twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    சினிமாக்காரன் சாலை-7: 'மாப்ள… தொவச்சி கிழிச்சித் தொங்கவிட்டுட்டமில்ல…'

    By Shankar
    |

    -முத்துராமலிங்கன்

    'அஞ்சான்' ரிலீஸாகியிருந்த சமயம். கத்துக்கிட்ட மொத்த வித்தையையும்' என்ற மூன்று வார்த்தைகளை தமிழ் மொழியின் அகராதியிலிருந்தே தூக்கிவிட அல்லது இல்லாமல் பண்ணிவிட தன்னுடைய மொத்த சொத்தையும் விற்கத் தயாராக இருந்தார் இயக்குநர் லிங்குசாமி. அந்த மூன்று வார்த்தைகளும் அவரை விடாமல் துரத்தித் துரத்தி பல இரவுகள் தூங்க விடாமல் தொந்தரவு செய்து கொண்டே இருந்தன.

    தற்செயலாக 'அஞ்சான்' எப்படிப்பட்ட படம் என்ற ஒரு நேர்காணலுக்கு 'கத்துக்கிட்ட மொத்த வித்தையையும் இந்தப் படத்துல இறக்கி வச்சிருக்கேன்' என்று பதிலளித்திருந்தார் லிங்கு. அதை வைத்து இணைய விமர்சகர்கள் பண்ணிய பகடிகள் கோடிகளில் இருக்கும். ஒரு அப்பாவி மனிதனை ஒரே நேரத்தில் லட்சம் கொசுக்கள் கடித்தால், துடிக்காமல் என்னதான் செய்ய முடியும்.

    இது லிங்குவுக்கென்றில்லை. மணிரத்னம், ஷங்கர், கவுதம் மேனன் என்று ஒருத்தர் விடாமல் சகட்டுமேனிக்கு சினிமாவில் உள்ள அனைவரும் டிசைன் டிசைனாய் கலாய்க்கப்படுகிறார்கள். ‘ஐ' படத்தை 'ஆய்' என்று இரண்டே எழுத்துக்களில் விமர்சனம் எழுதிவிட்டு எள்ளி நகையாடுகிறார்கள். அவ்வளவு உழைப்பை செலுத்திவிட்டு, இப்படி ஒரு விமரிசனம் படித்தால்..'சீய்' என்று ஆகிவிடாது?

    இவர்களை விடுங்கள்... கேப்டன் எவ்வளவு பெரிய ஆள்? 'முட்டுச் சந்துல நின்னுக்கிட்டு கெட்டகெட்ட வார்த்தைகள்ல கிண்டல் பண்றானுங்க' என்ற சைபர் கிரைமில் புகார் கொடுக்கும் அளவுக்குப் போய்விட்டார்.

    திருட்டு வி.சி.டிக்காரர்களை விட இப்போது சினிமாக்காரர்கள் அதிகம் பயப்படுவது இந்த சமூக வலைத்தள விமர்சகர்களுக்குத்தான். படத்தைப் பத்தி எதுவுமே எழுதாம இருக்கிறதா இருந்தா படத்தின் என்.எஸ்.சி. ஏரியாவை எழுதித் தந்துவிடத் தயாராக இருக்குமளவுக்கு சினிமாக்காரர்கள் இவர்களுக்கு பயப்படுகிறார்கள் என்று சொன்னாலும் அது அதிகமில்லை.

    மனுச ஜீவராசிகளில் தற்போது இவர்களின் எண்ணிக்கைதான் அதிகம். அதாவது இணையங்களில் சினிமா விமரிசனம் எழுதுகிறவர்கள், பிரபலங்களை கலாய்ப்பவர்கள் மற்றும் ஓட்டுபவர்கள். மொத்த மக்கள் தொகையில், அம்மாவின் வயிற்றில் இருக்கும் குழந்தைகள், எல்.கே.ஜி. யூ.கே.ஜி. படிப்பவர்கள் மற்றும் இணையமென்றால் என்னவென்று அறியாதவர்கள் தவிர்த்து தற்போது அனவருமே சினிமா விமரிசனம் எழுதுகிறவர்களோ என்று ஐயமும் அச்சமும் ஒருசேர கொள்ள வேண்டியதிருக்கிறது.

    ஒரு படம் ரிலீஸாக தயாராக இருக்கும்போதே அந்தப் படம் குறித்து மனசில் கொஞ்சம் விதவிதமாக டைப் பண்ண ஆரம்பித்து விடுவார்கள் போலிருக்கிறது. அடுப்படியில் பால் திருடிக் குடிக்க அலையும் பூனையின் பார்வையுடன் இவர்கள் இணையங்களில் அலைகிறார்கள்.

    இந்த விமரிகர்களை பொதுவாக மூன்று பிரிவுகளாகப் பிரிக்கலாம்.

    1. சாஃப்ட்வேர் நிறுவனங்களில் லட்ச ரூபாய்க்கு அருகிலோ அதைத் தாண்டியோ சம்பளம் வாங்கிக்கொண்டு காலாட்டிக்கொண்டே சினிமா விமரிசனம் எழுதுகிறவர்கள்.

    2. வாய்ப்பு கிடைத்திருந்தால் மிஷ்கினையும்,கவுதம் மேனனை விடவும் தன்னால் சிறப்பாக படம் இயக்கிவிட முடியும் என்று கருதுகிற மேதாவி ப்ளாக்கர்கள்.

    3. வேறு வேலைவெட்டி எதுவுமின்றி முகநூலிலும் மற்ற இணையங்களிலும் ‘லூஸ்மோஷன்' போல் சதா படங்கள் பற்றி எதையாவது கழிந்துகொண்டே இருப்பவர்கள்.

    நான்காவதாய் சாரு நிவேதிதா போல் ஒரு குட்டி இனம். தனக்கு வசனம் எழுதவோ, நடிக்கவோ வாய்ப்பு தருவதாய் இருந்தால் முரட்டு ஜால்ரா அடிப்பது. இல்லையென்றால் சவட்டித் தள்ளுவது. ராஜுமுருகனின் ‘குக்கூ' படத்துக்கு இவர் எழுதியிருந்த விமர்சனம் படித்து விட்டு ஒரு வாசகர்போல் போய் ரெமி மார்ட்டினும் பிரியாணியும் வாங்கிக்கொடுத்து, அந்த பிரியாணியில் கொஞ்சமாய் எலி மருந்தைக் கலந்துவிடலாமா என்கிற அளவுக்கு யோசித்தேன்!

    Cinemakkaran Saalai -7

    இந்த விமர்சகர்கள் பொதுவாக படங்களை மூன்று வகைகளாக பிரித்துக்கொள்கிறார்கள்.

    1.படம் எப்படியிருந்தாலும் ஆதரித்து சுருதிபேதமாய் ஜால்ரா அடிப்பது.

    2. படம் எப்படியிருந்தாலும் அறுத்துக் கிழித்து தொங்கவிடுவது.

    3.அப்படி ஒரு படம் ரிலீஸானதே இல்லை போல் முற்றிலும் கண்டுகொள்ளாமல் புறக்கணிப்பது.

    மேற்படி மூன்று செயல்களுக்குமே, அவர்கள் பாஷையிலேயே சொல்வதானால் அவர்களிடம் தட்டையான காரணங்கள் இருக்கும்.

    ஒன்று குறிப்பிட்ட நடிகர் அல்லது இயக்குநரின் ரசிகராயிருப்பார். அல்லது அந்தப்படத்தில் இவரது நண்பரொருவர் ஜுனியர் ஆர்டிஸ்டாய் கூட்டத்தோடு கூட்டமாய் தலைகாட்டியிருப்பார். இப்படி அல்ப காரணங்களே போதுமானது ஆதரிப்பதற்கு.

    இப்படி ஆதரிப்பதால் அந்தப் படம் பெரும் ஓட்டம் ஓடி ஜூனியர் ஆர்டிஸ்டான நண்பர் சீனியர் ஆர்டிஸ்டாகி எதிர்காலத்தில் அவரை சூப்பர் ஸ்டார் ஆக்கும் அளவுக்கு தனது விமர்சனம் பலம் வாய்ந்தது என்பது சம்பந்தப்பட்டவரின் அசைக்க முடியாத நம்பிக்கை.

    சினிமா விழாக்களில், சமீபகாலங்களில் தயாரிப்பாளர்களும், இயக்குநர்களும் நடிகர்களும்,' நூத்துக்கணக்கானவங்க ரத்தம் சிந்த உழைச்சி, கோடிகள்ல செலவு பண்ணி படம் எடுக்குறோம். ஃபேஸ்புக்குல விமர்சனம் எழுதுறேங்குற பேர்ல ஒரே வரியில 'படம் மரண மொக்கை'ன்னு கமெண்ட் அடிச்சிட்டுப் போயிடுறாங்க' என்று சதா புலம்பித் தள்ள ஆரம்பித்திருக்கிறார்கள்.

    இதற்கு ‘கருத்துச் சுதந்திரம்', 'ஒழுங்கா படம் எடுத்தா நாங்க ஏன் கலாய்க்கிறோம்,' மொக்கைப் படத்தை மொக்கைன்னு எழுதாம பொக்கேவா குடுக்க முடியும்?' என்கிற ரீதியில் இருக்கின்றன இணைய விமர்சனப் போராளிகளின் பதில்கள்.

    சரிதான்.. கருத்துச் சுதந்திரம் வேண்டும்தான். யாரும் எதுவும் சொல்லலாம், எழுதலாம்தான்.

    ஆனால் மனசாட்சியைத் தொட்டுச் சொல்லுங்கள். விமர்சனம் எழுதுகிறவர்களில் ஒரு பத்து சதவிகிதம் பேராவது தியேட்டருக்குப் போய் படம் பார்த்துவிட்டு எழுதுகிறீர்களா? ஒருத்தர் எழுதிய விமர்சனத்தைப் படித்து விட்டு, வெரைட்டியாய் வாந்தி எடுப்பவர்களே இவர்களில் அதிகம். 'நான் அஜீத் ரசிகன் தான். ஆனால் விஜய் படம் நன்றாக இருந்தால் படம் சிறப்பு என்றுதான் எழுதுவேன்' என்று சொல்லக்கூடிய நடுநிலையாளர் ஒருவராவது இருக்கிறார்களா?'

    ‘என்னை அறிந்தால்' ரிலீஸான தினம் முதல் காட்சியே காலை 5 மணிக்கு என்றுதான் தகவல். ஆனால் படத்தின் ஒரு காட்சி முடிவதற்குள்ளாகவே, அதாவது காலை 7 மணிவாக்கில், இணையதளங்கள் முழுக்க விமர்சனங்கள் நிரம்பி வழிந்தன. அஜீத் ஒரு நேர்மையான காவல்துறை அதிகாரி. திரிஷா, அனுஷ்கா இருவருமே கொடுத்த கேரக்டரை சிறப்பாக செய்திருக்கிறார்கள். ஹாரிஸ் ஜெயராஜ், ஸ்டைலாக டீ குடித்தபடி, வழக்கம்போல் டியூனை காப்பி அடித்திருக்கிறார். கவுதமின் மேக்கிங் அபாரம். இப்படி... அவற்றைப் படிக்கும்போது, அவை படம் பார்க்காமலே எழுதப்பட்ட விமர்சனங்கள் என்று அப்பட்டமாய் தெரிந்தன. இப்படி அவசரமாய் எழுதுபவர்களுக்கு நமக்குத் தெரியாமல் அவார்டு எதுவும் தருகிறார்களா? இவற்றை சில பத்திரிகைக்காரர்களும் எடுத்துப் போட்டது இன்னொரு கொடுமை.

    இந்த இணையதள விமர்சன வியாதியஸ்தர்களின் சம்பாஷனை பெரும்பாலும் இப்படித்தான் இருக்கிறது...

    ‘மாப்ள இப்பத்தான் 'அநேகன்' டி.வி.டி. வந்துச்சி. 5.1 ஆடியோல சூப்பர் ப்ரிண்ட்.ஜஸ்ட் தர்ட்டி ருபீஸ்டா'...

    ‘போடா லூஸுப் பயலே. அதே 5.1 ல திருட்டு வி.சிடி.யில படம் வந்துடுச்சிடா. 30 ரூபாய வேஸ்ட் பண்ணிட்டியே?'

    ‘அடடா. வட போச்சே?...அப்ப லேட் பண்ணாம நம்ம பயலுக எல்லாருக்கும் லிங்க் அனுப்பிரு. இன்னும் ஒரு மணிநேரத்துல அறுத்து கிழிச்சி தொங்க விட்டுருவோம். நாம எழுதுறத படிச்சிட்டு ஒருபய தியேட்டர் பக்கம் போகக்கூடாது'.

    இந்தக் கூட்டத்தை என்ன செய்யலாம்? சினிமாவை நிஜமாக நேசிக்கிற நியாயவான்களே... சொல்லுங்க!'

    பின்குறிப்பு : இந்தக்கட்டுரை சினிமா விமரிசனம் எழுதும் அனைவருக்கும் பொருந்தாது. ரெகுலர் பத்திரிகையாளர்களை விட நியாயமாக, எழுத்து நேர்த்தியாக வியக்கும் வண்ணம் சினிமா விமரிசனம் எழுதும் ஒரு சிலரும் இணையத்தில் இருக்கவே செய்கிறார்கள். அவர்கள் இந்தக் கட்டுரையை படிக்க நேராமல் இருந்து விட எல்லாம் வல்ல இறைவனை வேண்டுகிறேன்.

    (தொடர்வேன்...)

    தொடர்புக்கு: [email protected]

    English summary
    The 7th episode of Muthuramalingan's Cinemakkaran Saalai is discussing about the danger of social media critics on cinema.
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X