அஜித்தின் கையை பிளேடால் கிழித்தது விஜய் ரசிகர்களா?.. புது பஞ்சாயத்தை கூட்டும் நெட்டிசன்ஸ்
சென்னை: அஜித்குமார் நேற்று தனியார் ஆங்கில ஊடகத்துக்கு அளித்த பேட்டிதான் சமூக வலைதளங்களில் பேசுபொருளாகியிருக்கிறது. கரூர் கூட்ட நெரிசல், தனது திரையுலக அனுபவம் என பல விஷயங்களை ஓபனாக பேசினார். அதிலும் தனது கையை ரசிகர்கள் கிழித்துவிட்டதாக அவர் சொன்னது பெரிய அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது. இந்தச் சூழலில் அதனை செய்தது விஜய் ரசிகர்கள்தான் என ஒருதரப்பினர் சொல்ல ஆரம்பித்திருக்கிறார்கள்.
அஜித் பெரும்பாலும் பேட்டிகள் கொடுப்பதில்லை. அப்படி கொடுத்தால் அதுதான் ஹாட் டாபிக்காக இருக்கும். தனது மனதில் பட்டதை யாருக்கும் எதற்கும் அஞ்சாமல் போட்டுடைத்துவிடுவார். தற்போது கார் ரேஸில் திவீரமான கவனத்தை செலுத்திவரும் அவர் இந்தியாவில் அதனை பிரபலப்படுத்தும் நோக்கத்தில் ஆங்கில ஊடகத்துக்கு சில பேட்டிகளை கொடுத்துவருகிறார். அப்படி நேற்று அவர் தனியார் ஆங்கில ஊடகம் ஒன்றுக்கு பேட்டியளித்தார்.
கரூர் கூட்ட நெரிசல் பற்றி: அந்தப் பேட்டியில் கரூரில் நடந்த கூட்ட நெரிசல் பற்றி பேசிய அவர், "கரூர் கூட்ட நெரிசல் காரணமாக தமிழ்நாட்டில் நிறைய விஷயங்கள் நடந்துகொண்டிருக்கின்றன. அதற்கு அந்த தனி நபர் மட்டுமே காரணமில்லை. அந்தத் துயர சம்பவத்துக்கு நாம் அனைவருமே காரணம்தான். ஊடகங்களுக்கும் இதில் பங்கு இருக்கிறது. ஒரு சமூகமாக கூட்டத்தை கூட்டி காட்டுவதில் நாம் ஈடுபாடு காட்டுகிறோம்.

இது அனைத்தும் உடனடியாக முடிவுக்கு வர வேண்டும். கிரிக்கெட் போட்டிகளை பார்ப்பதற்கும்தான் கூட்டம் வருகிறது. ஆனால் அங்கெல்லாம் இப்படி நடப்பதில்லையே. ஏன் திரையரங்குகளில் மட்டும் நடக்கிறது. சினிமா பிரபலங்களுக்கு மட்டும்தான் இப்படி நடக்கிறது. ஒட்டுமொத்த திரையுலகத்தையும் உலக அளவில் தவறாக சித்தரிக்கிறது. 1.4 பில்லியன் மக்கள் இருக்கும் நாட்டில் கூட்டம் கூட்டுவது ஒன்றும் பெரிய விஷயமில்லை" என ஓபனாக பேசியிருந்தார்.
கைகளில் ரத்தம்: அவர் இப்படி பேசியதை பலரும் கொண்டாடிவருகிறார்கள். அதே பேட்டியில் தனக்கு நேர்ந்த மோசமான அனுபவத்தையும் பகிர்ந்திருந்தார். அந்தப் பேட்டியில் அதுகுறித்து பேசிய அவர், "எல்லோரும் எனது ரசிகர்கள் என நான் எப்படி நம்ப முடியும். கடந்த 2005ஆம் ஆண்டு நான் காரி சென்றுகொண்டிருந்தபோது ரசிகர்கள் நின்று கொண்டிருந்தார்கள். அப்போது கண்ணாடியை திறந்து அவர்களுக்கு கை கொடுத்தேன்.
கொஞ்சம் நேரம் கழித்து எனது கையை பார்க்கையில் கை முழுவதும் ரத்தம். யார் என்று தெரியவில்லை என் கையை பிளேடால் கிழித்திருந்தார்கள். அதன் தழும்பு இன்றுவரை இருக்கிறது. அதேபோல் ஹோட்டலில் ஒரு 19 வயது பையன் கையில் பிளேடை பாதியாக உடைத்து மறைந்து வைத்திருந்தான். இதெல்லாம் மீடியாவுக்கு தெரியுமா?" என்று கேட்டார்.
யார் கிழித்தது?: அவரது இந்தப் பேட்டி பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது. அதுமட்டுமின்றி இதுதொடர்பாக ஏகே ரசிகர்கள் ஒரு கருத்தையும் முன்வைக்க ஆரம்பித்திருக்கிறார்கள். அதாவது 2005ஆம் ஆண்டு வாக்கில் அஜித் - விஜய் போட்டி உச்சத்தில் இருந்தது. அந்த கடுப்பில் விஜய் ரசிகர்கள்தான் ஏகேவின் கையை அறுத்திருப்பார்கள் என கூறுகிறார்கள். அதற்கு விஜய் ரசிகர்களோ அதெல்லாம் இல்லை சமயம் பார்த்து இதனை எங்கள் பக்கம் அவர்கள் மடை மாற்றுகிறார்கள்; அஜித் ரசிகர்கள்தான் செய்திருப்பார்கள். அவர்கள் இதுபோன்று சங்கடங்களை ஏற்படுத்தியதால்தான் அஜித் தனது ரசிகர் மன்றத்தையே கலைத்திருப்பார் என பதிலடி கொடுத்துவருகிறார்கள்.


Click it and Unblock the Notifications











