கொலைகாரன் இயக்குனர் ஆண்ட்ரவ் லூயிஸ் இயக்கத்தில், விஜய் ஆண்டனி, ஆஷிமா, மற்றும் அர்ஜுன் நடிக்கும் அதிரடி த்ரில்லர் திரைப்படம். இத்திரைப்படத்தினை தயாரிப்பாளர் பிரதீப் தயாரிக்க, இசையமைப்பாளர் சைமன் கே கிங் இசையமைத்துள்ளார். மேலும் இத்திரைப்படத்திற்கு ஒளிப்பதிவாளர் ரிச்சர்ட் கெவின் ஒளிப்பதிவில், திரைப்பட தொகுப்பாளர் சதீஷ் சூர்யா எடிட்டிங் செய்துள்ளார்.
கதை
சென்னையில் உள்ள ஒரு அபார்ட்மென்டில் தனியாக வாழ்ந்து வருகிறார் விஜய் ஆன்டனி. இவரின் எதிர் வீட்டில் இப்படத்தின் நாயகி ஆஷ்மா தனது தாய் சீதா-வுடன் வாழ்ந்து வருகிறார். இந்நிலையில் சென்னையில் உள்ள ஒரு பாலத்தின் கீழ் ஒருவர் உடல் அடையாளம் தெரியாத அளவிற்கு கொலைசெய்யப்பட்டிருக்கிறார்.
இக்கொலையினை கண்டுபிடிக்க துப்பறியும் காவல் துறை அதிகாரி, துணை போலீஸ் கமிஷனரான அர்ஜுன் வழக்கை விசாரிக்க தொடங்குகிறார். கொலை செய்யப்பட்ட நபருக்கும் நாயகி ஆஷ்மா-ற்கும் சம்பந்தம் இருப்பதாய் கண்டறிகிறார் அர்ஜுன். ஆனால் ஒரு பெண் இவ்வளவு கொடூரமாக கொலை செய்வதற்கு முடியாது என யூகிக்கும் அர்ஜுன், இவரின் பார்வை எதிர் வீட்டில் இருக்கும் விஜய் ஆன்டனி மேல் பாய்கிறது.
எதிர்பாராத விதமாக விஜய் ஆன்டனி காவல் நிலையத்தில் நான்தான் கொலை செய்தேன் என சரண்டர் ஆகிறார். இருப்பினும் அர்ஜுன், இவர் கூறும் காரணங்களை நம்பாமல் கொலையாளியை கண்டுபிடிக்க முயல்கிறார். விசாரணை செய்யும் அர்ஜூனுக்கு சில திடுக்கிடும் தடயங்கள் கிடைக்கின்றன. அந்த தடயங்கள் என்ன? கொலை செய்தது யார்? இதில் விஜய் ஆன்டனி, அர்ஜுன் என இவ்விருவருக்குமே நடக்கின்ற சதுரங்க ஆட்டமே இப்படத்தின் திரில்லரான திரைக்கதை.
விளம்பரம்
இத்திரைப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரானது இத்திரைப்படத்தின் பூஜை மற்றும் முதல் கட்ட அறிவுப்புகளுடன் 2018 ஜூன் 5ல் வெளியானது. பின்னர் 2018 டிசம்பரில் இத்திரைப்படத்தின் படப்பிடிப்பு பணிகள் முடிவடைந்தன. மேலும் இப்படத்தின் உள்ள ஒரு காட்சியினை டீஸராக வெளியிட்டு ஒரு புதிய ட்ரெண்டினை உருவாக்கியுள்ளது படக்குழு.