twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    சகலகலா வல்லவன் பட வெற்றி ருத்ரய்யாவுடன் நான் சேர்வதைத் தடுத்தது!- கமல்

    By Shankar
    |

    இயக்குநர் ருத்ரய்யாவின் முதல் படத்தின் நாயகனான கமல் ஹாஸன், அவருடனான தனது அனுபவங்கள் நினைவுகளை தி இந்து நாளிதழில் பகிர்ந்து கொண்டுள்ளார்.

    இதோ கமலின் நினைவுப் பகிர்வு...

    "சினிமாவில் எனது வழிகாட்டிகளில் ஒருவரான அனந்து தான் முதன்முதலில் ருத்ரய்யா குறித்து என்னிடம் பேசியது. 'திரைப்படக் கல்லூரியிலிருந்து புத்திசாலி மாணவர்' என குறிப்பிட்டார். ருத்ரய்யாவின் இயற்பெயர் ஆறுமுகம். அவரை அப்படித்தான் நாங்கள் முதலில் அறிந்திருந்தோம்.

    சென்னை திரைப்படக் கல்லூரியில் தங்கப் பதக்கம் பெற்ற துடிப்புள்ள இளைஞர். அங்கு மாணவர்கள் யூனியனுக்குத் தலைவராக இருந்து தீவிரமாக செயல்படும் போராளியாகவே பெயர் பெற்றிருந்தார். தமிழ் சினிமாவை உருமாற்ற வேண்டும் என்ற ஆர்வத்தோடு இருந்த நான், ஆர்.சி. சக்தி, அனந்து ஆகியோர் அடங்கிய எங்கள் குழுவிற்கு சீக்கிரத்திலேயே நெருக்கமானார்.

    Kamal Hassan shares his experience with Rudhrayya

    நாங்கள் சந்தித்தால் மணிக்கணக்கில் எங்கள் பேச்சு நீளும் என்பதால் எங்களது சந்திப்பு குறித்து அச்சப்பட்டவர்களும் இருந்தனர். அபூர்வ ராகங்கள் திரைப்படத்தில் பிரசன்னா என்ற பாத்திரத்தில் ஒன்றி நடிப்பதற்கு ருத்ரய்யா எனக்கு உதவினார். அந்தப் பாத்திரத்தைப் போலவே ருத்ரய்யாவும் இடதுசாரி கொள்கை உடையவர் என்பதால், அவரால் எனக்கு சிறப்பாக வழிகாட்ட முடிந்தது. முதன்முதலில் ஆறுமுகத்துடன் எனது நினைவுகள் இதுவே.

    எங்களது உரையாடல்கள் எனக்கு ஞாபகத்தில் உள்ளன. கோடார்ட், போலன்ஸ்கி, ரோஸெலினி, பிரெஸ்ஸான் ஆகிய இயக்குநர்களது படங்கள் எங்கள் பேச்சில் அடிக்கடி வந்து போகும். சென்னை திரைப்படக் கல்லூரியில் அவருக்கு இருந்த செல்வாக்கை வைத்து, வெளிநாட்டுத் திரைப்படங்களை வரவழைத்து, பார்த்து, அதை ஒரு நாள் தாமதமாக பூனே திரைப்படக் கல்லூரிக்கு அனுப்புவோம். எல்டாம்ஸ் சாலையில் ஒரு சிறிய திரைப்பட விழாவைப் போலவே இருக்கும்.

    நாங்கள் பெருமைபட்டுக் கொள்ளுமாறு, தமிழ் சினிமாவை அடுத்தத் தளத்திற்கு எடுத்துச் செல்லுமாறு ஒரு திரைப்படத்தை எடுக்க நினைத்தோம். அதன் விளைவே 'அவள் அப்படித்தான்'.

    கோபத்தால் உந்தப்பட்ட ஆளாக ஆறுமுகம் எனக்குத் தோன்றினார். ஒருவேளை அதனால்தான் தன் பெயரை ருத்ரய்யா என்று மாற்றிக் கொண்டார் என நினைக்கிறேன்.

    அவரது முதல் படம் எங்கள் குழுவின் செல்லப் படமாக இருந்தது. அதனால் வெறும் பேச்சு மட்டுமல்ல, செய்தும் காட்டுவோம் என மற்றவர்களிடமிருந்து நாங்கள் வித்தியாசப்பட்டு நின்றோம். ஒரு வருடத்திற்கு 20 படங்கள் வரை நான் நடித்த காலகட்டம் அது. எனவே, என் ஓய்வு நேரத்தில்தான் படப்பிடிப்பு நடந்தது. அப்படி இருந்தும் படத்திற்கு எங்களால் சிறப்பான வடிவத்தைத் தர முடிந்தது.

    அவள் அப்படித்தான் படத்தின் முதல் காட்சியில், நான் கேமராவைப் பார்த்து "கொஞ்சம் லெஃப்ட்ல உட்காருங்க" என்று கூறுவது, இடதுசாரி சிந்தனையை ரசிகர்கள் வளர்த்துக் கொள்ளவேண்டும் என ஊக்குவிக்கும் குறியீடுதான். அப்போதைய தமிழ் சினிமாவின் மீது இருந்த கோபத்தின் விளைவாகவே அவள் அப்படித்தான் துவங்கப்பட்டது. சலிப்பை ஏற்படுத்தும் படமாக அது மாற வாய்ப்பிருந்தது, ஆனால் அப்படி ஆகவில்லை.

    பணத் தட்டுப்பாடு இருந்ததால் தொழில்நுட்ப ரீதியில் படத்துக்கு சிறப்பு சேர்க்க முடியாமல் போனது. அப்போது, இளையராஜா பிஸியாக இருந்தார். ஆனாலும் எங்களுக்காக அவரை வலுக்கட்டயமாக இசையமைக்க வைக்க முடிந்தது.

    கையில் கிடைத்த கேமராவைக் கொண்டு, எங்களை வைத்து ருத்ரய்யா நடத்திய படப்பிடிப்பு ஆச்சரியமானதாக இருந்தது. எங்கள் நோக்கம் ஒழுங்காக இருந்ததால், சிறிய பட்ஜெட்டாக இருந்தாலும் அனந்து, ரஜினி, ஸ்ரீப்ரியா போன்றோர் படத்தில் இணைய ஒப்புக் கொண்டனர். பெண் விடுதலையைப் பற்றி அனந்து அப்போதே எழுதினார்.

    படப்பிடிப்பு சமயத்திலும் நாங்கள் வெளிநாட்டுத் திரைப்படங்கள் குறித்து நிறையப் பேசுவோம். ஒவ்வொரு காட்சிக்கு முன்பும், இதை கோடார்ட் எடுத்தால் எப்படி எடுப்பார், கேமராவின் கோணம் எப்படி இருக்கும் என பேசிக் கொண்டிருப்போம். ஐந்து மாதங்கள், இரண்டு இரண்டு மணி நேரங்களாக எங்கள் படப்பிடிப்பு நடந்தது. படத்தைப் பார்த்தபோது வியப்பாக இருந்தது.

    'ராஜா என்னை மன்னித்துவிடு' என்ற ருத்ரய்யாவின் இரண்டாவது படத்திலும் நான் நடிப்பதாக இருந்தது. ஆனால், துரதிர்ஷ்டவசமாக அந்தப் படத்தை எங்களால் தொடங்க முடியவில்லை. அந்தப் படத்தின் கதை சிறப்பாக இருந்தது. ஆனால் 'சகலகலா வல்லவன்' போன்ற படங்களின் வெற்றி, எங்கள் கூட்டணியை தடுத்தது. தமிழ் சினிமாவில் ராஜபார்வைக்குப் பிறகு என் மீதான நம்பிக்கை மிகுந்தது. அதே வேளையில், 'சகலகலா வல்லவன்' திரைப்படத்தில் நான் நடித்தது ருத்ரய்யாவுக்கு பிடிக்கவில்லை.

    வணிக ரீதியிலான படங்களில் நடிப்பதன் மூலம் கிடைக்கும் பணத்தைக் கொண்டுதான் நாம் நினைக்கும் சிறந்த படங்களை எடுக்க முடியும் என்று அவரை சமாதனப்படுத்தியது என் நினைவில் உள்ளது. அப்போது அவர் 'கிராமத்து அத்தியாயம்' திரைப்படம் எடுத்தார். அதில் எங்களுக்குள் சில கருத்து வேறுபாடு நிலவியது. அந்தக் கரு எனக்குப் பிடித்திருந்தாலும், அவள் அப்படித்தானில் இருந்த அடர்த்தி அதில் இல்லை.

    ருத்ரய்யா வித்தியாசமான மனிதர். சிறந்த விமர்சனங்களைவிட, வணிகரீதியிலான வெற்றியையே நாம் நினைவில் வைத்துக் கொண்டாடுவது பரிதாபகரமானது. ருத்ரய்யாவிடம் பல படங்களுக்கான கதைகள் இருந்தன. ஆனால், அவரால் இரண்டு படங்களை மட்டுமே எடுக்க முடிந்தது. இப்படிப்பட்ட கலைஞர்கள் விரக்தியடைக் கூடாது என்றுதான் மேற்கத்திய நாடுகளில் 'சன்டான்ஸ்' போன்ற திரைப்பட விழாக்கள் நடத்தப்படுகின்றன. அவள் அப்படித்தான் படத்தை நினைவுகூர்வதன் மூலம் மாற்று சினிமாவுக்கான தளத்தை அமைக்க சிலர் முயற்சிக்கலாம்.

    தனது படைப்பின் மீது அதீதமான பெருமை கொண்டவராக ருத்ரய்யா இருந்தார். வேறு யாரிடமும் பணியாற்ற அவர் விரும்பவில்லை. சினிமாவைப் பற்றி நிறைய தெரிந்து வைத்திருந்ததால், தன்னை யாரும் கட்டுப்படுத்துவதை அவர் விரும்பவில்லை. தான் கட்டுப்படுத்துவதையே அவர் விரும்பினார். அவள் அப்படித்தான் திரைப்பட தயாரிப்பில் இருந்த தோழமை, மற்ற படங்களிலும் இருக்கும் என்று அவர் நினைத்தார். ஆனால் அது நடக்கவில்லை.

    ஒரு வருடத்திற்கு முன்னால் அவரை சந்தித்தேன். அப்போதும்கூட, அடுத்த படம் எடுப்பதற்கான நம்பிக்கையை அவர் விட்டுவிடவில்லை. உங்களில் சிலருக்குத் தெரிந்திருக்கலாம். படம் எடுப்பது போதையைப் போல. சிலர் விலகினாலும், சிலர் தொடர்ந்து முயற்ச்சித்திக் கொண்டே இருப்பார்கள். ருத்ரய்யா இரண்டாம் வகையைச் சேர்ந்தவர். அதற்காக அவரை நான் மதிக்கிறேன். துறையிலிருந்து அவருக்கும் இன்னும் உதவிகள் செய்யப்பட்டிருக்கலாம். பாரதியின் கவிதைகளுக்காக அவரை எப்போதும் நினைவில் வைத்துக் கொள்வது போல, ருத்ரய்யாவும் அவர் எடுத்த ஆகச் சிறந்த படத்திற்காக நினைவில் நிற்பார்.

    தமிழ் சினிமாவின் அடித்தளத்தையே உலுக்கிய 'அவள் அப்படித்தான்' எடுத்ததற்காக இந்த உலகம் அவரை என்றும் நினைவுகூரும். இன்றும் கல்லூரி மாணவர்கள் பலர், படத்தைப் பார்த்து, இது எப்படி இவர்களால் சாத்தியமானது என்று யோசிக்கின்றனர். சினிமாவின் மீது காதல் கொண்ட ஒருவராக ருத்ரய்யா என் நினைவில் நிற்கிறார். ஒரு காட்சி சிறப்பாக வரவேண்டும் என்றால், தெர்மகோலை தூக்கிப் பிடிக்கும் வேலை செய்யவும் தயங்கமாட்டார் ருத்ரய்யா.

    English summary
    Actor Kamal Hassan is sharing his experience with late director Rudhrayya.
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X