»   »  சினிமாக்காரன் சாலை 27: இப்படிக்கு பேய்கள் அசோஸியேசன்!

சினிமாக்காரன் சாலை 27: இப்படிக்கு பேய்கள் அசோஸியேசன்!

Posted By:
Subscribe to Oneindia Tamil

-முத்துராமலிங்கன்

என் நாற்காலிக்குப் பின்னால் 20 வெரையிட்டியான பேய்கள் நின்று வேடிக்கை பார்த்துக்கொண்டிருக்கும் வேளையில்தான் இந்தக் கட்டுரையை தட்டச்சு செய்து கொண்டிருக்கிறேன். அவர்கள் என்னைக் கூர்ந்து கவனிப்பது எனக்குத் தெரியும் என்பது அவர்களுக்குத் தெரியும்.

இந்த இடத்தில், அவர்கள் குறித்து தப்பாக எழுதினால் என் பின் மண்டையில் சில பஞ்ச்கள் விழலாம் எனும் பீதி உங்களுக்கு வரக்கூடும். ஆனால் அதற்கான அவசியம் இருக்காது. ஏனெனில் அவர்களின் பால் எவ்வளவு பேய்த்தனமான அன்பு வைத்திருக்கிறேன் என்பது அவர்களுக்குத் தெரியும்.

Cinemakkaran Saalai-27: Ghosts Association of Kollywood!

2015ம் ஆண்டை தமிழ் சினிமாவை பேய்கள் பிடித்து ஆட்டிய ஆண்டு என்றே சொல்வேன். ஒரு ‘காஞ்சனா' பேய் ஓட்டம் ஓடியவுடன் தான் நம்ம ஆட்கள் பேய்கள் மேல் பிரியம் கொள்ள ஆரம்பித்தார்கள். பட ஹிட்டு விளம்பரங்களில் கூட ‘மரண ஹிட்டு' பேய் ஹிட்டு' என்றே ஆர்ப்பரித்தார்கள்.

சென்ற ஆண்டின் பெரும்பாலான நாட்கள் பேய் சகவாசங்களோடே நகர்ந்தன. காலையில் அலுவலகம் வந்து மெயிலை ஓபன் பண்ணினால் ‘ஹலோ நான் பேய் பேசுறேன்' டிசைன்களோடுதான் அன்றைய வாழ்க்கை துவங்கும்.

இன்னும் சற்று நேரத்தில் ‘பேய்களுடன் ஒரு பேட்டி' பிரஸ் மீட் இருக்கு வர்றீங்களா? என்று பி.ஆர். ஓ. போனில் திகிலூட்டுவார்.

Cinemakkaran Saalai-27: Ghosts Association of Kollywood!

பேட்டி என்று அழைத்து, அந்தப்பட நடிகர்கள் வராமல், ஒரிஜினல் பேய்களே வந்து போட்டுத்தள்ளிவிட்டால்? என்ற பயத்தில் ‘இல்ல பாஸ் சின்ன வேலை இருக்கு. பேய்களுடன் பேட்டியை நீங்களே எடுத்து வழக்கம்போல மெயில்ல போடுங்க' என்று தப்பிப்பிழைக்க வேண்டிய நிலை நாளும்!

சற்று முன் ஒரு போன்கால். பேய்க்கே கால் இல்லாதபோது போனுக்கு ஏது கால் என்று இதைப் படிக்கும்போது உங்களுக்குத் தோண ஆரம்பித்தால் உங்களுக்கு வலது மற்றும் இடது புறங்களில் இரண்டு இளம் பெண் பேய்கள் உங்களை உற்று நோக்கிக் கொண்டிருக்கிறார்கள் என்று அர்த்தம். அதற்காக தெறித்து ஓடவேண்டாம். அவர்கள் உங்களை எதுவும் செய்யமாட்டார்கள். அவை ரெண்டும் ஃபேஸ்புக் லவ் ஃபெயிலியர் கேஸ்தான்.

Cinemakkaran Saalai-27: Ghosts Association of Kollywood!

சரி போன் மேட்டருக்கு வருகிறேன். ஒரு தயாரிப்பாளருக்கு ஒரு வாரத்துக்கு முன்பு போன் பண்ணி என் வெப்சைட்டுக்கு விளம்பரம் கேட்டிருப்பேன் போல.

‘சார் நான் ‘பேய்கள் ஜாக்கிரதை' ஆபிசுலர்ந்து அசிஸ்டெண்ட் டைரக்டர் ‘ஆவிகுமார்' பேசுறேன். உங்களை எங்க புரடியூசர் ‘டிமாண்டி காலனி'க்கு ‘சரியா ராத்திரி பனிரெண்டு மணிக்கு' வரச்சொன்னார் சார்' என்று போன் வந்தால் மனிதனுக்கு தொடர்ந்து வாழும் ஆசை இருக்குமா?

ஆனால் சென்ற ஆண்டில் பாதிநாட்கள் இப்படி திகிலோடே கழிந்தன.

Cinemakkaran Saalai-27: Ghosts Association of Kollywood!

தற்செயலாக டிசம்பர் 31 அன்று வருடத்தின் கடைசிப் படமாக பார்க்க நேர்ந்தது 'பேய்கள் ஜாக்கிரதை`தான் என்பதை எப்படி தற்செயலாக என்று சொல்ல முடியும்?

'போய் வா 2015` என்று டைப் அடித்தால் `பேய் வா` என்றே வருகிறதே அதை எப்படி தற்செயல் என்று எடுத்துக்கொள்ளமுடியும்?

சரி சனியன்களின் தொல்லை கடந்த ஆண்டோடு முடிந்ததா என்று பார்த்தால் அதுதான் இல்லை. 'விடாது கருப்பு` மாதிரி இன்றைய ஜனவரி முதல்வார நிலவரப்படி சென்சார் பண்ணி முடிக்கப்பட்ட, போஸ்ட் புரடக்‌ஷன் நிலவரங்களில் மற்றும் படப்பிடிப்பில் இருக்கிற பேய்ப் படங்களின் எண்ணிக்கை மட்டும் சுமார் நாற்பது இருக்கும் என்கிறார்கள் புரடக்‌ஷன் பொன்னுச்சாமிகள்.

கடந்த ஆண்டே பேய்ப் படங்கள் பார்த்துக்கொண்டிருந்த பல சந்தர்ப்பங்களில் நினைவு தப்பி, நடுநடுவே கொஞ்சம் பேயாக மாறி, என் உடல் மட்டும் தியேட்டருக்குள் இருக்க, யாருக்கும் தெரியாமல் எழுந்துபோய், தம் அடித்துவிட்டு வந்த சமாச்சாரமெல்லாம் நடந்தது.

ஒரு ஆண்டில் முப்பது படம் பார்த்ததற்கே இந்த கதி என்றால், இந்த ஆண்டு மேலும் நாற்பது வகையறா பேய்ப் படங்களைப் பார்த்தால்? நினைத்தாலே நடுக்கம் வருகிறது. இனி 'நானாக நானில்லை பேயே. திரையில் நாள்தோறும் வந்தாயே பேயே` என்றுதான் பாடுவேனோ?

பின்னால் நிற்கிற பேய்களே உங்களுக்காக இந்த கடைசிப் பாராவை கொஞ்சம் பெரிய எழுத்துக்களில் அடிக்கிறேன். உங்களுக்கு கொஞ்சமாவது சமூக அக்கறை இருக்கிறதெனில், உங்களை ஓவராக மிஸ்யூஸ் செய்கிற, எங்களை கண்டபடி கன்ஃபியூஸ் செய்கிற, எங்கள் தமிழ் சினிமா இயக்குநர்கள் மீது ஒரு அசோஸியேசன் அமைத்து நீங்கள் ஏன் நடவடிக்கை எடுக்கக் கூடாது?

செய்வீர்களா...செய்வீர்களா?

-தொடர்வேன்...

English summary
Our columnist Muthuramalingan's special story on ghost, horror movies trend in Kollywood.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil