»   »  விருதுக்கு சிபாரிசா: சேரன் கோபம்!

விருதுக்கு சிபாரிசா: சேரன் கோபம்!

Subscribe to Oneindia Tamil

சிபாரிசு செய்துதான் விருது கிடைக்க வேண்டும் என்றால் அந்த விருதே எனக்குத் தேவையே இல்லை என்றுஇயக்குனர் சேரன் கூறியுள்ளார்.

சமீபத்தில் அறிவிக்கப்பட்ட தேசிய திரைப்பட விருதுகளில் சேரன் இயக்கிய ஆட்டோகிராப் படத்திற்கு 3விருதுகள் கிடைத்தன. அதில் இடம்பெற்ற ஒவ்வொரு பூக்களுமே பாடலை எழுதிய பா.விஜய், பாடிய சித்ராமற்றும் சிறந்த பொழுது போக்குப் படமாக ஆட்டோகிராப் 3 விருதுகளை தட்டிச் சென்றது.

இருப்பினும் அருமையான இந்தப் படத்தை இயக்கிய சேரனுக்கு விருது கிடைக்கவில்லை. மேலும்,ஆட்டோகிராபுக்கு கிடைத்த இரு விருதுகள் குறித்து சர்ச்சைகள் கிளம்பியுள்ளன.

இப் படத்தை சிறந்த பொழுது போக்குப் படமாக தேர்ந்தெடுத்ததற்குப் பதிலாக அகில இந்திய அளவில் சிறந்தபடமாக தேர்வு செய்திருக்க வேண்டும் என்று பேச்சு கிளம்பியுள்ளது.


அதேபோல, மத்தியில் ஆளும் கட்சிகளில் ஒன்றாக உள்ள திமுகவின் பலமான சிபாரிசின் பேரில்தான்பா.விஜய்க்கு விருது கிடைத்ததாகவும் ஒரு தகவல் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

விருது அறிவிப்பதற்கு சில நாட்களுக்கு முன்புதான் சென்னையில் நடந்த நிகழ்ச்சியில் பா.விஜய்யின் 12கவிதைத் தொகுப்புகளை திமுக தலைவர் கருணாநிதி வெளியிட்டு விஜய்யை வெகுவாகப் புகழ்ந்தார்.மேலும் வித்தகக் கவிஞன் என்ற பட்டத்தையும் வழங்கிப் பாராட்டினார் கருணாநிதி.

ஆட்டோகிராப் படத்திற்கு 3 விருதுகள் கிடைத்ததற்கு மகிழ்ச்சி தெரிவித்த சேரன், எனக்கும் சிறந்தஇயக்குனருக்கான விருது கிடைக்கும் என்று எதிர்பார்த்தேன். ஆனால் கிடைக்காதது ஏமாற்றமாக உள்ளது எனவெளிப்படையாகவே கருத்துத் தெரிவித்திருந்தார்.

இந்த சோகத்தை அவர் தற்போது விலாவாரியாக வெளிப்படுத்தியுள்ளார்.


ஆட்டோகிராப் படத்தில் எனக்கு விருது கிடைக்காதது ஆதங்கத்தையும், மன வருத்தத்தையும் ஏற்படுத்தியுள்ளது.தமிழக மக்கள் இந்தப் படத்திற்கு நிறைய விருதுகளை எதிர்பார்த்தார்கள். ஆனால் கிடைக்கவில்லை. எனக்கும்இதில் ஏமாற்றம்தான். ஆனால் அதற்காக நாம் வருத்தப்படக் கூடாது. (!!!)

எதுவுமே தானாக கிடைக்க வேண்டும். சிபாரிசு செய்துதான் கிடைக்க வேண்டும், ஆள் பிடித்துதான் காரியத்தைசாதிக்க வேண்டும் என்றால் அப்படிப்பட்ட விருதே எனக்குத் தேவையில்லை. அதற்குப் பெயர் விருதேகிடையாது. நமது திறமைக்கு மதிப்பு கொடுத்து விருது கிடைக்க வேண்டும்.

விருது பெற முழுத் தகுதியும் உள்ளது என்பதை அறிந்து தான் நமது படத்தை விருதுக்கு நாம் அனுப்புகிறோம்.அப்படியும் கிடைக்காவிடில் அதற்காக வருத்தப்படக் கூடாது. விருதுக்குரிய தகுதிகளை அவர்கள் புரிந்துகொள்ள மறுக்கிறபோது, முடியாதபோது நம்மால் என்ன செய்ய முடியும்?

இதுபோன்ற நிகழ்வுகள் எதிர்காலத்தில் நடந்து விடக் கூடாது என்பதற்காகத்தான் எனது ஆதங்கத்தைவெளிப்படையாகக் கூறுகிறேன். இதுபோல தொடர்ந்து நடந்தால் இளைய தலைமுறை படைப்பாளிகளை அதுசோர்வடைய வைத்து விடும்.

இந்த வருடம் இல்லாவிட்டால் என்ன, அடுத்த வரும் பார்த்துக் கொள்ளலாம் என்றார் சேரன்.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil