twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    சென்னை சர்வதேச திரைப்பட விழா: வழக்கு எண் 18/9, சாட்டை திரைப்படங்களுக்கு விருது

    By Mayura Akilan
    |

    10th Chennai International Film Festival
    சென்னை: சென்னையில் நடைபெற்ற 10-வது சர்வதேச திரைப்படவிழாவில் வழக்கு எண் 18/9 படத்திற்கு முதல்பரிசு வழங்கப்பட்டது. விழாவில் சாட்டை படத்திற்கு 2 வது பரிசும், பீட்சா, மவுனகுரு படங்களுக்கு விசேச விருதுகளும் வழங்கப்பட்டன. பாலிவுட் சூப்பர் ஸ்டார் அமிதாப்பச்சன் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு 11 லட்சம் ரூபாய் நன்கொடை வழங்கினார்.

    10 வது சர்வதேச திரைப்படவிழா சென்னையில் கடந்த 12-ந் தேதி தொடங்கி, 20-ந் தேதி வரை நடைபெற்றது. இதன் நிறைவு விழா, சென்னை உட்லண்ட்ஸ் தியேட்டரில் நேற்று இரவு நடைபெற்றது. இந்தி நடிகர் அமிதாப்பச்சன் சிறப்பு விருந்தினராக பங்கேற்றுப் பேசினார்.

    முதலில் வணக்கம் என்று தமிழில் பேச்சைத் தொடங்கிய அவர், பின்னர் ஆங்கிலத்தில் பேசினார். வாழ்க்கையில், பெண்களுக்கு 50 சதவீத பங்கு இருக்கிறது. பெண்களுக்கு எதிராக இப்போது நடக்கும் சில கொடுமைகளை கேள்விப்படும் போது, மனம் பதறுகிறது.

    தியேட்டருக்கு போய் படம் பார்க்க போகும் போது கியூவில் நின்று டிக்கெட் வாங்குகிறோம். பக்கத்து இருக்கையில் யார் உட்கார்ந்திருக்கிறார்கள்? என்று பார்ப்பதில்லை. அவர் என்ன சாதி, என்ன மதம் என்று பார்ப்பதில்லை. படத்தில் வரும் நகைச்சுவைக்கு சிரிக்கிறோம். சோக காட்சியை பார்த்து அழுகிறோம். சாதி, மதம் பார்க்காமல், மனிதர்களை ஒன்றாக இணைப்பது சினிமா ஒன்று தான். அந்த சினிமாவில் நானும் இருப்பதற்காக பெருமைப்படுகிறேன்.

    உலகிலேயே இந்தியாவில் தான் அதிக படங்கள் தயாராகின்றன. அதிலும் குறிப்பாக, தென்னிந்தியாவில் தான் அதிக படங்கள் தயாராகின்றன. மிக சிறந்த திறமைசாலிகள் இங்கே தான் இருக்கிறார்கள்.

    தமிழ் சினிமா கலைஞர்கள் ஒற்றுமையுடன் செயல்படுகிறார்கள். இந்த ஒற்றுமை வேறு எங்கும் கிடையாது. மும்பையில் இல்லாத உழைப்பும், ஒழுக்கமும், நேரம் தவறாமையும் தமிழ் சினிமாவில் இருக்கிறது. சினிமா மட்டுமே எல்லோரையும் ஒற்றுமையாக வைத்து இருக்கிறது.

    தமிழ் சினிமாவில் எனக்கு நிறைய நண்பர்கள் இருக்கிறார்கள். பல தொழில்நுட்ப கலைஞர்களுடன் நான் வேலை செய்து இருக்கிறேன். நாங்கள், உங்களிடம் கற்றுக்கொள்ள நிறைய இருக்கிறது.

    சுஹாசினி இனி ஒவ்வொரு வருடமும் சர்வதேச பட விழாவுக்கு என்னை அழைக்க வேண்டும். விழா நடைபெறும் அரங்கை பெருக்கி துடைக்க நான் தயாராக இருக்கிறேன். இருக்கைகளை மேடைக்கு கொண்டு வந்து போடுவேன். வருகிற விருந்தினர்களை வரவேற்பேன்."என்று அமிதாப்பச்சன் பேசினார்.

    11 லட்சம் நன்கொடை

    இதனைத் தொடர்ந்து சர்வதேச படவிழாவுக்கு, அமிதாப்பச்சன் ரூ.11 லட்சம் நன்கொடையாக வழங்கினார்.

    சர்வதேச படவிழா போட்டி பிரிவில், 12 தமிழ் படங்கள் திரையிடப்பட்டன. அதில், 'வழக்கு எண் 18/9′ படத்துக்கு முதல் பரிசும், 'சாட்டை' படத்துக்கு 2-வது பரிசும் வழங்கப்பட்டது. பரிசுகளை டைரக்டர்கள் பாலாஜி சக்திவேல், லிங்குசாமி, எம்.அன்பழகன், பிரபுசாலமன் ஆகியோர் அமிதாப்பச்சனிடம் இருந்து பெற்று கொண்டார்கள். 'பீட்சா,' 'மவுன குரு' ஆகிய 2 படங்களுக்கும் விசேஷ நடுவர் விருது வழங்கப்பட்டது.

    English summary
    The 10th Chennai International Film Festival (CIFF),presented by The Hindu and Casa Grande Private Ltd., and organised by the Indo Cine Appreciation Foundation was concluded on Thursday (Dec 20) at Woodlands theatre, Chennai. Film icon Amitabh Bachchan was chief guest at the event who gave away prizes to the winners of film and documentary contests. Amitabh also donated Rs. 11 lakh towards the CIFF as a token of appreciation.
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X