»   »  கேன்ஸ் விருதுக்கு பருத்தி வீரன்

கேன்ஸ் விருதுக்கு பருத்தி வீரன்

Subscribe to Oneindia Tamil

பட்டி தொட்டியெங்கும் பட்டையைக் கிளப்பிக் கொண்டிருக்கும் பருத்தி வீரன் கேன்ஸ் திரைப்பட விழாவுக்கு அனுப்பப்பட்டுள்ளதாம்.

அமீர் தயாரித்து, இயக்கி, பின்னர் ஞானவேல்ராஜா கைக்கு மாறி, தியேட்டர்களில் ரிலீஸாகி, அலப்பறையாக ஓடிக் கொண்டிருக்கும் பருத்தி வீரன், வசூலிலும், விமர்சனங்களிலும் பின்னி எடுத்து வருகிறான்.

அமீரின் அருமையான இயக்கம், எடுத்துக் கொண்ட கதைக்களம், ராசியில்லாதவர் என்று கூறப்பட்ட பிரியா மணியையே பிரமிக்கும் வகையில் நடிக்க வைத்தது, கார்த்திக்கு சூப்பர் அறிமுகம் ஏற்படுத்திக் கொடுத்தது என ஏகப்பட்ட பிளஸ் பாயிண்டுகளுடன் வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கிறது பருத்தி வீரன்.

இந்தப் படத்தைப் பார்த்து விட்டு பலரும் இப்போது, சாப்டாச்ல, போறோம்ல, வர்றோம்ல என்று பேச ஆரம்பித்து விட்டார்கள். பருத்தி வீரனின் வெற்றி அமீருக்குக் கிடைத்த வெற்றி. ஆனால் இந்த வெற்றியால் வெளிறிப் போய் விடாமல் அடுத்த படமான கண்ணபிரான் குறித்த தீவிர சிந்தனைக்குத் தாவி விட்டார் அமீர்.

இப்போது பருத்தி வீரன், கேன்ஸ் திரைப்பட விழாவுக்கு அனுப்பப்பட்டுள்ளதாம். ஆஸ்கர் விருதுக்குப் பிறகு உலக அளவில் திரையுலகினரை அதிகம் கவர்ந்துள்ள திரை விழா கேன்ஸ் திரை விழாதான்.

இங்கு பல்வேறு நாட்டு படங்களும் திரையிடப்படும். ஆஸ்கரைப் போல இல்லாமல், பன்னாட்டு மொழிப் படங்களும் இங்கு விருதுகளைப் பெறும்.

கேன்ஸ் விருதுக்கு பருத்தி வீரனை கடைசி நேரத்தில்தான் அனுப்பியுள்ளனர். தற்போது திரையரங்குகளில் ஓடிக் கொண்டிருக்கும் படத்தை அப்படியே அனுப்பி வைத்துள்ளனராம். எதையும் எடிட் செய்யவில்லையாம்.

ஏற்கனவே அமீரின் ராம் ஆசிய திரைப்பட விழாவில் கலந்து கொண்டு விருது பெற்றது. ஹீரோ ஜீவா சிறந்த நடிகராகவும், யுவன் ஷங்கர் ராஜா இசையமைப்பாளராகவும் தேர்ந்தெடுக்கப்பட்டனர் என்பது நினைவிருக்கலாம்.

அதே வரிசையில் பருத்தி வீரனும் அமீருக்கும், தமிழ் சினிமாவுக்கும் உலக அளவில் புதுக் கெளரவத்தைத் தேடித் தரும் என்று திரையுலகினர் நம்பிக்கை தெரிவிக்கின்றனர்.

கலக்கு தமிழா, கலக்கு

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil