twitter

    கோச்சடையான் கதை

    கோச்சடையான், சௌந்தர்யா அஸ்வின் இயக்கி, கே. எஸ். ரவிக்குமார் கதை அமைத்து, மே 23, 2014 அன்று வெளிவந்த முப்பரிமாண இதிகாச தமிழ்த்திரைப்படமாகும். ரஜினிகாந்த் கோச்சடையனாகவும் இவருடன் ஆர். சரத்குமார், ஆதி, தீபிகா படுகோன், ஷோபனா, ருக்மணி விஜயகுமார், ஜாக்கி ஷெராப் மற்றும் நாசர் ஆகியோர் நடித்துள்ளனர். இத்திரைப்படமானது முப்பரிமாண தோற்றத்தில், ராஜீவ் மேனனின் ஒளிப்பதிவிலும் ஏர்.ஆர்.ரகுமானின் இசையமைப்பிலும் வெளியானது. 

    தெலுங்கில் ”விக்ரம சிம்கா” எனும் பெயரில் மொழிமாற்றம் செய்யப்பட உள்ளதோடு மட்டுமல்லாமல் ஹிந்தி, மலையாளம், ஜப்பானியம் மற்றும் ஆங்கில மொழிகளிலெல்லாம் மொழிமாற்றம் செய்யப்பட உள்ளது. படப்பதிவு முடிவுற்ற நிலையில் படப்பதிவிற்குப் பிந்தைய பணிகள் லண்டன், ஹாங்காங் மற்றும் லாஸ் ஏஞ்சல்ஸ் ஆகிய நகரங்களில் நடைபெற்றன. இப்படத்தை ஈராஸ் நிறுவனத்துடன் இணைந்து மீடியா ஒன் குளோபல் எண்டர்டெயின்மென்ட் நிறுவனத்தினர் தயாரித்திருக்கின்றனர். 


    கதை

    கோட்டையபட்டினம் தேசத்து மன்னன் நாசர். இந்நாட்டில் தலைமை படைத்தளபதியாக இருப்பவர் கோச்சடையான். இவருக்கு ராணா, சேனா என இரு மகன்கள். கோச்சடையான் சிவபக்தர். சிறந்த வீரரும்கூட. அதனால் நாட்டு மக்கள் அவர் மேல் அளவு கடந்த அன்பு வைக்கின்றனர். இது நாசருக்கு பிடிக்கவில்லை. ஆகையால் கோச்சடையானை எப்படியாவது அழிக்க வேண்டுமென்று முயற்சிக்கிறார். இந்நிலையில் ஒருநாள் கோச்சடையான், தனது போர் வீரர்களை அழைத்துக்கொண்டு வேறு நாடுகளுக்கு சென்று போருக்கு தேவையான குதிரைகளை வாங்கி கப்பலில் கொண்டு வருகிறார்.

    அப்போது கோட்டையபட்டினத்தின் எதிரி நாடான கலிங்கபுரியை ஆட்சி புரியும் ஜாக்கி ஷெராப்பின் படை வீரர்கள் மறைந்திருந்து கோச்சடையான் கப்பல்கள் மீது பாய்ந்து சண்டையிடுகிறார்கள். அப்போது நடக்கும் சண்டையில் அனைவரையும் விரட்டியடிக்கிறார் கோச்சடையான். கலிங்கபுரி வீரர்கள் தப்பித்து செல்லும்போது கோச்சடையானின் கப்பல்களில் இருக்கும் உணவுகளில் விஷத்தை கலந்துவிட்டு செல்கிறார்கள். அதை உண்ணும் கோச்சடையானின் வீரர்கள் உயிருக்கு போராடுகிறார்கள்.

    இவர்களை காப்பாற்றுவதற்காக கோச்சடையான் அருகிலிருக்கும் கலிங்கபுரிக்கு சென்று அரசர் ஜாக்கி ஷெராப்பை சந்தித்து, தன் போர் வீரர்களை காப்பாற்றும்படி கேட்கிறார். அதற்கு, ஜாக்கி ஷெராப் அவர்களை காப்பாற்றுவதென்றால், நீ கொண்டு வந்த வீரர்களையும், குதிரைகளையும் என்னிடமே கொடுத்துவிட்டு செல்லவேண்டும் என்று கூறுகிறார். அதற்கு கோச்சடையானும் சம்மதித்து அவரிடமே அனைத்தையும் விட்டுவிட்டு தனது சொந்த நாட்டுக்கு திரும்புகிறார். இருப்பினும், எப்படியாவது தனது வீரர்களை தன்னுடைய நாட்டுக்கு திரும்ப அழைத்துச் செல்வேன் என்று ஜாக்கி ஷெராப்பிடம் சூளுரைத்துவிட்டு வருகிறார்.

    ஆனால், கோட்டையபட்டின அரசர் நாசரோ கோச்சடையானை பழிவாங்க இதுதான் சரியான தருணம் என்று அவர்மீது தேசத்துரோக குற்றம் சுமத்தி அவரை கொல்ல உத்தரவிடுகிறார். இவை அனைத்தையும் அறியும் கோச்சடையானின் இளைய மகனான ராணா தனது அப்பாவின் கனவை நிறைவேற்ற முடிவெடுக்கிறார். அதன்படி, கலிங்கபுரிக்கு செல்கிறார். அங்குள்ள படையில் சேர்ந்து வீரதீர சாகசங்கள் செய்து மன்னன் மனதில் இடம் பிடிக்கிறார். அந்நாட்டுக்கு படைத்தளதியாகவும் உயர்கிறார். கோட்டையபட்டினம் நாட்டு வீரர்கள் அங்கு அடிமைகளாக நடத்தப்படுவதை அறியும் ராணா, அவர்களை காப்பாற்றுவதற்காக ஜாக்கி ஷெராப்பின் மகனான ஆதியிடம், அடிமைகளாக இருக்கும் கோட்டையபட்டின வீரர்களை நம்முடைய படையில் சேர்த்து எதிரி நாடுகளிடம் போரிட்டால் அவர்களை எளிதில் வென்று நமக்கு சொந்தமாக்கி கொள்ளலாம் என்று ஆசை காட்டுகிறார்.

    ஆதியும் ராணாவின் சூழ்ச்சி தெரியாமல் இதற்கு சம்மதிக்கிறார். பிறகு அடிமைகளை தங்களது படையில் சேர்த்து, அவர்களை அழைத்து கொண்டு கோட்டையபட்டினம் மேல் படை எடுக்கிறார். ராணாவை கோட்டையபட்டின நாட்டின் இளவரசர் சரத்குமார் தலைமையில் படைகள் எதிர் கொள்கின்றன. களத்தில் சண்டை போடுவதற்கு பதில் ராணாவும் சரத்குமாரும் கட்டிப் பிடிக்கின்றனர். இருவரும் சிறு வயது நண்பர்கள் என்றனர். இதற்கிடையில், ராணாவின் தங்கை ருக்மணியை சரத்குமார் விரும்புகிறார். சரத்குமாரின் தங்கை இளவரசி தீபிகா படுகோனேவுக்கும் ராணாவுக்கும் காதல் மலர்கிறது. இந்த காதல் விவகாரம் மன்னர் நாசரை கோபப்பட வைக்கிறது.

    ஒரு கட்டத்தில் முகமூடி அணிந்த ஒருவன் அரண்மனைக்குள் புகுந்து நாசரை கொல்ல முயற்சிக்கிறான். அவனை வீரர்கள் பிடித்து முகமூடியை கழற்றும்போது அது ராணா என்பதை கண்டு அதிர்கின்றனர். தந்தையை கொன்றதற்காக பழி வாங்க வந்ததாக ராணா சொல்கிறார். அவரை சிறையில் அடைக்கின்றனர். அங்கிருந்து ராணா தப்பிக்கிறார். இதற்கிடையே, தீபிகா படுகோனேவுக்கும் ஜாக்கி ஷெராப் மகன் ஆதிக்கும் அவசர அவசரமாக நாசர் திருமண ஏற்பாடுகள் செய்கிறார். இறுதியில் தனது தந்தையை நயவஞ்சகத்துடன் கொன்ற நாசரை ராணா பழிவாங்கினாரா? தீபிகா படுகோனேவை கரம்பிடித்தாரா? என்பதே மீதிக்கதை.
    **Note:Hey! Would you like to share the story of the movie கோச்சடையான் with us? Please send it to us ([email protected]).