»   »  சினிமாக்காரன் சாலை 30: மணி அல்ல.. மாமணி!

சினிமாக்காரன் சாலை 30: மணி அல்ல.. மாமணி!

Posted By:
Subscribe to Oneindia Tamil

- முத்துராமலிங்கன்

'இந்த இலையில இருக்க அத்தனை அயிட்டங்களையும் ஒழுங்கா சாப்பிட்டு முடிக்கலைன்னா உன்னை அந்த மரத்துல கட்டி வச்சி உதைப்பேண்ணா'

- தமிழ்சினிமா வில்லனாக மட்டுமே காட்டிய ‘நாயகன்' கலாபவன் மணி சாலக்குடியில் ஒரு மதியக்குடியின் மேற்படி காட்சியின் வழியாகவே என் நினைவில் வந்துபோகிறார்.

இணையங்களில் அவரது மரணம் குறித்த பதிவுகளில் பெரும்பாலானவை அவரை ஒரு 'மொடாக் குடியர்' என்றும் குடித்துக் குடித்தே செத்தார் என்றே சித்தரிக்கின்றன.
மணி குடிகாரர்தான். மறுப்பதற்கில்லை. ஆனால் அவர் குறித்துச் சொல்ல வேறு ஆயிரம் செய்திகள் இருக்கின்றன.

Cinemakkaran Saalai 30 : Kalabavan Mani

ஆட்டோ ஓட்டினார். மிமிக்ரி கலைஞராக இருந்து நடிகராக உயர்ந்து சம்பாதித்தார். மலையாளத்தின் முன்னணி நாயகனாக உயர்ந்த பின்னரும் ஞாயிற்றுக் கிழமைகளில் ஆட்டோ ஓட்டினார் என்பதெல்லாம் தாண்டி, மணி ஒரு அற்புதமான மனிதன் என்பதை சுமார் இரண்டு மாதங்கள் இடைவிடாமல் அவருடன் இருந்து தரிசித்தவன் நான்.

என் அன்பு நண்பர் எஸ்.என். ராஜா தயாரிக்க, வம்பு இயக்குநர் சாமி இயக்கிய ‘சரித்திரம்' என்ற முக்கால்வாசி முடிந்து நின்றுபோன படத்தின் தயாரிப்பு நிர்வாகியாகப் பணியாற்றியபோதுதான் சேட்டைக்கார மணி சேட்டன் எனக்கு அறிமுகம். சாமியும் நானும் கதை சொல்லி சம்பளம் பேச சாலக்குடி போனபோதே அவர் மனதுக்கு மிக நெருக்கமானவராகிவிட்டார்.

மொத்தப் படமும் பொள்ளாச்சியிலேயே நடந்தது. படப்பிடிப்பு ஒன்பது மணிக்கு என்றால் மணி சூட்டிங் ஸ்பாட்டில் ஏழு மணிக்கு ஆஜராகி தனது உதவியாளர்கள் மற்றும் புரடக்‌ஷன் பையன்களுடன் கிரிக்கெட்டோ, கிட்டிப்புல்லோ ஆடிக் கொண்டிருப்பார். தான் ஒரு நடிகர் என்று எந்த நடவடிக்கையிலும் காட்டிக் கொள்ளவே மாட்டார். கூட அவரது நண்பர்கள் கூட்டம் ஒன்று படப்பிடிப்புத் தளங்களில் இருந்துகொண்டே இருப்பார்கள். ஆனாலும் அவர்களது செலவு எப்போதும் மணியினுடையதுதான். தயாரிப்பாளர்கள் தலையில் அந்த பில்லைக் கட்டவே மாட்டார் மணி.

Cinemakkaran Saalai 30 : Kalabavan Mani

‘சரித்திரம்' முதல் ஷெட்யூல் முடிந்து பிரேக் விட்டபோது ஒருமுறை என்னையும் சாமியையும் தனது பிறந்த நாள் விழாவுக்கு வரும்படி அழைத்தார். அங்கு செல்லும் வரை அவர் பிறந்த நாள் கொண்டாடும் விதம் குறித்து எங்களுக்கு எதுவும் தெரியாது. அவரும் சொல்லவில்லை.

இங்கேதான் இவர் மணி அல்ல மாமணி என்று தெரிந்து கொண்டேன். ஒரு அரங்கம் பிடித்து பெருந்தொகை செலவில் ஒவ்வொரு வருடமும் நடக்கும் பிறந்தநாள் விழா அது. காலைமுதல் இரவு வரை கலை நிகழ்ச்சிகள். கலந்து கொள்பவர்கள் அனைவருமே மணியின் ஆட்டோ ஓட்டும் நண்பர்கள், அவரது உதவியாளர்களின் குடும்பம், மற்றும் அவருடன் பணியாற்றிய தொழில் நுட்பக் கலைஞர்கள். விழா நிறைவுறும் தருவாயில் முதல் பரிசு என்று சில ஆயிரம் மதிப்புள்ள பொருள் ஒன்றை அறிவிப்பார்கள் என்று நினைத்திருந்த எனக்கு பேரதிர்ச்சி. 5 ஏக்கர் நிலம், விலையுயர்ந்த கார், 50 பவுன் தங்கச் சங்கிலி என்று சிலிரிக்க
வைத்தார் சேட்டன். தன்னைச் சுற்றியுள்ளவர்களுக்கு சேட்டன் வருடந்தோறும் செய்யும் சீர் அது.

மறுநாள் அவரது சாலக்குடி தோட்டத்தில்தான் முதல் பாராவில் நான் சொன்ன குடியுடன் கூடிய உணவு விருந்து ஏற்பாடாகியிருந்தது. அவரது முரட்டு உபசரிப்பின் வார்த்தைகள்தான் ‘ஃபுல்லா சாப்பிடலைன்னா மரத்துல கட்டிவச்சி உதைப்பேன்'.
நாங்கள் உணவருந்தி மகிழ்ந்துகொண்டிருந்த தோட்டத்தை ஒட்டி ஒரு நதி ஓடிக்கொண்டிருந்தது. அப்படி ஒரு தோட்டத்தை அதற்கு முன்னர் நான் ஓவியங்களில்தான் பார்த்திருக்கிறேன்.

Cinemakkaran Saalai 30 : Kalabavan Mani

என் தோளில் கைபோட்டபடி அந்த நதியை ஒட்டி அழைத்துப்போன மணி சேட்டன் ஒரு குட்டிக்கதை சொன்னார். ‘வயசான கிழவர் ஒருத்தர் தன்னோட பிள்ளைங்களை நல்ல நிலைக்குகொண்டு வர இந்தத் தோட்டத்துல கூலி வேலை பார்த்தார். தன்னோட பிள்ளைகளும் இப்பிடி கூலி வேலைக்கு வந்து நொந்து வாழக் கூடாதுங்குற ஒரே ஒரு சின்ன ஆசை மட்டும் தான் அவருக்கு. வீட்டுக்கு கூட வர முடியாத 24 மணி நேர காவல் கூலி. அப்பா கூலி வேலை பார்த்து அடிமையா இருந்த அந்தத் தோட்டத்தை என்னைக்காவது ஒருநாள் வாங்கி, அதே தோட்டத்துக்கு முதலாளியாகணும்னு அவரோட பிள்ளைங்கள்ல ஒருத்தனுக்கு மட்டும் வைராக்கியம் இருந்தது...' என்று துவங்கி நான் புரிந்துகொண்டேன் என்பதைப் புரிந்துகொண்டு அத்துடன் முடித்துக்கொண்டார்.

‘இதுல தரமான ஒரு மலையாளப்படத்துக்கான கதை இருக்கே மணி சேட்டன்' என்றேன். மணி சின்னதாகப் புன்னகைத்தபடி பதில் எதுவும் சொல்லவில்லை. பின்னர் மணியின் நண்பர் ஜோயி மற்றும் சிலரிடம் அவரது அப்பா பட்ட கஷ்டங்களை விரிவாகக் கேட்டுக்கொண்டேன்.

Cinemakkaran Saalai 30 : Kalabavan Mani

படப்பிடிப்புகளில் எவ்வளவு பிசியாக இருந்தாலும் குடும்பத்தை நண்பர்களை விட்டு விலகியே இருக்கமாட்டார் மணி. தேசிய விருது வாங்கிய பிறகும் ஞாயிற்றுக் கிழமைகளில் ஆட்டோ ஓட்டுவதை அவர் நிறுத்தவேயில்லை.

‘சரித்திரம்' படம் 90 நாட்கள் படப்பிடிப்பு நடந்து முடிந்திருந்த நிலையில் மூன்றாம் ஷெட்யூல் நடப்பதற்கு முந்நூறு பஞ்சாயத்துகள் காத்திருந்தன. ஒவ்வொரு நடிகரிடமும் நேரில் சென்று சம்பளத்தைக் குறைத்துப் பேச வேண்டிய சூழல்.
அது குறித்துப்பேச மறுபடியும் நானும் சாமியும் திருவனந்தபுரத்தில் ஒரு படப்பிடிப்பில் இருந்த மணியைச் சந்திக்கச் சென்றோம்.

ரயில்வே ஸ்டேசனை விட்டு இறங்கி, படப்பிடிப்பு தளத்தை விசாரிப்பதற்காக செல்ஃபோனில் நம்பரை டயல் செய்து கொண்டிருந்தபோது ராட்சஸ வேகத்தில் ஒரு ஆட்டோ எங்களை உரசி நின்றது. ஓட்டி வந்தவர் மணி. எங்கள் படம் வருமா வராதா தெரியாது. சம்பளத்தை குறைக்கச் சொல்லி கேட்டு வருகிறார்கள் என்பதும் தெரியும். ஆனாலும் எப்போதும் நட்பே பிரதானம் மணிக்கு.

அவரது இறுதிச் சடங்குக்கு போக ஏனோ மனமில்லை. ஆனால் மிக விரைவில் ஒரு நாள் மணி சேட்டன் சாலக்குடி தோட்டத்துக்கு சென்று அந்த நதிக்கரையோரம் நடக்கவேண்டும். அப்போது சேட்டன் என் தோளில் கைபோட்டு கூடவே நடந்து வருவார் என்று என்னால் உறுதியாகச் சொல்லமுடியும்.

-தொடர்வேன்

English summary
Muthuramalingan is sharing his memories with late actor Kalabavan Mani.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil

X