பொன்னியின் செல்வன் 2 - இயக்குனர் மணிரத்னம் இயக்கத்தில் 2022 ஆம் ஆண்டு தமிழ் சினிமாவில் வெளியாகி பிரமாண்ட வெற்றி பெற்ற பொன்னியின் செல்வன் திரைப்படத்தின் தொடர்ச்சி கதைக்களத்தில் உருவாகியுள்ள திரைப்படம். இத்திரைப்படம் எழுத்தாளர் கல்கி எழுதிய 'பொன்னியின் செல்வன்' நாவல் கதையை அடிப்படையாக கொண்டு திரைக்கதை எழுதி இயக்கியுள்ளார், மணிரத்னம்.
இயக்குனர் மணிரத்னம் இயக்கியுள்ள பொன்னியின் செல்வன் திரைப்படத்தில் விக்ரம், ஜெயம் ரவி, கார்த்தி, திரிஷா, ஐஸ்வர்யா ராய், பிரகாஷ் ராஜ், சரத்குமார், ஐஸ்வர்யா லக்ஷ்மி என பல முன்னணி பிரபலங்கள் நடித்துள்ளனர்.
பொன்னியின் செல்வன் என்னும் வரலாற்று திரைப்படத்திற்கு ஒளிப்பதிவாளர் ரவி வர்மன் ஒளிப்பதிவு செய்ய, படத்தொகுப்பாளர் ஸ்ரீகர் பிரசாத் எடிட்டிங் செய்துள்ளார். இப்படத்தின் இயக்குனர் மணி ரத்னம் தனது 'மெட்ராஸ் டாக்கீஸ்' நிறுவனத்தின் மூலம் ஃபர்ஸ்ட் காபி அடிப்படையில் தயாரித்து, லைக்கா நிறுவனத்திடம் ஒப்படைத்துள்ளார்.
இசையமைப்பாளர் & ஆஸ்கர் நாயகன் ஏ ஆர் ரஹ்மான் இசையில், தமிழ் சினிமா முன்னணி தயாரிப்பு நிறுவனமான லைக்கா புரொடக்ஷன் நிறுவனத்தின் உரிமையாளர் திரு. சுபாஷ்கரன் இப்படத்தினை தயாரித்துள்ளார்.
பொன்னியின் செல்வன் திரைப்படத்தின் முதல் பாகம் 2022, செப்டம்பர் மாதம் வெளியானதை தொடர்ந்து, பொன்னியின் செல்வன் 2 (இரண்டாம் பாகம்) 2023, ஏப்ரல் 28ல் வெளியாகியுள்ளது. பொன்னியின் செல்வன் 2 திரைப்படத்தினை உலகம் முழுவதும் இப்படத்தினை தயாரித்த லைக்கா புரொடக்ஷன் நிறுவனமே விநியோகம் செய்துள்ளது.
தமிழகத்தில் இப்படத்தினை நடிகர் மற்றும் அரசியல்வாதியுமான திரு. உதயநிதி ஸ்டாலின் தனது 'ரெட் ஜெயன்ட் மூவிஸ்' நிறுவனத்தின் மூலம் விநியோகம் செய்துள்ளார். இப்படத்திற்கு தமிழக திரைப்பட தணிக்கை குழு 'யு/ஏ' சான்றிதழ் அளித்துள்ளது.
பொன்னியின் செல்வன் 02 திரைப்படத்தின் கதை
முதல் பாகத்தின் தொடர்ச்சியாக இப்படத்தின் கதை தொடங்குகிறது. முதல் பாகத்தின் இறுதி காட்சியில் விபத்தில் சிக்கி கடலுக்குள் சென்ற பொன்னியின் செல்வன் மற்றும் வந்தியத்தேவனை ஊமைராணி மற்றும் பூங்குழலி காப்பாற்றுகின்றனர். ஆனால் பொன்னியின் செல்வன் இறந்ததாக வதந்திகள் சோழ நாட்டுக்குள் பரவுகின்றது.
தன்னை காப்பாற்றிய ஊமைராணி நந்தினி போல இருப்பதை அறிகிறார், பொன்னியின் செல்வன். பொன்னியின் செல்வன் இந்த விஷயத்தை குந்தவை-யிடம் சொல்ல, சோழ அரசரிடம் குந்தவை இதை பற்றி வினாவுகிறார். இதில் பல சுவாரஸ்ய திடுக்கிடும் தகவல்கள் வெளியாகிறது.
மறுபுறம் ஆதித்ய கரிகாலனை கொல்ல நந்தினி பாண்டியர்களின் உதவியோடு திட்டமிட்டு வருகிறார். அவர்கள் திட்டமிட்டப்படி ஆதித்ய கரிகாலனை கொலை செய்கின்றனர். ஆனால் யார் கொலை செய்தார்கள் என்னும் விவரம் யாருக்கும் தெரியவில்லை.
ஆதித்ய கரிகாலனை கொன்ற பழியை வந்தியத்தேவன் மீது சுமத்தி சிறையில் அடைகின்றனர், சோழர்கள். பின் சூழ்ச்சி செய்து சிறையில் இருந்து தப்பிக்கும் வந்தியத்தேவன் அருண்மொழிவர்மனிடன் சென்று யாரும் அறியாத வேறு ஒரு ரகசியத்தை பற்றி சொல்கிறார்.
பின் என்ன ஆனது? ஆதித்ய கரிகாலனை கொன்றது யார்? வந்தியத்தேவன் எடுத்து வந்த ரகசியம் என்ன? என்பதே பொன்னியின் செல்வன் 2 படத்தின் கதை.