twitter
    Tamil»Movies»Master»Story

    மாஸ்டர் கதை

    மாஸ்டர் இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் தளபதி விஜய், விஜய் சேதுபதி, மாளவிகா மோஹனன், சாந்தனு என தென்னிந்திய முன்னணி நடிகர்கள் பலர் நடிக்கும் அதிரடி திரைப்படம். இத்திரைப்படத்தினை தயாரிப்பாளர் சேவியர் பிறிட்டோ தயாரிக்க, இசையமைப்பாளர் அனிருத் ரவிச்சந்தர் இசையமைத்துள்ளார். 

    தமிழ் திரையுலகில் முன்னணி முக்கிய நடிகரான விஜய்யின் திரைவாழ்வில் இத்திரைப்படம் 64வது திரைப்படமாகும். அதிரடி மற்றும் திரில்லர் திரைக்கதையில் உருவாகியுள்ள மாஸ்டர் திரைப்படத்திற்கு ஒளிப்பதிவாளர் சத்யன் சூர்யன் உடன் படத்தொகுப்பாளர் பிலோமின் ராஜ் எடிட்டிங் பணி செய்துள்ளார்.

    பல போராட்டங்களுக்கு பின்னர் 2021ஆம் ஆண்டு பொங்கல் பண்டிகைக்கு திரைக்கு வந்துள்ள இப்படத்தினை தயாரிப்பாளர் சேவியர் பிறிட்டோ தனது தயாரிப்பு நிறுவனம் மூலம் தயாரித்து, தமிழ் சினிமா பிரபல தயாரிப்பாளரான லலித் குமார் தனது "7 ஸ்க்ரீன் ஸ்டுடியோ" தயாரிப்பு நிறுவனம் மூலம் மாஸ்டர் படத்தினை உலகம் முழுவதும் விநியோகம் செய்துள்ளார்.


    மாஸ்டர் திரைப்படத்தின் கதை

    கதைக்கரு: கல்லூரியில் பேராசிரியராக பணிபுரியும் ஜே.டி என்னும் ஜான் துரைராஜ் (விஜய்) மது போதைக்கு அடிமையாக உள்ளார். சில பிரச்சனைகளில் சிக்கும் விஜய் அதன் காரணமாக பவானி (விஜய் சேதுபதி)-யின் கட்டுப்பாட்டில் உள்ள சிறுவர் சீர்திருத்த பள்ளிக்கு ஆசிரியராக செல்கிறார். பின் விஜய் சேதுபதியுடன் போராடி அவர் கட்டுப்பாட்டில் உள்ள மாணவர்களை விடுவிக்கிறார், விஜய்.

    கதை: பவானி (விஜய் சேதுபதி) கதாபாத்திரத்தின் அறிமுக காட்சியில் இப்படம் தொடங்குகிறது. தொடக்கத்தில் ஒரு அமைதியான வாழ்க்கையை தனது குடும்பத்தோடு வாழும் விஜய் சேதுபதி, அதிகாரம் படைத்த சிலரால் தாக்கப்பட்டு தன் குடும்பத்தை இழக்கிறார். விஜய் சேதுபதி கொலை செய்ததாக பழி சுமத்தி அவரை சிறுவர் சீர்திருத்த பள்ளிக்கு அனுப்பிவிடுகிறார்கள்.

    பலரின் அறிமுகம் சிறுவர் சீர்திருத்த பள்ளியில் விஜய் சேதுபதிக்கு கிடைக்கிறது. பின் அங்கு ஒரு இரக்கமில்லாத கொடூரமான எண்ணங்களை கொண்டு அசுரனாக மாறுகிறார். தனது ராஜ்யத்தை தன்னை உருவாக்கிய சிறுவர் சீர்திருத்த பள்ளியில் இருந்து விஜய் சேதுபதி எண்ணி, அங்கு உள்ள சிறுவர்களை அடிமைப்படுத்தி சில சட்ட விரோதமான செயல்களை செய்து வருகிறார்.

    ஜே.டி (விஜய்), சென்னையில் உள்ள ஒரு கல்லூரியில் ஆசிரியராக பணியாற்றி வருகிறார். அங்கு உள்ள மாணவர்களால் நாயகனாக கொண்டாடப்படும் விஜய், மாணவர்களுக்காக நிர்வாகத்திற்கு எதிராக பல விஷயங்களில் தலையிட்டு பல செயல்களை செய்கிறார். இதனால் கல்லூரி நிர்வாகத்திற்கும் விஜய்க்கும் சில மோதல்கள் உள்ளது.

    மது போதைக்கு அடிமையாக உள்ள விஜய் எப்பொழுதும் மது பாட்டிலை தனது பாக்கெட்டில் வைத்து அலைகிறார். அந்த கல்லூரியில் ஒரு ஆசிரியராக மாளவிகா மோகனன் வந்ததும், காதல் கதையாக மாறுகிறது.

    பின் சில பிரச்சனைகளில் சிக்கும் விஜய், கல்லூரியில் இருந்து வெளியேறி ஒரு சிறுவர் சீர்திருத்த பள்ளிக்கு ஆசிரியராக செல்கிறார். அந்த சிறுவர் சீர்திருத்த பள்ளி விஜய் சேதுபதி கட்டுப்பாட்டில் உள்ள பள்ளியாகும்.

    அந்த பள்ளியில் நடக்கும் சில சட்டவிரோதமான செயல்களை காணும் விஜய் பின் அவர்களை நல்வழிப்படுத்த முயற்சி செய்கிறார். பின்னர் விஜய் சேதுபதியின் ஆதிக்கத்தை பற்றி அறியும் விஜய், விஜய் சேதுபதியிடம் மோதுகிறார். எவ்வாறு விஜய் சிறுவர்களை காப்பாற்றினார் என்பதே படத்தின் அதிரடி மற்றும் திரில்லர் திரைக்கதை.


    மாஸ்டர் படத்தின் பிரத்தியேக தகவல்கள்

    2019-ம் ஆண்டு தீபாவளி பண்டிகைக்கு இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கிய கைதி படமும் தளபதி விஜய் அட்லீ கூட்டணியில் உருவான பிகில் திரைப்படமும் வெளியாகி மாபெரும் வெற்றிபெற்றது. இப்படங்களின் வெற்றியை தொடர்ந்து, மாஸ்டர் திரைப்படத்தில் இவர்கள் கூட்டணி அமைத்துள்ளனர்.

    மாஸ்டர் படத்தின் பற்றிய அறிவிப்புகள் பிகில் மற்றும் கைதி படங்கள் திரையரங்குகளில் வெளியாவதற்கு முன்பே இணையதள பக்கங்களில் இக்கூட்டணியை பற்றிய அதிகாரப்பூர்வமான தகவல்களை வெளியிட்டுள்ளனர் படக்குழுவினர். பின்னர் இப்படத்தின் பூஜை அக்டோபர் மாதத்தின் 3-ம் நாளில் நடைப்பெற்றது.

    மாஸ்டர் படத்தின் தயாரிப்பாளர் சேவியர் பிறிட்டோ இத்திரைப்படம் குறித்த கேள்விகளுக்கு "இப்படம் ஜனரஞ்சகமான படமாகவும் நல்ல பொழுது போக்கு அம்சங்களை கொண்டுள்ளதாகவும் இருக்கும்" என்று கூறியுள்ளார்.

    இப்படத்தின் பணியாற்றியிருக்கும் நடிகர்கள் மற்றும் படக்குழுவினர் பற்றிய தகவல்கள்
     
    இத்திரைப்படத்தில் நாயகனாக நடிகர் விஜய் நடிக்கிறார் என இணையத்தளத்தில் அதிகாரப்பூர்வமாக வெளியான தகவலை தொடர்ந்து, இப்படத்தில் நடிக்கவிருக்கும் கதாநாயகிகளுக்கான போட்டிகள் திரைவட்டாரங்களில் பிரபலமானது. இதில் விஜய் - அட்லீ கூட்டணியில் உருவான பிகில் திரைப்படத்தில் ஒரு கால்பந்து வீராங்கனையாக நடிக்கவிருந்த ராஷ்மிக மந்தண்ணா சில காரணங்களால் பிகில் திரைப்படத்தில் நடிக்கவில்லை. இதனை தொடர்ந்து இவர் மாஸ்டர் திரைப்படத்தில் நாயகியாக நடிக்கவிருக்கிறார் என்னும் தகவல்கள் திரைவட்டாரங்களில் பல செய்திகள் வெளியாகின.

    இவரை தொடர்ந்து இத்திரைப்படத்தில் தெலுங்கு திரையுலக புகழ் க்யாரா அத்வானி, ராசி கன்னா ஆகியோரும் நாயகியின் கதாபாத்திரத்தில் நடிக்கவிருப்பதாக நடிக்கவுள்ளதாக தகவல்கள் சமூக வலைத்தளங்களில் பரவலாக பரவி பிரபலமானது. இதன் தொடர்பாக பிகில் மற்றும் கைது படங்களானது முடிந்த பின்னரே இப்படத்தின் நடிக்கவிருக்கும் நடிகர், நடிகைகள் தேர்வு செய்யப்படும், தற்போது யாரையும் உறுதி செய்யப்படவில்லை என்று அறிக்கை ஒன்றினை 2019 ஆகஸ்ட் மாதம் படக்குழுவினர் வெளியிட்டுள்ளனர்.

    இத்திரைப்படத்தில் நாயகியாக 'பேட்ட' திரைப்படத்தில் நடித்து தமிழில் அறிமுகமான மாளவிகா மோஹனன் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார். பின்னர் தமிழ் சினிமா முன்னணி முக்கிய நடிகரான 'மக்கள் செல்வன்' விஜய் சேதுபதி வில்லன் கதாபாத்திரத்தில் நடிக்க தேர்வாகியுள்ளார். இவர் பேட்ட திரைப்படத்தில் ரஜினிக்கு எதிரான வில்லன் காதாபாத்திரத்தில் நடித்தது குறிப்பிடத்தக்கது.

    மாஸ்டர் திரைப்படத்தின் தயாரிப்பாளரான சேவியர் பிறிட்டோ இதற்கு முன்பு தளபதி விஜயின் மூன்று திரைப்படங்களை தயாரித்துள்ளார் என்பது தெரியவந்துள்ளது. இவர்கள் கூட்டணியில் இப்படத்திற்கு முன்பாகவே விஜய் நடிப்பில் வெளியான செந்தூர பாண்டி, ரசிகன் மற்றும் தேவா ஆகிய திரைப்படங்களுக்கு இருவரும் இணைந்து பணியாற்றியுள்ளனர். இதனை தொடர்ந்து தளபதி-யின் மாஸ்டர் திரைப்படத்திற்கு 4 முறையாக கூட்டணி அமைத்துள்ளனர் தயாரிப்பாளரும், நடிகர் விஜய்-யும்.

    இப்படத்தின் இயக்குனரான லோகேஷ் கனகராஜ் மாநகரம் திரைப்படத்தினை இயக்கி திரையுலகிற்குள் அறிமுகமானவர். இப்படத்தினை தொடர்ந்து கைதி படத்தினை இயக்கியுள்ளார். இவர் இயக்கத்தில் வெளியான இந்த இரண்டு திரைப்படமும் தமிழ் திரையுலகில் மாபெரும் வெற்றிபெற்ற திரைப்படமாகும். 

    **Note:Hey! Would you like to share the story of the movie மாஸ்டர் with us? Please send it to us ([email protected]).