விண்ணைத்தாண்டி வருவாயா 2010ம் ஆண்டில் வெளிவந்த திரைப்படம். இத்திரைப்படத்தின் இயக்குனர் கௌதம் மேனன். சிலம்பரசன்,த்ரிஷா மற்றும் கணேஷ் ஜனார்தனன் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். 2009ம் ஆண்டின் முற்பகுதியில் துவக்கப்பட்ட இத்திரைப்படம் பிப்ரவரி 26, 2010 ல் உலகம் முழுவதும் வெளியிடப்பட்டது.
விண்ணைத்தாண்டி வருவாயா படத்தின் கதை ஒரு இந்துவான கார்த்திக்கிற்கும், மலையாள கிருத்துவரான ஜெஸ்ஸிக்கும் இடையேயான காதல் அதனால் அவர்களின் குடும்பங்களில் நிகழும் பிரச்சனைகள் மற்றும் அவர்கள் இருவரின் மன நிலையை விவரிக்கும் நிகழ்வுகளின் கோர்வையாக சொல்லப்படுகின்றது. இத்திரைப்படத்தினை கௌதம் மேனனின் நண்பர்களான மதன், கணேஷ் ஜனார்தனன், எல்ரெட் குமார் மற்றும் ஜெயராமன் அவர்கள் தயாரிக்க, ஏ. ஆர். ரகுமான் இசையமைத்துள்ளார்.