வாரிசு ரிலீஸுக்கு வந்த சிக்கல்… ரசிகர்மன்ற நிர்வாகிகளை சந்திக்கும் விஜய்… பரபரக்கும் பனையூர்!
சென்னை: விஜய் நடித்துள்ள வாரிசு திரைப்படம் தெலுங்கில் வெளியாவதில் புதிய சிக்கல்கள் எழுந்துள்ளன.
தெலுங்கு தயாரிப்பாளர்கள் சங்கம் எடுத்துள்ள புதிய முடிவுக்கு தமிழ்த் திரை பிரபலங்கள் பலரும் தங்களது கண்டனங்களை தெரிவித்து வருகின்றனர்.
வாரிசு படத்தின் ரிலீஸுக்கு சிக்கல் எழுந்துள்ள நிலையில், விஜய் தனது ரசிகர்மன்ற நிர்வாகிகளை அவசரமாக சந்திக்கவுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

வாரிசுக்கு வந்த சோதனை
விஜய்யின் வாரிசு திரைப்படம் பொங்கலுக்கு வெளியாகும் என ரசிகர்கள் எதிர்பார்த்து காத்திருக்கின்றனர். வம்ஷி பைடிபள்ளி இயக்கத்தில் தமிழ், தெலுங்கு என இருமொழிகளில் உருவாகும் இந்தப் படத்தின் இறுதிக்கட்ட படப்பிடிப்பு வேகமாக நடைபெற்று வருகிறது. இந்தப் படத்தில் விஜய்யுடன் ராஷ்மிகா மந்தனா, சரத்குமார், எஸ்ஜே சூர்யா, யோகிபாபு, பிரகாஷ்ராஜ் உள்ளிட்ட பலர் நடித்து வருகின்றனர். இந்நிலையில் வாரிசு திரைப்படம் தெலுங்கில் வெளியாவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.

விரக்தியில் தில் ராஜூ
விஜய்யின் வாரிசு திரைப்படம் தெலுங்கில் வாரசுடு என்ற டைட்டிலில் வெளியாகவுள்ளது. இந்தப் படத்தை தெலுங்கு திரையுலகின் பிரம்மாண்ட தயாரிப்பாளரான தில் ராஜூ தயாரித்துள்ளார். இந்நிலையில், கடந்த 2019ம் ஆண்டு தெலுங்கு தயாரிப்பாளர்கள் நடத்திய கூட்டத்தில் தயாரிப்பாளர் தில் ராஜூவும் கலந்துகொண்டார். அப்போது "பொங்கல், தசரா பண்டிகையின்போது டப்பிங் படங்களுக்கு தான் அதிகமான திரையரங்குகள் ஒதுக்கப்படுகின்றன. நேரடி தெலுங்கு படங்களுக்கு குறைவான திரையரங்குகளே ஒதுக்கப்படுவதாகக்" கூறியிருந்தார்.

விஜய் அவசர ஆலோசனை
மேலும், "இனிமேல் தெலுங்கு படங்களுக்கே அதிக முன்னுரிமை கொடுக்க வேண்டும் என்றும், மிச்சம் இருக்கும் திரையரங்குகளை டப்பிங் படங்களுக்கு ஒதுக்கினால் போதும்" என்று கூறியிருந்தார். தில் ராஜூவின் இந்த கருத்து இப்போது அவர் தயாரித்துள்ள வாரிசு படத்துக்கே வினையாகிவிட்டது. தற்போது இதனை சுட்டிக்காட்டி பண்டிகை காலங்களில் நேரடி தெலுங்கு படங்களுக்கு மட்டுமே முன்னுரிமை கொடுத்து அதிக திரையரங்குகளை ஒதுக்கவேண்டும் என தெலுங்கு தயாரிப்பாளர்கள் சங்கம் முடிவெடுத்துள்ளது. இதனால் வாரிசு ரிலீஸுக்கு சிக்கல் ஏற்பட்டுள்ள நிலையில், விஜய் அவசர அவசரமாக அவரது ரசிகர்மன்ற நிர்வாகிகளை சந்திக்க உள்ளார்.

அடுத்த மூவ் என்ன?
கடந்த சில வருடங்களாகவே விஜய் திரைப்படங்கள் வெளியாகும் போது எதாவது பிரச்சினை தலை தூக்கிவிடும். இந்தாண்டு வெளியான பீஸ்ட் மட்டுமே பெரிதாக எந்த பிரச்சினையிலும் சிக்கவில்லை. இந்நிலையில், தற்போது வாரிசு படத்துக்கு தெலுங்கு தயாரிப்பாளர்கள் சங்கத்தால் பிரச்சினை ஏற்பட்டுள்ளதால், பனையூரில் உள்ள அலுவலகத்தில் ரசிகர்மன்ற நிர்வாகிகளை சந்திக்கிறார் விஜய். இந்த சந்திப்பில் வாரிசு படத்தின் ரிலீஸுக்கு சிக்கல் வந்தால் என்ன செய்யலாம் என ஆலோசிக்க உள்ளதாகக் கூறப்படுகிறது. மேலும், அடுத்தடுத்து படங்கள் வெளியாகும் போது எப்படி முன்னெச்சரிக்கையாக இருக்க வேண்டும் என திட்டமிடவுள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

தமிழ்த் திரையுலகின் ஆதரவு
வாரிசு படத்தின் ரிலீஸ் பிரச்சினைக்கு எதிராக சீமான், இயக்குநர்கள் லிங்குசாமி, பேரரசு, சுசீந்திரன் உள்ளிட்டோர் கண்டனம் தெரிவித்துள்ளனர். மேலும், விஜய்க்கு ஆதரவாக கருத்து தெரிவித்துள்ளதோடு, வாரிசு திரைப்படம் எந்த பிரச்சினைகளும் இல்லாமல் வெளியாக வேண்டும் என கூறியுள்ளனர். இந்த நிலையில், விஜய்யும் அவரது ரசிகர்மன்ற நிர்வாகிகளை சந்திக்க உள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


Click it and Unblock the Notifications











