கன்னி மாடம் இயக்குனர் போஸ் வெங்கட் இயக்கத்தில் தயாரிப்பாளர் முஹம்மது ஹஸீர் தயாரிப்பில் உருவான காதல் மற்றும் குடும்பத் திரைப்படம். இத்திரைப்படத்தில் ஸ்ரீராம் கார்த்திக், சாயா தேவி, ஆடுகளம் முருகதாஸ், மைம் கோபி ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். இப்படத்திற்கு இசையமைப்பாளர் ஹரி சாய் இசையமைத்துள்ளார்.
கன்னி மாடம் படத்தின் கதை
சென்னையில் ஆட்டோ ஓட்டும் ஶ்ரீராமும் முருகதாஸும் உறவினர்கள். ஊரில் வசதியாக வாழ்ந்த இவர்கள் இங்கு ஆட்டோ ஓட்டுவதற்கு பின்னணியில், பிளாஷ்பேக் ஒன்று இருக்கிறது. ஒரு நாள் அதிகாலையில் ஶ்ரீராமின் ஆட்டோவில் ஏறுகிறார்கள், ஊரை விட்டுச் சென்னை வரும் காதல் ஜோடி விஷ்ணுவும் சாயாதேவியும். இருவரும் ஶ்ரீராம், முருகதாஸ் வீட்டின் அருகிலே குடி வருகிறார்கள். இதற்கிடையில், பணக்கார விஷ்ணுவை தேடி அவரது தாய்மாமாவும் அவர் ஆட்களும் சென்னை வருகிறார்கள். சாயாதேவியை கொன்று விட்டு, விஷ்ணுவை அழைத்துச் செல்வது அவர்கள் திட்டம்.
இதற்கிடையில் விபத்து ஒன்றில் விஷ்ணு பலியாக, தனியாக தவிக்கும் சாயாதேவி கர்ப்பமாக இருக்கிறார். யாரும் தெரியாத ஊரில் அனாதையாக நிற்கும் அவரை வாடகை வீட்டில் தங்க வைக்கிறார் ஶ்ரீராம். திருமணமாகாத அவர் சாயாதேவிக்கு கணவராக, நடிக்க வேண்டிய நிலை. இதற்கிடையே சாதி வெறியால் சிறைக்குச் சென்றுவிட்டு பரோலில் வருகிறார் ஶ்ரீராமின் அப்பா. அடுத்து என்ன நடக்கிறது என்பது அதிர்ச்சி கிளைமாக்ஸ்!