்கும் நாயகன் கார்த்தி, இந்த திருட்டை செய்தது நான் இல்லை. வேறு ஒருவன் தன்னை இதில் மாட்டிவிட்டுள்ளார் என கூறுகிறார். உண்மையில் இந்த திருட்டை செய்வது யார்? கார்த்தி கூறும் அந்த நபர் யார்? கார்த்தி கொள்ளையடித்துள்ள நகைகள் எங்கே? என்பதே இப்படத்தின் கதை.
ஜப்பான் திரைப்படத்தின் பிரத்யேக தகவல்கள்
ஜப்பான் திரைப்படம் நடிகர் கார்த்தியின் திரைப்பயணத்தில் இவர் நடிக்கும் 25வது திரைப்படமாகும். இப்படத்தில் தேசிய விருதினை வென்ற ஜோக்கர் பட இயக்குனர் ராஜு முருகன் இயக்கியுள்ளார். இப்படம் ஒரு ஜனரஞ்சகமான படமாக அமைய பெரும் வாய்ப்புள்ளது.
ஜப்பான் படத்தின் ஆரம்ப காலத்தில் நடிகர் விஜய் சேதுபதி வில்லனாகவும், ராஷ்மிக நாயகியாக நடிக்கின்றனர் என பல தகவல்கள் வெளியானது, இறுதியில் இதனை மறுத்த படக்குழு நடிகை அனு இமானுவேல் நாயகியாக நடிக்கிறார் என அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிட்டது. இப்படத்தில் சுனில், கே எஸ் ரவிக்குமார், ஜித்தன் ரமேஷ், விஜய் மில்டன், வாகை சந்திரசேகர் என பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.
2020ல் ராஜு முருகன் - கார்த்தி கூட்டணி உறுதியாகினாலும், கார்த்தி நடித்த பொன்னியின் செல்வன் 1 & 2, சர்தார், விருமன் படங்களுக்கு பிறகு இப்படத்தின் படப்பிடிப்பை தொடங்கியுள்ளனர், படக்குழுவினர். இப்படத்தின் ஃபர்ஸ்ட் போஸ்ட்டரை படக்குழு சார்பில் 2022 நவம்பர் 14ல் வெளியிட்டனர், படக்குழுவினர்.
இசையமைப்பாளர் ஜி வி பிரகாஷ் குமார் இசையில் உருவாகியுள்ள ஜப்பான் திரைப்படம், பாடல்கள் & பின்னணி இசை என ரசிகர்களின் கவனத்தை கவர்ந்துள்ளது. இப்படத்திற்கு முன் ஜி வி பிரகாஷ் குமார் - கார்த்தி கூட்டணியில் ஆயிரத்தில் ஒருவன் (2010), சகுனி (2012), கொம்பன் (2015) & சர்தார் (2022) ஆகிய திரைப்படங்கள் உருவாகியுள்ளது.
ஜப்பான் திரைப்படம் 2023 தீபாவளி பண்டிகை முன்னிட்டு திரைக்கு வருகிற நிலையில், இப்படத்தோடு ஜிகர்தண்டா 2, ரெய்டு, கிடா என 3 படங்கள் வெளியாகியுள்ளது.