»   »  சினிமாக்காரன் சாலை - 18: ‘லிங்கா’மாரி ஊதாரி புட்டுக்கினே நீ நாறி...'

சினிமாக்காரன் சாலை - 18: ‘லிங்கா’மாரி ஊதாரி புட்டுக்கினே நீ நாறி...'

Posted By:
Subscribe to Oneindia Tamil

-முத்துராமலிங்கன்

Muthuramalinganசற்றுமுன் ‘லிங்கா' கோஷ்டிகளிடமிருந்து மற்றுமொரு ஒப்பாரி மெயில்.

‘எட்டாவது கோஷ்டியும் பதினெட்டாவது கோஷ்டியும் கூட்டு சேர்ந்துக்கிட்டு எங்களை நாமம் போடப் பாக்குறாங்க'- இப்படிக்கு நாப்பத்தி எட்டாவது கோஷ்டி.

இந்த மெயில் 853 வது என்று நினைக்கிறேன். இந்த மெயில்கள் காகிதத்தில் அறிக்கைகளாக தரப்பட்டிருந்தால் அவைகளை எடைக்குப் போட்டே பத்திரிகையாளர்களெல்லாம் பணக்காரர்களாகியிருப்பார்கள் எனுமளவுக்கு நாளொரு கோஷ்டியும் பொழுதொரு அறிக்கையுமாய் நாறிக் கொண்டிருக்கிறது.

‘இனிமேல் அறிக்கைகளை மெயிலில் அனுப்பாமல் பேப்பரில் அனுப்பும் வரை சிங்காரவேலன் இல்லத்தின் முன் பிச்சை எடுக்கும் போராட்டம் நடத்தினால் என்ன? நாங்கல்லாம் எப்பதான்யா செட்டில் ஆகுறது?'

ஒரு சின்ன ஃப்ளாஷ்பேக் போய்விட்டு ‘லிங்காமாரி' கோஷ்டிகளின் பஞ்சாயத்து வருவோம்.

Cinemakkaran Saalai-18: They are sitting on a bomb

‘பிதாமகன்' ரிலீஸான சமயம். அப்போது நான் 24 மணிநேரமும் பாலாவுடன் இருந்தேன். நண்பன், மேனேஜர், அன்புக்காக சமையல்காரன், மக்கள் தொடர்பாளர், செயின் ஸ்மோக்கரான அவரிடமிருந்து அவ்வப்போது சிகரட்டைப் பிடுங்கி டஸ்ட்பின்னில் போடுபவன், ஐந்தாவது ரவுண்டைத்தாண்டும்போது அதட்டுபவன் என்று பெப்ஸியின் 24 சங்கங்கள் செய்த அத்தனை வேலையையும் அவருக்காக செய்து வந்தேன்.

'பிதாமகன்' ரிலீஸான மறுநாளிலிருந்தே அடுத்த படம் தங்களுக்கு இயக்கித்தரச்சொல்லி வந்த அழைப்புகள் மட்டும் சுமார் நூறு இருக்கும். பெரும்பாலும் பாலாவின் போனை நான் தான் எடுத்து பதில் சொல்வேன்.
அப்போது அடுத்த படம் அஜித்துடன் இணைந்து செய்யலாம் என்ற ஒரு எண்ணம் பாலாவுக்கு இருந்தது.

வந்த அழைப்புகளில் ஒன்று அப்போது அஜீத்துக்கு மிகவும் நெருக்கமாக இருந்த ஒரு முன்னணி தயாரிப்பாளருடையது. ஒரு க்ளூ மட்டும் தருகிறேன். அஜீத்துடன் நெருக்கமாக இருந்தபோது நிக்'க நேரமில்லாமல் இருந்தவர்.

‘நேர்ல போய் பேசிட்டு வாங்க. நமக்கு நல்ல சம்பளம் தருவாருன்னா இவருக்கே அடுத்த படம் பண்ணிரலாம்' என்றார் பாலா.

Cinemakkaran Saalai-18: They are sitting on a bomb

என்னை அதற்கு முன் நூறுமுறையாவது சந்தித்திருந்தவர்தான் எனினும் புது அறிமுகம் போலவே எதிர்கொண்டார்.

சில சம்பிரதாய பேச்சுக்கு அப்புறம் சம்பளப் பேச்சு வந்தது.

‘அஜீத் இப்ப சம்பளத்தை டபுள் மடங்கா ஏத்திட்டார் (அப்போது அஜீத்துக்கு கால்ஷீட் பார்த்தவரே அந்தப் புண்னியவான்தான்) அதனால பாலா சம்பளத்தை பாத்து சொன்னீங்கன்னா நீங்க எப்ப ரெடியோ அப்ப படத்தை ஆரம்பிச்சிடலாம். பாலா எவ்வளவு எதிர்ப்பாக்குறானு சொல்லுங்க?' என்றார்.

அந்த சமயம் அஜீத் ஒரு கோடி அளவில் சம்பளம் வாங்க ஆரம்பித்திருந்தார். அதனால் பாலாவும் அதே சம்பளம் எதிர்ப்பார்த்தார்.

அதை அப்படியே சொல்லமுடியாது. ஈகோ வரும். எனவே நான் ‘எங்களுக்கு அப்படி தொகையா ஒரு ஐடியாவும் இல்ல. நீங்க சொல்லுங்க சார். பாலாவுக்கு என்ன தரலாம்னு?' என்றேன்.

‘ஸ்ட்ரெயிட்டா மேட்டருக்கு வரேன் ப்ரதர்' என்றபடி, ஆபிஸ் பையனிடம் ஒரு பேப்பரும் பேனாவும் கொண்டுவரச்சொல்லி என் எதிரிலேயே பட்ஜெட் போட ஆரம்பித்தார். கவனியுங்கள். அப்போது எங்கள் தரப்பில் கதை பற்றி ஒரு வரி கூட சொல்லப்படவில்லை.

Cinemakkaran Saalai-18: They are sitting on a bomb

அந்த பட்ஜெட்டில் அவர் முதன்முதலில் என்ன எழுதினார் தெரியுமா?

'வட்டி - 2 கோடி' என்றுதான்.

அடுத்துதான் அஜித் சம்பளம். அலுவலக செலவுகள். படப் பிடிப்புச் செலவுகள். இதர நட்சத்திரங்கள். இதர தொழில் நுட்பக் கலைஞர்கள் என்று எழுத ஆரம்பித்தார். இறுதியில் பட்ஜெட்டை பக்காவாக பதினொன்றரை கோடியில் முடித்து விட்டு ‘அஜித் சாருக்கு 12 கோடிக்கு பிசினஸ் இருக்கு. எனக்கு லாபம்லாம் வேண்டாம். (அடேங்கப்பா) இப்ப பாலா சம்பளம் சொல்லுங்க ப்ரதர்' என்றார்.

'பாலா கிட்ட டிஸ்கஸ் பண்ணிட்டு ஒரு மணி நேரத்துல வரேன் சார்' என்றபடி கிளம்பியவன்தான். 'வட்டி சுட்டதடா. படம் கிட்டாதுடா' என்று பாடியபடி அவருக்குப் படம் பண்ணும் திட்டத்தை கைவிட்டோம்.

சினிமாவை விட்டு வெகு தூரம் இருப்பவர்களுக்கு இதை நம்ப கஷ்டமாக இருக்கும். சினிமாவைக் கரைத்துக் குடித்தவர்கள் பெரும்பாலும் சொந்தக் காசில் படம் பண்ணுவது இல்லை. இன்றும் பழைய தயாரிப்பாளர்கள் படம் துவங்கும்போது, பட்ஜெட்டில் முதல் கணக்காக வட்டியைத்தான் எழுதுகிறார்கள். பெரிய விநியோகஸ்தர்களும் அங்ஙனமேதான்.

இப்போது ‘லிங்கா' மேட்டருக்கு வருவோம். அய்யோ...நஷ்டம்,... துட்டு போச்சி.... பிச்சை எடுத்து பொழைக்கப் போறேன்...எலி மருந்து குடிக்கப் போறேன்... தூக்கு மாட்டி தொங்கப்போறேன்'...' என்று நீலிக் கண்ணீர் வடிக்கிறார்களே விநியோகஸ்தர்கள், அவர்கள் கணக்கிலும் 'லிங்கா'வை வாங்கிய வகையில் முதலில் வரப்போவது வட்டிக் கணக்குத்தான். அப்புறம் அலுவலக நிர்வாக செலவுகள். பூ, மலர், புஷ்பக் கணக்குகள் என்று நீளும்.

ஒரிஜினல் வசூலை ஒருநாளும் வெளியே சொல்ல மாட்டார்கள்.

இப்போது நடந்து வரும் அடிதடியை சற்றே கவனித்துப் பாருங்கள் சிங்காரவேலன் என்பவர் துவங்கி ஒருத்தராவது 'நான் இத்தனை தியேட்டரில் ரிலீஸ் செய்தேன். இவ்வளவு வசூலானது. இதான் நான் வசூலித்த கட்டணம்.. இந்தாருங்கள் வசூல் விபரம். இது எனக்கு ஏற்பட்ட நஷ்டம்' என்று கணக்குத் தந்திருக்கிறார்களா? தரமாட்டார்கள். ஏனெனில் அவர்கள் வசமிருக்கும் 'கணக்கு' அப்படி!

இதனால்தான் ரஜினியிடமிருந்தும், ராக்லைன் வெங்கடேஷிடமிருந்தும் இவர்கள் கேட்ட பணம் வந்தும் முறையாக பிரித்துக் கொள்ள முடியவில்லை.

நடுவில் கட்டப்பஞ்சாயத்தில் ஈடுபட்ட முக்கியப் புள்ளிகள் இதில் பங்கு கேட்கிறார்கள் என்ற புலம்பலும் அதிகரித்து வருகிறது. அவர்களுக்கு நீங்கள் நியாயமற்ற முறையில் ‘ஆட்டயப் போடுவது' தெரியுமென்பதால் உரிமையோடு எடுத்துக் கொள்ள நினைக்கிறார்கள். சுபகாரியம் நடக்கட்டும்.

இப்போது இருக்கிற நிலைமையைப் பார்த்தால் இந்த சண்டையும் அழுகுணி ஆட்டங்களும் இன்னும் குறைந்தது பத்து ஆண்டுகளுக்காவது நடக்கும்போல் தெரிகிறது.

இந்தக் காட்சிகளை தொடர்ச்சியாக காணும்போது வடிவேலு படக் காமெடி ஒன்றுதான் நினைவுக்கு வருகிறது.

அல்வா வாசு ஒரு உயர்ந்த கட்டிடத்தின் உச்சியில் தற்கொலை செய்ய முயன்று பயந்து உட்கார்ந்திருப்பார். அவர் எப்படா தற்கொலை செய்து கொள்வார் என்று ஒரு பெருங்கூட்டமே பந்தயம் கட்டி ஆர்வத்துடன் காத்திருக்க, ஆர்வக் கோளாறு வடிவேலு மட்டும் அவரை நெருங்கிப் போய்,' 'டேய்..டேய்... இப்ப என்ன பண்ணப்போறே?' என்பார்.

‘கீழ குதிக்கப் போறேன்'

'ஆமா அதுக்கு ஏன் உக்காந்திருக்க?'

‘நின்னு குதிக்க பயமாருக்கு. அதான்'

‘சரி இப்ப உனக்கு என்னடா பிரச்சினை?

‘எல் காதல் ஃபெயிலாயிடுச்சி. நான் லவ் பண்ண பொண்ணு திடீர்னு ஒருநா அவ புருஷன் கூட ஓடிப்போயிட்டா'

‘அட நன்னாரிப் பயலே.. சரி இப்ப நீ கீழ குதிச்சும் சாகலை. அப்ப என்ன செய்வ.. அப்ப என்ன செய்வ?'

'இந்தா இந்தக் கயிறுல தொங்குவேன்'

'அப்பயும் சாகலைன்னா?'

‘இந்த இந்தக் கத்தி எடுத்து கழுத்தை அறுத்துக்குவேன்'

‘அட அப்பயும் சாகலைன்னா?'

‘இருக்கவே இருக்கு வெடிகுண்டு'

‘அதெங்கடா இருக்கு? -வடிவேலு

‘அட போங்கண்ணே அதுமேலதான நீங்க உக்காந்திருக்கீங்க. எழுந்திச்சிராதீங்க வெடிச்சிரும்' என்று போகும் அந்தக் காமெடி.

எனக்கென்னவோ 'லிங்கா நஷ்ட ஈடு கோஷ்டிகள்' மொத்தமும் அந்த வெடிகுண்டு சாக்கின் மீது உட்கார்ந்திருப்பது போலவே தோணுகிறது!

(தொடர்வேன்)

For Quick Alerts
ALLOW NOTIFICATIONS
For Daily Alerts

    English summary
    The 18th episode of Cinemakkaran Saalai discusses about the recent awkward protests of some distributors demanding compensation for Rajini's Lingaa.

    சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil

    We use cookies to ensure that we give you the best experience on our website. This includes cookies from third party social media websites and ad networks. Such third party cookies may track your use on Filmibeat sites for better rendering. Our partners use cookies to ensure we show you advertising that is relevant to you. If you continue without changing your settings, we'll assume that you are happy to receive all cookies on Filmibeat website. However, you can change your cookie settings at any time. Learn more