TVK Maanadu: ஒன்றரை லட்சம் சேர்கள்.. கடைசியில் ஜகா வாங்கிய ஒப்பந்ததாரர்கள்.. கை கொடுத்த சேட்டன்கள்!
சென்னை: மொத்த தமிழ்நாடும் தற்போது அதிகம் பேசிக் கொண்டிருக்கும் விஷயம் என்றால் அது நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் இரண்டாவது மாநில மாநாடு தான். இந்த மாநாடு நாளை நடைபெறவுள்ளது. இதற்கான ஏற்பாட்டுப் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்றுக் கொண்டுள்ளது. இப்படி இருக்கும்போதும், மாநாட்டிற்காக ஒன்றரை லட்சம் சேர்கள் வாடகைக்கு ஒப்பந்தம் செய்யப்பட்டிருந்த நிலையில் தற்போது நான்கு ஒப்பந்ததாரர்கள் சேர்கள் தர மறுத்துள்ளனர். இதனால் கேரளாவில் இருந்து கொண்டு வர ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது என தகவல் வெளியாகியுள்ளது.
கடந்த 2024 ஆம் ஆண்டு தனது அரசியல் கட்சியைத் தொடங்கிய விஜய், அதே ஆண்டில் முதல் மாநில மாநாட்டினை நடத்தினார். அதன் பின்னர் தமிழ்நாடு முழுவதும் தனது கட்சியின் வாக்குச்சாவடி முகவர்கள், கட்சி நிர்வாகிகள் என கட்சி சார்ந்த நிகழ்ச்சிகளில் அவ்வப்போது அட்டனன்ஸ் போட்டுக் கொண்டு இருந்தார். விஜய் கட்சியின் தலைவராக ஆவதற்கு முன்னர், கட்சியில் இரண்டாம் கட்டத் தலைவர்கள் உருவாகிவிட்டார்கள். இதனால் கட்சியில் சுப்ரீம் பவர் விஜய் தான் என்றாலும் இரண்டாம் கட்டத் தலைவர்களுக்கும் அவர்களுக்குரிய அதிகாரம் கொடுக்கப்பட்டிருந்தது.

தமிழ்நாட்டில் புதிதாக கட்சி தொடங்கிய யாரும் எதிர்கொள்ளாத அளவுக்கு விஜய் விமர்சனங்களை எதிர்கொண்டு வருகிறார். இப்படி இருக்கும்போது அவரது கட்சி நிகழ்வுகள் என்றாலே ஆளும் தரப்பில் இருந்து, வாழ்மொழி அழுத்தம் கொடுக்கப்பட்டு, அடுத்தடுத்து நெருக்கடிகள் கொடுக்கப்படுகிறதோ என்ற பேச்சுக்கள் அரசியல் தளத்தில் உள்ளது.
ம்துரை மாநாடு: இந்நிலையில் தனது இரண்டாவது மாநில மாநாட்டிற்கு விஜய் மதுரையைத் தேர்வு செய்துள்ளார். மாநாட்டுப் பணிகளும் சிறப்பாக சென்று கொண்டுள்ளது. ஏற்கனவே விக்கிரவாண்டியில் நடைபெற்ற மாநாட்டைக் காட்டியிலும் மதுரை மாநாடு மிகப்பெரிய அளவில் நடத்த கட்சி சார்பில் திட்டமிடப்பட்டுள்ளது. இந்த மாநாட்டில் கலந்து கொள்ள தமிழ்நாடு மட்டுமல்ல, அண்டை மாநிலங்களில் இருந்தும் ரசிகர்கள் மதுரையை நோக்கி வந்து கொண்டு இருக்கிறார்கள் எனக் கூறலாம்.

விஜய்க்கு நெருக்கடி: இப்படி இருக்கும்போது, இந்த மாநாட்டுப் பணிகள் வெகு சிறப்பாக நடந்து கொண்டு இருக்கையில், விஜய்க்கு கடைசி நேரத்தில் தலைவலியை ஏற்படுத்தும் சம்பவம் ஒன்று நடைபெற்றுள்ளது. அதாவது, மாநாட்டில் கலந்து கொள்பவர்கள் அமர சுமார் ஒன்றரை லட்சம் இருக்கைகள் போட திட்டமிட்டுள்ளனர். இதற்காக 5 பேரிடம் ஒப்பந்தமும் செய்துள்ளார்கள். இப்போது அந்த 5 பேரில் நான்கு ஒப்பந்ததாரர்கள் இருக்கைகள் வழங்க முடியாது எனக் கூறியுள்ளார்கள்.
கைகொடுத்த சேட்டனகள்: இதனை முதலிலேயே சொல்லாமல், நாளை மாநாடு எனும்போது இன்று கூறியுள்ளார்கள். இதனால், மாநாட்டிற்கு நெருக்கடி ஏற்படும் என்ற பேச்சு ஓடிக் கொண்டு உள்ளது. இதனால் தமிழக வெற்றிக் கழகத்தின் இரண்டாவது மாநில மாநாட்டிற்கான இருக்கைகள் அண்டை மாநிலமான கேரளாவில் இருந்து ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது என்ற தகவலும் வெளியாகியுள்ளது. இந்த தகவல் தற்போது இணையத்தில் வேகமாக பரவி வரும் நிலையில், பலரும் தளபதி விஜய்யை மதுரை ஒப்பந்ததாரர்கள் நம்பவைத்து ஏமாற்றி விட்டார்கள். இவர்களது இந்த செயல் மதுரை மண்ணுக்கு காலத்திற்கும் அவப்பெயரை வாங்கிக் கொடுக்கும் என பேசி வருகிறார்கள்.


Click it and Unblock the Notifications











