கோடியில் ஒருவன் இயக்குனர் ஆனந்த கிருஷ்ணன் இயக்கத்தில் விஜய் ஆன்டனி, ஆத்மிகா முன்னணி கதாபாத்திரத்தில் நடிக்கும் அதிரடி மற்றும் திரில்லர் திரைப்படம். இப்படத்திற்கு இசையமைப்பாளர் நிவாஸ் கே பிரசன்னா இசையமைத்துள்ளார்.
ஒரு கமர்சியல் - அதிரடி திரைப்படமாக உருவாகியுள்ள இப்படம், பல போராட்டங்களுக்கு பின்னர் 2021 ஆம் ஆண்டு செப்டம்பர் 17ல் திரையரங்குகளில் வெளியாகியுள்ளது. இப்படத்திற்கு ஒளிப்பதிவாளர் உதயா குமார் ஒளிப்பதிவு செய்ய, படத்தொகுப்பாளராக இப்படத்தின் நாயகன் விஜய் ஆன்டனி எடிட்டிங் செய்துள்ளார்.
கோடியில் ஒருவன் திரைப்படத்தின் கதை
தேனி மாவட்டத்தில் உள்ள மலை பிரதேச இடத்தில் அமைந்திருக்கும் கோம்பை என்னும் ஊரில் நடக்கும் உள்ளாட்சி தேர்தலில் ஒரு இளம் பெண்ணை போட்டியிட அந்த ஊர் தலைவர் அறிவுறுத்துகிறார். ஏனெனில் அந்த ஊர் ஒரு பெண்களுக்கென ஒதுக்கப்பட்ட தொகுதி ஆகும். தன் கைவசத்தில் இருக்கும் பெண்ணை தேர்தலில் நியமித்து அந்த ஊரினை தன் கட்டுப்பாட்டில் வைத்துக்கொள்ள முடிவெடுக்கிறார், ஊர்த்தலைவர்.
ஆனால் தேர்தலில் வெற்றி பெற்ற பின்னர், அந்த இளம் பெண் ஊருக்காக பல நல்ல விஷயங்களை செய்கிறார். சில நேரங்களில் ஊர் தலைவரை எதிர்த்து நல்லது செய்யும் இந்த பெண்ணை, ஊர் தலைவர் கொலை செய்ய முடிவெடுக்கிறார்.
கர்ப்பமாக இருக்கும் அந்த பெண், அங்கிருந்து தப்பிக்கிறார். அவருக்கு பிறக்கும் குழந்தைதான் விஜயராகவன் (விஜய் ஆன்டனி). அங்கிருந்து படம் துவங்குகிறது. விஜய் ஆன்டனி ஒரு ஐ.ஏ.எஸ் அதிகாரியாக வேண்டும் என்பது அவரின் தாயின் கனவு. தனது தாயின் கனவை நிறைவேற்ற சென்னை வருகிறார், விஜய் ஆன்டனி.
சென்னையில் உள்ள ஒரு ஹவுசிங் போர்டு பகுதியில் குடியேறும் விஜய் ஆன்டனி, அங்கிருக்கும் குழந்தைகளுக்கு டியூஷன் எடுத்து தனது ஐ.ஏ.எஸ் பரிச்சைக்கு தயாராகுகிறார். தன்னை சுற்றி உள்ளவருக்கு நல்லது செய்யும் குணம் கொண்ட விஜய் ஆன்டனி, ஹவுசிங் போர்டு பகுதியில் தீய வழியில் பயணிக்கும் பல சிறுவர்களை நல்வழிப்படுத்துகிறார். இதற்காக அங்கிருக்கும் ஹவுசிங் போர்டு பகுதி மக்கள் இவரை கொண்டாடுகிறார்கள்.
அந்த ஹவுசிங் போர்டு பகுதி மக்களுக்காக இவர் செய்யும் உதவி, அங்கிருக்கும் கவுன்சிலர், அவரது அடியாட்கள் மற்றும் அவர்களின் முதலாளியான பெத்த பெருமாள் (ராமசந்திர ராஜு)-வின் பகையை சம்பாரிக்கிறார். பின் வில்லன்களால் நாயகனுக்கு பல கொடச்சல் மற்றும் இன்னல்கள் வருகிறது. பின் என்ன நடந்தது? தாயின் கனவை நிறைவேற்றினாரா விஜய் ஆன்டனி ? என்பதே கதை.