டிசம்பரில் வரிசை கட்டி நிற்கும் படங்கள்..அந்த படமும் ரிலீஸா?..குதூகலத்தில் ரசிகர்கள்!
சென்னை : 2022 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் மட்டும் இத்தனை படங்கள் ரிலீஸ் ஆகிறதா என ரசிகர்களை வியப்படையச் செய்யும் வகையில் பெரிய இயக்குனர்கள் தங்களுடைய படங்களை ஒரே மாதத்தில் வரிசையாக வெளியிட காத்திருக்கின்றனர்.
இதில்,ரசிகர்கள் மிகவும் எதிர்பார்த்த பெரிய நடிகர்களின் படங்களும் இருப்பதால், ரசிகர்கள் டிசம்பர் மாதத்தை எதிர்பார்த்து காத்து இருக்கின்றனர்.
இதனால் சினிமா பிரியர்களுக்கு டிசம்பர் மாதம் முழுவதுமே கொண்டாட்டமாக இருக்கப்போகிறது.

இரு மொழியில்
கோலிவுட், பாலிவுட், ஹாலிவுட்,டோலிவுட் என கலக்கி வரும் நடிகர் தனுஷ், வெங்கி அட்லூரி இயக்கும் வாத்தி என்ற படத்தில் நடித்து வருகிறார். இப்படம் ஒரே நேரத்தில் தமிழ், தெலுங்கு என இரு மொழிகளில் தயாராகி உள்ளது. தமிழில் வாத்தி என்றும் தெலுங்கில் சார் என்றும் தலைப்பு வைக்கப்பட்டுள்ளது. வாத்தி படத்தை சித்தாரா எண்டர்டெயின்மெண்ட்ஸ் நிறுவனம் சார்பில் நாக வம்சி தயாரித்துள்ளார். இப்படத்தின் டீசர் கடந்த சில மாதங்களுக்கு முன் வெளியாகி வரவேற்பை பெற்ற நிலையில், வாத்தி திரைப்படம் வருகிற டிசம்பர் 2ந் தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ளது.

பத்து தல
கெளதம் மேனன் இயக்கத்தில் வெந்து தணிந்தது காடு படம் வெளியாகி கலவையான விமர்சனங்களை பெற்றுள்ள நிலையில், சிம்பு அடுத்ததாக பத்து தல படத்தில் நடித்து வருகிறார். கிருஷ்ணா இயக்கும் இப்படத்தில் கௌதம் கார்த்திக், கெளதம் மேனன், கலையரசன், பிரியா பவானி சங்கர் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர். ஸ்டூடியோ க்ரீன் ஞானவேல் ராஜா தயாரிக்கும் இப்படத்திற்கு ஏ.ஆர் ரஹ்மான் இசையமைக்கிறார். இப்படம் டிசம்பர் 14ஆம் தேதி உலகெங்கும் உள்ள திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.

அவதார்
ஜேம்ஸ் கேமரூன் இயக்கத்தில் 2009ம் ஆண்டு வெளியான அவதார் படம் உலகம் முழுவதும் வசூலை வாரிக்குவித்தது. இப்படத்தில் இடம்பெற்ற கிராபிக்ஸ் தொழில் நுட்பங்களும் ரசிகர்களை வியப்பில் ஆழ்த்தியது. தற்போது அவதார் படத்தின் இரண்டாம் பாகம் தயாராகி அவதார்: தி வே ஆப் வாட்டர் என்று பெயர் வைத்துள்ளனர். இந்த படம் டிசம்பர் மாதம் 16ந் தேதி வெளியாக உள்ளது. தமிழ், தெலுங்கு, இந்தி, கன்னடம், மலையாளம் ஆகிய இந்திய மொழிகள் உள்பட 160 மொழிகளில், அவதார் 2 ரிலீஸாக உள்ளது.

ருத்ரன்
நடிகர் ராகவா லாரன்ஸ் நடிக்கும் 'ருத்ரன்' திரைப்படம் டிசம்பர் 23-ம் தேதி வெளியாகும் என படக்குழு அறிவித்துள்ளது. இந்த படத்தில் நடிகர் ராகவா லாரன்ஸ் கதாநாயகனாக நடிக்கிறார். பிரியா பவானி சங்கர் கதாநாயகியாக நடிக்கிறார். சரத்குமார் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார்.

குஷி
ஷிவா நிர்வாணா இயக்கத்தில் விஜய் தேவரகொண்டா மற்றும் சமந்தா நடிக்கும் காமெடி கலந்த ரொமான்டிக் திரைப்படம் குஷி. இப்படம் டிசம்பர் மாதம் 23ம் தேதி வெளியிட உள்ளதாக படக்குழு அறிவித்துள்ளது. படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் சமீபத்தில் வெளியாகி படத்தின் மீதான எதிர்பார்ப்பை அதிகரித்துள்ளது.


Click it and Unblock the Notifications











