»   »  சினிமாக்காரன் சாலை 21: ஓ காதல் கண்மணி... முற்றிய மரமாகிவிட்டாரா மணிரத்னம்?

சினிமாக்காரன் சாலை 21: ஓ காதல் கண்மணி... முற்றிய மரமாகிவிட்டாரா மணிரத்னம்?

Posted By:
Subscribe to Oneindia Tamil

-முத்துராமலிங்கன்

மணிரத்னத்திடமிருந்து பொறுப்பான நல்ல படங்களை நான் எப்போதுமே எதிர்பார்ப்பதில்லை. அப்படியே பொறுப்பான படங்கள் என்று கொண்டாடப்பட்ட படங்களும், 'அந்த அரபிக்கடலோரம் ஏ ஹம்மா ஹம்மா' போன்ற குத்துப் பாடல்கள் அடங்கிய அக்கதைக்கு சற்றும் ஒவ்வாத மசாலா சமாச்சாரங்களை அதிகம் கொண்டவை. சினிமா என்பது வியாபாரம். அதில் எவ்வளவு சம்பாதிக்கிறோம் என்பதில்தான் வெற்றியே அடங்கியிருக்கிறது என்று உறுதியாக நம்புபவர் 'மணி'ரத்னம். கலை நேர்மை மணியைப் பொறுத்தவரை 'கிலோ என்ன விலை?'.

'அலைபாயுதே'வுக்கு அப்புறம் ' என் பணி சினிமா எடுப்பது. வெற்றி தோல்விகளைப் பற்றி நான் கவலை கொள்வதில்லை' என்று சொல்லாமல் மவுனமாக அதை தன் படங்களில் உணர்த்தி வந்த மணிரத்னத்துக்கு ஒரு வணிகரீதியான வெற்றி தேவை என்று தோன்றியிருக்கும் என்பதை இப்படத்துக்கு அவர் எடுத்துக்கொண்டிருக்கும் கதையே காட்டிக் கொடுக்கிறது.

Cinemakkaran Saalai 21

தாலி கட்டிக்கொண்டு வெளியே சொல்லாமல் கூத்தடித்தால் அது 'அலை பாயுதே'. தாலியே கட்டிக் கொள்ளமாட்டோம். ஆனால் கூத்தடிப்போம் என்றால் அது 'ஓ காதல் கண்மணி'. ரெண்டு வரிகளில் சொல்வதானால் கதை இதுதான்.

ஆனால் ரெண்டேகால் மணி நேரத்துக்கு இருந்தால்தான் படம் என்பதுபோல் கொஞ்சம் வளவளவென்று எழுதினால்தான் கதை என்று திருப்தி அடைகிறோம்.

'வேஸ்ட் மாம்பலம்' பிராமின் பையன் துல்கர் சல்மான். வீடியோ கேம் டெவலப்பர். இவருக்கு பெரிய தொழில் அதிபர் ஆகி அமெரிக்காவில் செட்டில் ஆகவேண்டுமென்ற ஆசை. கோவை மில் அதிபர் மகள் நித்யா மேனன். இவருக்கு கட்டிட கலையில் ஆர்வம். பாரிஸில் செட்டில் ஆகவிரும்புகிறார்.

இருவரும் தங்கள் தொழில் நிமித்தமாக மும்பையில் இருக்கிறார்கள். தோழியின் திருமணத்தில் சந்தித்து,ஒரு வார்த்தை கூட பேசிக்கொள்ளாமல் சைகையிலேயே செல்போன் எண் வாங்கி இரண்டாவது சந்திப்பிலேயே காதலாகி, மூன்றாவது சந்திப்பிலேயே காமமாகி கட்டிட கலையை மறந்து முழுநேரமும் முத்தமழை பொழிந்து, கட்டில் கலையிலேயே மூழ்கித் திளைக்கிறார்கள்.

Cinemakkaran Saalai 21

படம் முழுக்க பரஸ்பரம் எத்தனை முத்தங்கள் கொடுத்துக்கொண்டார்கள் என்று எண்ணிச் சொல்பவர்களுக்கு ஒரு மவுஸ் இலவசம்.

நித்யா அம்மாவுக்கு திருமணத்தில் ஏற்பட்ட கசப்பான அனுபவத்தால் திருமண வாழ்க்கை பற்றி அபிப்ராயம் இல்லை. மாம்பலம் அம்பிக்கும் அதே ஷேம் எண்ணம்தான்.

இருவரும் வெளிநாடு செல்லும் வரை நன்றாக 'அனுபவித்துவிட்டு' பிரிந்து சென்று விடுவதாக உத்தேசம்.

இவர்களின் முதல் செக்ஸ் காட்சியே நித்யாவின் லேடீஸ் ஹாஸ்டலில்தான் அரங்கேறுகிறது. அங்கேயே தொடர்ந்தால் ரசிகர்கள் லாஜிக் கேட்பார்களே என்று துல்கர் தான் தங்கியிருக்கும் பிரகாஷ்ராஜின் இல்லத்திற்கே அதிகாரபூர்வமாக அழைத்து வருகிறார்.

'சமூகக்கேடான செயல் இது' என்று முதலில் எதிர்க்கும் பிரகாஷ்ராஜ், நித்யா மேனனின் பாடல் ஒன்றில் மயங்கி, அவர்கள் தாலி கட்டிக்கொள்ளாமல், தனது வீட்டில் கூடிக் களிக்க இடம் தருகிறார்.

பிரகாஷ்ராஜின் மனைவி லீலா சாம்சனுக்கு அல்ஸீமர் என்னும் மறதி நோய். தெருவில் எங்காவது போய்க்கொண்டிருக்கும்போது வீடு போகத் தெரியாமல் எங்காவது அமர்ந்து விடுவார்.

அந்த அல்ஸீமரை கிளைமாக்ஸில் கையில் எடுத்துக்கொண்டு வயசான காலத்துல ஒருத்தொருக்கொருத்தர் ஒத்தாசையா இருக்க கல்யாணம் தேவை என்ற உரத்த சிந்தனை ஒன்றை உதிர்க்கிறார். சுபம்.

நல்லதோ கெட்டதோ இடைவேளை வரை படம் ஒரு டீன் ஏஜர்களின் காதல் போல ஜிவ்வென்று செல்கிறது. துல்கரும் நித்யாவும் இளமை ததும்பி வழிய கெட்ட ஆட்டம் போட்டிருக்கிறார்கள்.

அப்புறம் மணிரத்னமும் அல்ஸீமர் நோய்க்கு ஆட்பட்டது போல், அடுத்து கதை செல்லவேண்டிய இடம் தெரியாமல் தேங்கி தெருவில் அமர்ந்து விடுகிறார்.

Cinemakkaran Saalai 21

'லிவிங் டுகெதர்' பற்றிய கதை போன்ற இப்படத்தில் 'கல்யாணத்துக்கு முன்பே இஷ்டத்துக்கு செக்ஸ் வைத்துக்கொண்டார்கள்' என்பது தாண்டி, அவ்வாழ்க்கை குறித்த உருப்படியான ஒரு பதிவு கூட இல்லை. காதல், காமக் கூத்து தாண்டி என்னிடம் இப்படத்தில் வேறு எதையும் எதிர்பார்க்காதீர்கள் என்பதில் மணி இவ்வளவு கறாராக இருந்திருக்க வேண்டியதில்லை என்பதே என் தாழ்மையான அபிப்ராயம்.

படத்தில் முக்கிய கதாபாத்திரங்கள் என்று பார்த்தால் மேற்படி சொல்லப்பட்ட நான்கே பாத்திரங்கள். யாரும் நடிப்பில் குறை வைக்கவில்லை.

Cinemakkaran Saalai 21

அதிலும் நித்யா மேனன், தனது அந்நியோன்மான நடிப்பால் படம் பார்ப்பவர்களை காதல் கொள்ள வைக்கிறார். இடவேளை வரை துல்கரை திரையிலிருந்து அகற்றிவிட்டு, நித்யாவின் காதலனாக நான் இருந்தே படம் பார்த்தேன்.

நித்யாவுக்கு கிடைக்கும் இந்த பாராட்டில் பாதிக்கும் மேற்பட்ட பங்குக்குச் சொந்தக்காரர் கண்டிப்பாக ஒளிப்பதிவாளர் பி.சி.ஸ்ரீராம்தான். எத்தனையோ படங்களில் மொக்கை ஃபிகராகக் காணப்பட்ட நித்யாவை தேவதை போல் காட்ட அவரால் மட்டுமே முடியும்.

Cinemakkaran Saalai 21

மணி ஏமாற்றியது போல், ரஹ்மான் பாடல்கள் மற்றும் பின்னணி இசையில் கண்டிப்பாக ஏமாற்றவில்லை. 'மன மன மெண்டல் மனதில்' மட்டும் எரிச்சலூட்டும் ரகம்.

படத்தில் பி.சி.யின் ஒளிப்பதிவைத் தாண்டி என்னைக் கவர்ந்த இன்னொரு முக்கிய அம்சம் வசனங்கள். அவை மணியின் வழக்கமான ஒற்றை வரி நான்சென்ஸ்களிலிருந்து சற்றே வேறுபட்டிருந்தன. அவற்றை எழுதியவரை ஏனோ இருட்டடிப்பு செய்திருக்கிறார்கள்.

எழுத்தாளர் கி.ராஜநாராயணன் ஒரு நேர்காணலில் 'படைப்பாளிகள் ஒரு குறிப்பிட்ட வயதுக்கு மேல் தொடர்ந்து சோபிக்கமுடியாமல் தேங்கி விடுகிறார்களே?' என்ற கேள்விக்கு, 'அவர்கள் முற்றிய மரங்கள் போல் ஆகிவிடுகிறார்கள். ஒரு அளவுக்கு மேல் முற்றிய மரங்களிடம் கனிகளை எதிர்ப்பார்க்கக்கூடாது' என்பது போல ஒரு பதில் அளித்திருந்தார்.

இந்த 'ஓ காதல் கண்மணி' பார்த்தபோது மணிரத்னமும் அப்படி ஒரு முற்றிய மரமாகிவிட்டாரோ என்ற கவலையும், அப்படி ஆகிவிடக் கூடாது என்ற அக்கறையும் ஏற்படுவதைத் தவிர்க்க முடியவில்லை.

(தொடர்வேன்...)

English summary
The 21st part of Cinemakkaran Saalai reviewed Manirathnam's latest release O Kadhal Kanmani.
Please Wait while comments are loading...