»   »  ‘இத்தனை படத்தைப் பாத்துட்டு எப்பிடிய்யா உசுரோட இருக்கீக?'

‘இத்தனை படத்தைப் பாத்துட்டு எப்பிடிய்யா உசுரோட இருக்கீக?'

Posted By:
Subscribe to Oneindia Tamil

-முத்துராமலிங்கன்

Muthuramalingan

டிசம்பர் மாதக் கடைசி வாரத்திலேயே ஆளாளுக்கு 2015 -ம் ஆண்டின் படங்களை குறுக்குவெட்டாக, வடக்கு தெற்காக,தென்மேற்கு கிழக்காக ஒரு பார்வை பார்த்துவிட்ட நிலையில் நான் வழக்கம்போல கொஞ்சம் லேட்தான்!

ஐயா ஃபிலிம் நியூஸ் ஆனந்தனில் துவங்கி எதிர்காலத்தில் அவர்போல ஆகிவிடத்துடிக்கும் ஸ்லிம்நியூஸ் ஆனந்தன்கள் வரை வெளியிட்ட பட்டியல்களைக் குத்துமதிப்பாகக் கொண்டு பார்த்தால் கடந்த ஆண்டில் சுமார் 200 ல் துவங்கி 201, 202, 203, 204 படங்கள் வரை ரிலீஸாகியிருக்கின்றன.

அவற்றில் அறிவித்தோ அறிவிக்காமலோ, தெரிந்தோ, தெரியாமலோ, புரிந்தோ, புரியாமலோ வெளியான பேய்ப் படங்கள் மட்டும் ரெண்டு டஜன்களைத் தாண்டுகின்றன. அந்த பேய்ப் படங்கள் குறித்து, குறிப்பிட்ட பேய்களுடன், இந்த வாரமே மறைவாக ஒரு பேச்சு வார்த்தை இருப்பதால் அதைத் தனியாக எழுதுகிறேன்.

பொதுவாக இந்த ஆண்டும் ஆங்கில,ஃப்ரெஞ்சுய, கொரிய மற்றும் சில அரிய படங்களின் உருவல், தழுவல், வறுவல் நீக்கமற நிறைந்தே இருந்தன. இதன் முன்னோடி கமல் இம்முறை மனசாட்சியால் உந்தித் தள்ளப்பட்டு தனது ‘தூங்காவனம்' படத்துக்கு ஒரிஜினல் பட டைட்டிலுக்கு கிரடிட் கொடுத்தார், கண் சிமிட்டும் நேரத்தில் ஓடி மறையும் அளவுக்கு!

ravi

நடிகைகளின் ஆடை அவிழ்ப்பு இன்னும் கொஞ்சம் தாராளமாகியிருக்கிறது. ‘காட்டுக்கோழி' போன்ற ஒன்றிரண்டு காமக்கோழிகள் நடமாடினாலும் ஷகீலாவின் இடத்தை ஹன்ஷிகா மோத்வாணிகளே தட்டிப்றித்துக் கொண்டார்கள். லிப் லாக் காட்சிகள் சைவ வகையறாவுக்கள் அனுமதிக்கப்பட்டு விட்டன. சொந்தக் காசில் சூன்யம் வைத்துக்கொள்ளும் அவலட்சணமான புதுமுகங்களின் அறிமுகங்கள் அதிகரித்திருக்கின்றன.

பாடலாசிரியர்கள் நா.முத்துக்குமார், மதன் கார்க்கி, கபிலன் வைரமுத்து போன்றவர்களிடமிருந்து அவர்களது கடந்த ஆண்டைய சாதனைகள் அறிக்கைகளாக வந்துசேர்ந்திருக்கின்றன.

unreleased

'தேவா பொழைச்சிருவானாம். யாருடா சொன்னது? தேவாவே சொன்னான்' மாதிரி, `நான் எழுதிய மெட்டுக்களடா அத்தனையும் ஹிட்டுக்களடா`என்று அவர்களே எழுதி அனுப்பிய அறிக்கை சொன்னது.

ஆனாலும் கடந்த ஆண்டின் சிறந்த பாடலாசிரியர் யார் என்று என்னைக்கேட்டால் நான் 'பொயட்டு' தனுஷைத்தான் கையைக் காட்டுவேன். இந்த கைகாட்டுக்காக கையூட்டு எதுவும் வாங்கிட்டீய்யாய்யா? என்று கேட்கத்தோன்றும். 'விகடன்` மாதிரி ஒரு பத்திரிகைக்கு பேட்டி கொடுக்கும்போது `சிறந்த பாடலாசிரியனுக்கான தேசிய விருது வாங்கணும் சார்' என்று ஒரு எருது வாங்குறதை விட ஈஸி விசயம் மாதிரி பேட்டி கொடுக்கிறாரே. அந்த தில்தான் சார் என்னை அவர் ஆளா மாத்திடுச்சி. அதுக்காக வம்புத்தம்பி சிம்புவை நான் குறைச்சி எடைபோட்டதா யாரும் நினைக்க வேண்டாம். அவரோட சாங்கெல்லாம் சர்வதேச லெவல்!

bahubali

சரி, அவங்க கிடக்கட்டும். எதுவாயிருந்தாலும் நாலுபேரு நாலுவிதமா பேசுவாங்க மாதிரி 2015 படங்களை என் பங்குக்கு நாலு விதமா பிரிக்கலாமேன்னு தோணிச்சி.

முதல் பத்து, பாஸ் மற்றும் மாஸ் ஆன படங்கள்

1.காக்கா முட்டை
2. நானும் ரவுடிதான்
3.குற்றம் கடிதல்
4.பசங்க2
5.பாபநாசம்
6.கத்துக்குட்டி
7.தனி ஒருவன்
8.காஞ்சனா 2
9.தமிழுக்கு எண் ஒன்றை அழுத்தவும்.
10.உப்புக்கருவாடு.

அடுத்த பத்து, பஞ்சரான படங்கள்

1.அனேகன்
2. சகலகலா வல்லவன்
3.சகாப்தம்
4.மாரி
5. தங்கமகன்.
6.144.
7.பத்து எண்றதுக்குள்ள
8.மாசு என்கிற மாசிலாமணி.
9.ரோமியோ ஜூலியட்
10.வாசுவும் சரவணனும் ஒண்ணா குடிச்சவங்க.

மூணாவது பத்து, தத்துபித்து படங்கள்

1.ஆரஞ்சு மிட்டாய்
2. ஆயா வடை சுட்ட கதை
3.எம்ஜியார் சிவாஜி ரஜினி கமல் ரசிகர்கர்கள் நற்பணி மன்றம்.
4. கங்காரு
5. குரங்கு கையில பூ மாலை
5. சிக்கிக்கு சிக்கிக்கிச்சு
6.த்ரிஷா இல்லனா நயன்தாரா
7.மகாபலிபுரம் 8.வை ராஜா வை
9.ஜவ்வுமிட்டாய்
10. நதிகள் நனைவதில்லை.

நாலாவது பத்து, ஜஸ்ட் ஜடங்கள்

1.அதிரடி
2. யூகன்
3.இரிடியம்
4. கருத்த பையன் செவத்த பொண்ணு
5.கொக்கிரகுளம்
6.மரப்பாச்சி.
7.ஸ்ட்ராபெர்ரி
8.ஜிப்பா ஜிமிக்கி
9.வெத்துவேட்டு
10. வானவில் வாழ்க்கை.

வருடக் கடைசி நாளில் ஒரு நண்பருடன் உரையாடிக் கொண்டிருந்தபோது, ‘போன வருஷம் ரிலீசான படங்கள்ல எத்தனை படத்தை நீங்களே சொந்தமா உட்கார்ந்து பார்த்திருப்பிங்க, நெஞ்சைத்தொட்டு சொல்லுங்க பாஸ்?' என்று ஈவு இரக்கமற்ற ஒரு கேள்வி எழுப்பினார்.

கையிலிருந்த 2015 படங்களின் பட்டியலை மீண்டும் மேய்ந்து, நினைவுகளைக் கட்டிப்பிடித்து மல்லுக்கட்டியதில் 204-ல் 193 படங்கள் வரை பார்த்திருப்பதாக தோணுகிறது.

அந்த நண்பர் கேட்டது போலவே, ‘இத்தனை படத்தைப் பாத்துட்டு எப்பிடிய்யா உசுரோட இருக்கீக? என்று இதைப் படித்துக்கொண்டிருக்கும் உங்களுக்குத் தோணக் கூடும்.

இருக்கோம்னுதான் சொன்னோம். உசுரோட இருக்கோம்னு எப்பங்க சொன்னோம்?

- கண்டிப்பா தொடரும்...!

English summary
After a small interval, our cinema columnist Muthuramalingan continues his Cinemakkaran Saalai series. Here is his analysis of movies released in the year 2015.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil