ரஜினிகாந்த் - கமல் சேர்ந்து நடிச்சாலும் 1000 கோடி வசூல் வராது.. ஏன் தெரியுமா?
சென்னை: இயக்குநர் ராஜமெளலி ராம்சரண், ஜூனியர் என்டிஆரை வைத்து இயக்கிய ஆர்ஆர்ஆர் திரைப்படம் 1000 கோடி வசூல் அடித்த நிலையில், மல்டி ஸ்டாரர்கள் படங்கள் மிகப்பெரிய கலெக்ஷனை கொடுக்கும் என்கிற மாயை சினிமா உலகத்தை ஆட்டிப் படைக்கிறது. மார்வெல்ஸ் உருவாக்கிய அவெஞ்சர்ஸ் எண்ட் கேம் திரைப்படம் ஏகப்பட்ட சூப்பர் ஹீரோக்களை ஒன்று திரட்டி மல்டி ஸ்டார் கான்செப்ட்டை மெகா சைஸில் உருவாக்கிய நிலையில், உலகம் முழுவதும் அந்த கான்செப்ட் மீண்டும் அதிகளவில் உலவத் தொடங்கி விட்டது.
அதே ராஜமெளலி இயக்கத்தில் வெளியான பாகுபலி, சுகுமார் இயக்கத்தில் அல்லு அர்ஜுன் நடித்த புஷ்பா 2, பிரசாந்த் நீல் இயக்கத்தில் யஷ் நடித்த கேஜிஎஃப் 2 உள்ளிட்ட படங்களும் 1000 கோடி வசூலை கடந்தன.

ஆனால், ரஜினிகாந்த், அமிதாப் பச்சன், பகத் ஃபாசில், ராணா டகுபதி இணைந்து நடித்த வேட்டையன் திரைப்படம் உலகம் முழுவதும் 250 கோடி தான் வசூல் என தகவல்கள் வெளியாகின.
ஜெயிலர் தந்த நம்பிக்கை: தர்பார், அண்ணாத்த என வரிசையாக ரஜினிகாந்த் நடித்த படங்கள் தோல்வியைத் தழுவிய நிலையில், நெல்சன் இயக்கத்தில் வெளியான ஜெயிலர் திரைப்படம் திடீரென மிகப்பெரிய இண்டஸ்ட்ரி ஹிட் படமாக மாறியது. இத்தனைக்கும் தங்கப் பதக்கம் படத்தின் கதையைத்தான் நெல்சன் பட்டி டிக்கெரிங் பார்த்து பண்ணினார் என கடுமையான விமர்சனங்கள் எழுந்தன. ஆனால், சிவராஜ் குமார், மோகன்லாலின் மாஸ் கேமியோக்கள் மல்டி ஸ்டார் படமாக மாறி ஜெயிலர் படத்துக்கு மிகப்பெரிய வசூல் வேட்டையை தந்தது.
வேட்டையன் வேலைக்கு ஆகல: அதே பாணியை ஞானவேல் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடித்த வேட்டையன் படத்துக்கும் அப்ளை பண்ண நினைத்தார் ரஜினிகாந்த். அமிதாப் பச்சன், பகத் ஃபாசில், ராணா நாயுடு என ஒவ்வொரு ஸ்டேட்டில் இருந்தும் டாப் ஹீரோக்களை அழைத்து வந்து படத்தை பண்ணினார். ஆனால், அந்த படம் சொல்ல வந்த விஷயத்தையே மல்டி ஸ்டாரர்கள் கான்செப்ட் மாற்றி கடைசியில் சொதப்பி விட்டது.

கூலியிலும் அதே ஃபார்முலா: லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கடந்த வாரம் வெளியான கூலி படத்திலும் அதே ஃபார்முலாவை ரஜினிகாந்த் வொர்க்கவுட் பண்ண நினைத்தார். நாகார்ஜுனா, செளபின் சாஹீர், உபேந்திரா மற்றும் பாலிவுட்டில் இருந்து அமீர்கான் வரை கூலி படத்தில் நடித்தாலும், பான் இந்தியா படத்தைக் கொடுக்கும் கதையை லோகேஷ் கனகராஜ் உருவாக்காத நிலையில், கடுமையான விமர்சனங்கள் கிளம்பின. ஆனாலும், ஜெயிலர் படம் அளவுக்கு இந்த கூலி வசூல் செய்யும் என எதிர்பார்க்கப்படுகிறது.

கமல்ஹாசன் உடன் இணைந்து: இந்நிலையில், எப்படியாவது தமிழ் சினிமாவுக்கு 1000 கோடி பாக்ஸ் ஆபீஸ் வசூல் படத்தைக் கொடுத்து விட வேண்டும் என்கிற எண்ணத்தில் தான் ரஜினிகாந்த் மற்றும் கமல்ஹாசன் இருவரும் இணைந்து மீண்டும் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் நடிக்கப் போவதாக தகவல்கள் கசிந்துள்ளன. ஆனால், கமல்ஹாசன் மற்றும் ரஜினிகாந்த் 46 வருடங்கள் கழித்து இணைந்து நடித்தாலும் 1000 கோடி வசூல் வருமா? என்றால் அது கேள்விக்குறிதான்.
கன்டென்ட் கனெக்ட் பண்ணனும்: விஜய் நடித்த கோட் திரைப்படத்திலும் கிளைமேக்ஸில் சிஎஸ்கே மேட்ச் வைத்த நிலையில், இந்திய ரசிகர்களை அது கவரவில்லை என்கிற குற்றச்சாட்டு எழுந்தது. கேஜிஎஃப், ஆர்ஆர்ஆர், புஷ்பா போன்ற படங்கள் இந்திய ரசிகர்களை ஒட்டுமொத்தமாக கனெக்ட் செய்யும் விதமாக படங்கள் உருவாக்கப்பட்டது தான் மிகப்பெரிய வசூல் வேட்டையை நடத்த உறுதுணையாக இருந்தது. கூலி படத்திலும் ரஜினிகாந்த், அமீர்கான், நாகார்ஜுனா, உபேந்திரா, செளபின் நடிக்கிறார்கள் என்பதை தாண்டி லோகேஷ் கனகராஜ் நல்ல படத்தைக் கொடுப்பார் என்றும் அதனால் அந்த படம் 1000 கோடியை அடிக்கும் என்றே எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், அது மிஸ் ஆனது தான் வசூல் குறைய காரணம். ரஜினிகாந்த், கமல்ஹாசன் இணைந்து நடித்தாலும், எல்சியூவின் எண்ட் கேம் படமாகவே வந்தாலும் ஒட்டுமொத்த இந்திய ரசிகர்களையும் கவரவில்லை என்றால் அந்த படங்கள் பெரிய வசூலை அள்ளுவது கடினம் தான்.


Click it and Unblock the Notifications











