»   »  சினிமாக்காரன் சாலை -20: 'சுஹாசினி உங்க நாக்குல சனி!'

சினிமாக்காரன் சாலை -20: 'சுஹாசினி உங்க நாக்குல சனி!'

Posted By:
Subscribe to Oneindia Tamil

-முத்துராமலிங்கன்

Muthuramalingan

முன்குறிப்பு: நானும் சில வாரங்களுக்கு முன் 'இணையத்தில் இயங்கும் சர்வ ஜீவராசிகளும் விமர்சகர்களாகி விட்டார்கள்' என்ற பொருள்பட ஒரு கட்டுரை எழுதியிருந்தேன். ஆனால் அந்தக் கட்டுரைக்கு, சுஹாசினி தன் கணவரைக் காப்பாற்றும் உள்நோக்கம் போல் நல்நோக்கம் எதுவும் இல்லை. மீறியும் வீம்பு பிடிப்பவர்கள் ‘அது வேற வாய்...இது நாற வாய்' என்று எடுத்துக் கொண்டாலும் எனக்கு ஆட்சேபணை இல்லை.

999 படைப்புகளை உருவாக்கிவிட்டு ஆயிரமாவது படைப்பை பூமிக்கு அனுப்பும்போது அந்த சிசுவை மட்டும் மூக்கைச் சொறிந்துவிட்டு அனுப்புவாராம் பிரம்மா. அப்படி சொறிந்து அனுப்பப்படும் குழந்தையானது வாழ்நாள் முழுக்க வாய்த் துடுக்கோடு திரியும். வண்டி வண்டியாக வம்பிழுக்கும். அதனால் கண்டவர்களிடம் வாங்கியும் கட்டிக் கொள்ளும்.

Cinemakkaran Saalai 20

அப்படி ஆயிரம் பேக்கேஜில் கடைசிக் குழந்தையாம், ஆழ்வார்ப்பேட்டை ஆண்டவனை சித்தப்பா என்று அழைக்கும் அந்தக் குழந்தையின் இரு தினங்களுக்கு முந்தைய வாய்த் துடுக்குதான் இன்று இணையங்களில் ஹாட் டாபிக்.

குஷ்புவுக்கு சப்போர்ட் பண்ணுகிறேன் பேர்வழி என்று சிக்கினார். அடுத்தபடியாய் ‘பருத்தி வீரன்' சமயத்தில் ‘கருப்பா இருக்கிறவனுங்க எல்லாம் ஹீரோவா நடிக்க ஆரம்பிச் சிட்டாங்க' என்று திருவாய் மலர்ந்து டின்னு கட்டிக்கொண்ட கதைகள் பழசு.

இப்போதைய லேட்டஸ்ட் நியூஸ் ‘மவுஸ்'.

Cinemakkaran Saalai 20

நேற்று மாலை துவங்கி ஆளாளுக்கு பக்கெட் பக்கெட்டாய் கழுவிக் கழுவு ஊற்றுகிறார்கள். இன்னும் சிலர் சுஹாசினி தெலுங்குப் படங்களில் கிளாமராய் நடித்த காட்சிகளையும், பாடல்களையும் எடுத்துப் பதிவிடுகிற அளவுக்கு உக்கிரமாய் ஆகிவிட்டார்கள்.

'அப்படி என்னத்தை சொல்லக் கூடாததை சொல்லிவிட்டார் சுஹாசினி?'

‘இணையத்தில் இப்போது கண்ட பயல்களும், அதாவது மவுஸை உருட்டத்தெரிந்தாலே போதும், சினிமாவுக்கு விமர்சனம் எழுதத் தொடங்கி விட்டார்கள். இதனால் எங்கள் நிறுவனம் பெருத்த நஷ்டத்துக்கு ஆளாகிவிட்டது. ஒவ்வொரு காரியம் செய்வதற்கும் ஒரு தகுதி தேவைப்படுகிறது. படம் இயக்குவதென்றால் தொடர்ந்து பத்து மரண ஃப்ளாப் கொடுத்தாலும் அதை மண்ரத்னம் செய்யவேண்டும். ரஹ்மான் இசையமைக்கலாம். (பாருங்க ராஜா இசையமைக்கலாமான்னு தெரியலை. மனசுக்குள்ள கலவரமா இருக்கு) விமர்சனம் எழுதுறதுக்குன்னு பத்திரிகையாளர்கள் நீங்க இருக்கீங்க. அதனால கண்டவங்களும் எழுதாம எங்களை பத்திரமா பாத்துக்கங்க'.

சுஹாசினி சொன்னது இவ்வளவுதான் யுவர் ஆனர்.

இதுக்குப் போயி எவ்வளவு கலாய்த்தல்கள், கழுவி ஊத்தல்கள், கண்டனங்கள், நக்கல் நையாண்டிகள், எகத்தாளங்கள், எள்ளி நகையாடல்கள்னு எவ்வளவு ரூட்ல ஓட்டுவீங்க? இதை எப்படி பிஞ்சு உள்ளம் கொண்ட என் கட்சிக்காரர் தாங்குவார் யுவர் ஆனர்?

இப்படி சுஹாசினிக்காக வக்காலத்து வாங்கி, வக்கீல் வண்டு முருகன் போல நான் இணையப் போராளிகளிடம் வாங்கிக்கட்டிக் கொள்ள விரும்பவில்லை. அதனால் ஸ்ட்ரெயிட்டா மேட்டருக்கே வந்துவிடுகிறேன்.

Cinemakkaran Saalai 20

இன்றும் இந்தியாவின் முக்கியமான (?) இயக்குநராகக் கொண்டாடப்படும் மணிரத்னம் ‘அலைபாயுதே'வுக்கு (2000 ஏப்ரல் 14) அப்புறம் ஹிட் படம் கொடுத்து பதினைந்து ஆண்டுகள் ஆகின்றன என்றால் நம்புவதற்கு கஷ்டமாக இருக்கும். ஹிட் கூட வேண்டாம் ஓடாத படங்களில் ஒரு சில நல்ல படங்களாவது இருந்திருக்கலாமே? அதுவும் இல்லை. ‘குரு' ஆயுத எழுத்து' இராவணன்' ‘கடல்' என்று அத்தனையும் ஹைடெக் குப்பைகள். அத்தனையும் விமர்சகர்களாலும், ரசிகர்களாலும் ஒருசேர நிராகரிக்கப்பட்ட படங்கள்.

அந்த தொடர் தோல்விகளை மறக்கடிக்க, நல்ல காஷ்ட்லி பேப்பரில் ‘மணிரத்னம் த கிரேட் டைரக்டர்' என்று பெரிய பதிப்பகத்தைப் பிடித்து புத்தகம் போட்டு தொடர்ந்து இந்தியாவின் முக்கிய டைரக்டர் அந்தஸ்தைத் தக்கவைக்க நினைத்தாலும் சீக்கிரம் மூட்டை கட்டி தன் கணவரை மூலையில் உட்காரவைத்து விடுவார்களோ என்கிற அடிவயிற்று பயம்தான் சுஹாசினியை இவ்வளவு சிறுபிள்ளைத்தனமாக பேச வைத்திருக்கிறது என்று எளிதில் யூகிக்க முடிகிறது.

இணைய விமர்சகர்கள் என்பவர்கள் சுஹாசினி நினைப்பது போல் சாதாரணர்கள் அல்லர். அவர்களில் சிலர் மணிரத்னத்தையும் விட பன்மடங்கு சினிமா அறிவு கொண்டவர்கள். மணி பார்க்காத உலகப் படங்களையெல்லாம் பார்த்து சிலாகித்து எழுதுபவர்கள். மணிமணியான எழுத்துக்கு சொந்தக்காரர்கள் சிலரும் இருக்கிறார்கள்.

Cinemakkaran Saalai 20

இவர்களைப்போய் எழுதாதே என்று சொன்னால் பொங்கி எழாமல் என்ன செய்வார்கள்?' சுஹாசினியின் மெட்ராஸ் டாக்கீஸ் கணக்குப் பிள்ளையை மட்டுமே ‘எழுது எழுதாதே' என்று சொல்ல முடியும்.

முன்பு சினிமாவில் ‘மவுத் டாக்' என்று ஒன்று இருந்ததே அதன் நவீன வடிவமே இன்றைய இணைய விமர்சகர்கள். தியேட்டர் வாசலில், டீக்கடை பெஞ்சுகளில், வீதிகளில் பேசித்திரிந்த சினிமா செய்திகளை இன்று முகநூல், ட்விட்டரில் பேசுகிறார்கள்.

மணியின் தொடர் தோல்விகள் ஒரு மனைவியாக, தயாரிப்பாளராக சுஹாசினியை கவலை கொள்ளச் செய்திருப்பதை இந்தச் சமூகம் புரிந்து கொண்டு அவர் படங்களைப் பற்றி எழுதாமல் இருக்க வேண்டும், பத்திரிகையாளர்கள் மட்டும் எழுதினால் போதும் என்று சுஹாசினி சீரியஸாகவே விரும்பினாரால் ‘ஓ காதல் கண்மணி' படத்தை பத்திரிகையாளர்களுக்கு திரையிடுவதோடு நிறுத்திக் கொள்ள வேண்டும் என்று ஏகப்பட்ட பேர் கருத்து தெரிவித்திருக்கிறார்கள். அது சுஹாசினிக்கு உகந்ததென்றால் இதில் பஞ்சாயத்துக்கே இடமில்லை. சபையை இத்தோடு கலைத்துவிடலாம்.

ஆனால் சுஹாசினிக்கு மணியின் படம் பெரும் ‘மணி' வசூலிக்க வேண்டும். வாயைப் பொத்திக் கொண்டு அனைவரும் படம் பார்த்துவிடவேண்டும் என்றால்...? இந்தியாவின் 'முக்கிய' இயக்குநர் மணிரத்னம் என்பதையும் விட பெருங்காமெடியாக அல்லவா இது இருக்கிறது.

சூழலுக்கு கொஞ்சமும் பொருந்தாத பாடல் இது. ஆனாலும் சுஹாசினிக்காக ரெண்டு வரி பாடித் தொலைக்கிறேன். மவுஸை உருட்டுகிறவர்கள் எல்லாம் விமர்சனம் எழுதி விடாமல் பார்த்துக் கொள்ளுங்கள் என்று அவர் வேண்டுகோள் வைத்தது எங்களை நோக்கி அல்லவா?

‘மவுஸ்களே கொஞ்சம் ஓய்வெடுங்கள்
சுஹாசினி சொல்லிவிட்டார்...'

(தொடர்வேன்...)

For Quick Alerts
ALLOW NOTIFICATIONS
For Daily Alerts

    English summary
    Critic Muthuramalingan blasted Suhasini Manirathnam for her latest speech against online critics.

    சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil

    We use cookies to ensure that we give you the best experience on our website. This includes cookies from third party social media websites and ad networks. Such third party cookies may track your use on Filmibeat sites for better rendering. Our partners use cookies to ensure we show you advertising that is relevant to you. If you continue without changing your settings, we'll assume that you are happy to receive all cookies on Filmibeat website. However, you can change your cookie settings at any time. Learn more