twitter
    Tamil»Movies»Beast»Story

    பீஸ்ட் கதை

    பீஸ்ட் இயக்குனர் நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் விஜய், பூஜா ஹெக்டே, செல்வராகவன், யோகி பாபு என தமிழ் திரைப்பட நட்சத்திரங்கள் பலர் நடித்திருக்கும் அதிரடி - திரில்லர் திரைப்படம். இப்படத்தினை பிரபல தமிழ் திரைப்பட தயாரிப்பு நிறுவனமான சன் பிக்சர்ஸ் நிறுவனத்தின் தலைவர் கலாநிதி மாறன் தயாரிக்க, இசையமைப்பாளர் அனிருத் ரவிச்சந்தர் இசையமைத்துள்ளார்.

    விஜய்யின் பீஸ்ட் திரைப்படம் தமிழ் சினிமாவில் நடிகர் விஜய் நடிக்கும் 65வது படமாகும். திரைப்பட ரசிகர்கள் குடும்பங்களோடு ரசிக்கும் வண்ணத்தில் உருவாகியுள்ள இப்படத்திற்கு ஒளிப்பதிவாளர் மனோஜ் பரமஹம்சா ஒளிப்பதிவு செய்ய, படத்தொகுப்பாளர் நிர்மல் எடிட்டிங் செய்துள்ளார். இத்திரைப்படம் 2022 ஏப்ரல் 13ல் தமிழ் புத்தாண்டை முன்னிட்டு வெளியாகியுள்ளது.

    பீஸ்ட் படத்தின் புகைப்படங்கள்


    பீஸ்ட் படத்தின் டீசர், ப்ரோமோ, பாடல்களின் வீடியோக்கள்

    பீஸ்ட் படத்தில் பணியாற்றியுள்ள படக்குழு மற்றும் திரை நட்சத்திரங்கள்

    பீஸ்ட் திரைப்படத்தின் கதை

    கதைக்கரு

    சென்னையில் உள்ள ஒரு (Mall) வணிக வளாகத்தை தாக்கி அங்குள்ள வியாபாரிகள் மற்றும் வாடிக்கையாளர்களை பணயக் கைதிகளாக மாற்றுகின்றனர், தீவிரவாதிகள். துப்பாக்கி முனையில் அங்குள்ள மக்களையும், தமிழக அமைச்சரின் குடும்பத்தினரையும் பணயக் கைதிகளாக வைத்திருக்கும் தீவிரவாதிகள், தமிழக அரசாங்கத்திற்கு சில நிபந்தனைகள் வைக்கின்றனர்.

    ஒரு முக்கிய தீவிரவாதி புள்ளியை விடுவிக்க கோரி தீவிரவாதிகள் கூற, அதற்கு தமிழக அரசாங்கம் மறுத்தால் வணிக வளாகத்தில் உள்ள மக்களை கொள்வதாக மிரட்டுகிறார்கள். இந்திய ரா ஏஜென்ட் அதிகாரியான செல்வராகவன் தலைமை பொறுப்பை ஏற்று தீவிரவாதிகளுடன் பேச்சுவார்த்தை நடத்துகிறார். பின்னர் ரா ஏஜென்ட் அதிகாரியான விஜய் வணிக வளாகத்திற்குள் இருப்பதை அறிகிறார், செல்வராகவன்.

    பின் விஜய் அங்குள்ள தீவிர வாதிகளுடன் ஆடு-புலி ஆட்டம் ஆடுவது போல் மறைந்திருந்து தீவிரவாதிகளுக்கு எதிராக தாக்குதல் நடத்தி மக்களை காப்பாற்றுவதே படத்தின் படத்தின் சுவாரஸ்ய திரைக்கதை.

    கதை

    ராஜஸ்தானின் ஜோத்பூரில் படம் ஆரம்பிக்கிறது. கட் பண்ணா பாகிஸ்தானில் குழந்தையின் பலூன் ஒன்று அதன் கையை விட்டு பறக்க வீரராகவன் (விஜய்) என்ட்ரி கொடுத்து அந்த பலூனை பிடித்து குழந்தையின் கையில் கொடுக்கிறார் ஆனால், பலூன் உடைந்து விடுகிறது.

    அங்கே திடீரென நடக்கும் பயங்கரவாத தாக்குதலில் எதிரிகளை பறந்து பறந்து பந்தாடுகிறார் விஜய். ஸ்னைபர் கன் எடுத்து பயங்கரவாதி ஒருவரின் காரை சுட்டு வீழ்த்தும் போது, நடிகர் விஜய் எந்த குழந்தையை சிரிக்க வைத்தாரோ அந்த குழந்தை இறந்து விடுகிறது. வீரராகவன் விரக்தி அடைந்து அப்செட் ஆகும் இடத்தில் பீஸ்ட் டைட்டிலை போட்டு படத்தை ஆரம்பித்துள்ளார், இயக்குநர் நெல்சன்.

    அந்த குழந்தை இறந்ததும் ராணுவத்தின் மீதே நம்பிக்கை இழந்து RAWல் இருந்து வெளியேறுகிறார் விஜய். விடிவி கணேஷ் நடத்தும் டாமினிக் செக்யூரிட்டி சர்வீஸில் ப்ரீத்தி (பூஜா ஹெக்டே) அறிமுகமாகிறார். விடிவி கணேஷ் மற்றும் பூஜா ஹெக்டே காம்போவில் காமெடி ரொம்ப நல்லாவே வொர்க்கவுட் ஆகி உள்ளது. வீரராகவன் அந்த செக்யூரிட்டி சர்வீஸில் பணியாற்ற வருகிறார்.

    சென்னையில் உள்ள பிரம்மாண்ட மாலுக்கு செக்யூரிட்டி சர்வீஸ் கொடுக்கும் காண்ட்ராக்ட் விடிவி கணேஷுக்கு கிடைக்க, அவரோட டீம் அங்கே செல்கிறது. அந்த நேரத்தில் அந்த மால்-ஐ பயங்கரவாதிகள் ஹைஜாக் செய்கின்றனர். பயங்கரவாத தலைவனை விடுவித்தால் தான் இங்கே உள்ள மக்களை உயிரோடு விடுவோம் என பிணையக் கைதிகளாக பிடித்து வைக்கின்றனர்.

    வீரராகவனும் அங்கே அவர்களுடன் பிணையக் கைதியாக உள்ளார். யோகி பாபு, ரெட்டின் கிங்ஸ்லி பண்ணும் காமெடியை விட விடிவி கணேஷ் இந்த படத்தில் தனக்கே உரிய பாணியில் காமெடி பண்ணி ஸ்கோர் செய்துள்ளார்.

    அல்தாஃப் உசைன் எனும் கதாபாத்திரத்தில் இயக்குநர் செல்வராகவன் நடித்துள்ளார். பயங்கரவாதிகளுக்கும் அரசியல்வாதிகளுக்கும் இடையே பேச்சுவார்த்தை நடத்தும் அதிகாரியாக நடித்துள்ளார்.

    வீரராகவன் வணிக வளாகத்திற்குள் இருப்பதை அறியும் செல்வராகவன், வீரராகவனிடம் ரகசியமாக பேச்சுவார்த்தை நடத்தி அங்குள்ள மக்களை காப்பாற்ற வேண்டும் என கூறுகிறார். பல திட்டங்களை தீட்டி வீரராகவன் அங்கு தீவிரவாதிகளுடன் சண்டையிடுகிறார்.

    ஆனால் பயங்கரவாதிகள் தங்களின் இலக்கை அடைகின்றனர், நினைத்தபடி அவர்களின் தலைவரை அரசாங்கம் விடுவிக்கிறது. பின் தப்பி சென்ற அந்த பங்கரவாதியை விஜய் ஸ்பேஸ் ஜெட்டில் பறந்து சென்று அழிக்கிறார்.

    பீஸ்ட் திரைப்படத்தின் கதையை தனது அழகான திரைக்கதை மூலம் வடிவமைத்து நகைச்சுவை மற்றும் டைமிங் வசனங்களோடு அசத்தியுள்ளார், இயக்குனர் நெல்சன்.

    பீஸ்ட் படத்தின் பிரத்யேக தகவல்கள்

    பீஸ்ட் திரைப்படம் நடிகர் விஜய் நடிக்கும் 65வது (தளபதி 65) திரைப்படமாகும். வேட்டைக்காரன் (2009), சுறா (2010), சர்கார் (2018) படங்களுக்கு பின்னர் இப்படத்தின் மூலம் நான்காவது முறையாக விஜய் - சன் பிக்சர்ஸ் கூட்டணி அமைந்துள்ளது.

    தளபதி 65 படத்தினை இயக்க அஜய் ஞானமுத்து, பாண்டிராஜ், சுதா கொங்கரா, ஷங்கர், மகிழ் திருமேனி மற்றும் வெற்றிமாறன் ஆகியோர் பரிந்துரைக்கப்பட்டு இறுதியில் ஏ.ஆர். முருகதாஸ் ஒப்பந்தம் செய்யப்பட்டார்.

    ஆனால் முருகதாஸ் இயக்கவிருந்த கதையில் இரண்டு விஜய் மற்றும் படத்தின் பட்ஜெட் 100 கோடிகளை தாண்டியது, அதனால் இந்த கூட்டணி கைவிடப்பட்டு, இறுதியில் இயக்குனர் நெல்சன் திலீப்குமார் - விஜய் கூட்டணி அமைந்துள்ளது.

    இயக்குனர் நெல்சன் திலீப்குமார் கோலமாவு கோகிலா, டாக்டர் படங்களை தொடர்ந்து பீஸ்ட் படத்தினை இயக்கியுள்ளார், இவரது முந்திய படங்கள் நகைச்சுவை வண்ணத்தில் ஒரு அதிரடி படமாக அமைந்து திரை ரசிகர்களை மகிழ்வித்து மாபெரும் வெற்றி பெற்றுள்ளது. அதே பாணியில் பீஸ்ட் திரைப்படமும் நகைச்சுவை வண்ணத்தில் ஒரு அதிரடி படமாக அமைந்துள்ளது.

    பீஸ்ட் படத்தின் நாயகி பூஜா ஹெக்டே தமிழ் சினிமாவில் முகமூடி படத்தில் நாயகியாக நடித்து தனது திரைப்பயணத்தை தொடங்கியுள்ளார். பின்னர் தெலுங்கு மற்றும் ஹிந்தி மொழியில் நடித்து ஒரு முன்னணி திரை நட்சத்திரமாக புகழ் பெற்ற இவர், தற்போது பீஸ்ட் படத்தில் நடித்து மீண்டும் தமிழ் சினிமாவில் ரீ-என்ட்ரி கொடுத்துள்ளார்.

    தமிழ் சினிமாவில் பல படங்களை இயக்கி ஒரு முக்கிய முன்னணி இயக்குனராக புகழ் பெற்ற செல்வராகவன் இப்படத்தில் வில்லன் கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். சரவணன் மீனாட்சி மற்றும் பிக் பாஸ் புகழ் திரு. கவின் அவர்கள் இப்படத்தில் ஒரு துணை இயக்குனராக பணியாற்றியுள்ளார்.

    பாடல்கள்

    பீஸ்ட் படத்தில் இடம் பெற்றுள்ள 'அரபிக் குத்து' பாடல் யூ டியூப் செயலியில் வெளியாகி பல மில்லியன் பார்வையாளர்களை பெற்றும் இந்திய அளவில் அதிக லைக்ஸ் வாங்கிய பாடலாக புகழ் பெற்றுள்ளது. இப்பாடலுக்கு சிவகார்த்திகேயன் பாடல் வரிகள் எழுத அனிருத் மற்றும் ஜோனிதா காந்தி பாடியுள்ளனர்.

    இப்படத்தின் இரண்டாம் சிங்கிள் 'ஜாலியோ ஜிம்கானா' பாடலை நடிகர் விஜய் பாடியுள்ளார். இப்பாடலுக்கு பாடலாசிரியர் கு. கார்த்தி பாடல் வரிகள் எழுதியுள்ளார்.

    **Note:Hey! Would you like to share the story of the movie பீஸ்ட் with us? Please send it to us ([email protected]).