டு லெட் இயக்குனர் செழியன் இயக்கத்தில், தயாரிப்பாளர் பிரேமா செழியன் தயாரிப்பில் உருவாகும் திரைப்படம். இத்திரைப்படத்தில் சந்தோஷ் ஸ்ரீராம், ஷீலா, தருண் மற்றும் ஆதிரா பாண்டிலக்ஷ்மி நடித்துள்ளனர். மேலும் இப்படத்தின் இயக்குனர் செழியன், கல்லூரி, பரதேசி, ஜோக்கர் ஆகிய முக்கியப் படங்களில் ஒளிப்பதிவாளராகப் பணியாற்றியுள்ளார். இத்திரைப்படம், திரைக்கு வருவதற்கு முன்பே தேசிய விருதை பெற்றுள்ளது.
கதைச்சுருக்கம்
சென்னை பெருநகரில் வாடகை வீடு எனும் நரகத்தில் சிக்கி தவிக்கும் பல ஆயிரம் குடும்பங்களில் நிலையை, ஒரு குடும்பத்தின் திண்டாட்டத்தை முன்மாதிரியாகக் காட்டி பதிவு செய்திருக்கிறது டூ லெட்.
கதை
2007ம் ஆண்டில் சென்னையில் தகவல் தொழில்நுட்ப துறையின் அதீத வளர்ச்சியினால், புறநகர் பகுதிகளில் கூட வீட்டு வாடகை பல மடங்கு உயர்ந்தது. தனியார் நிறுவனங்களில் கடைநிலை ஊழியர்களாக பணியாற்றிய பலர் இதனால் பெரிதும் பாதிக்கப்பட்டனர். அப்படி பாதிக்கப்பட்டவர்களில் ஒரு தம்பதி தான் டூ லெட் திரைப்படத்தின் இளங்கோ - அமுதா.
தனக்கான அங்கீகாரத்திற்காக போராடும் சினிமா உதவி இயக்குனர் இளங்கோ (சந்தோஷ்). இவரது காதல் மனைவி அமுதா (ஷீலா). இவர்களின் மகன் சித்தார்த் (தருண்). கிடைக்கும் பணத்தை வைத்து பட்ஜெட் போட்டு வாழும், குறைந்த வருவாய் பிரிவைச் சேர்ந்த நடுத்தரக் குடும்பம். வாழ்க்கை நன்றாக போய்க்கொண்டிருக்கும் போது, திடீரென வீட்டை காலி செய்ய சொல்கிறார் ஹவுஸ் ஓனர். ஒரு மாத கெடுவுக்குள் வீடு மாறியாக வேண்டிய கட்டாயத்தில், தெரு தெருவாய் அழைந்து வீடு தேடுகிறார் இளங்கோ. அப்போது அவர் படும் கஷ்டங்களை உணர்வுப்பூர்வமாகவும், உணர்ச்சிகரமாகவும் பதிவு செய்திருக்கிறது டு லெட்.