»   »  சினிமாக்காரன் சாலை 19: 'எங்க சங்கத்து ஆளைப் பத்தி சினிமா எடுக்குறது எவன்டா?'

சினிமாக்காரன் சாலை 19: 'எங்க சங்கத்து ஆளைப் பத்தி சினிமா எடுக்குறது எவன்டா?'

Posted By:
Subscribe to Oneindia Tamil

-முத்துராமலிங்கன்

இன்று தமிழ் சினிமா சந்தித்துக் கொண்டிருக்கும் முக்கியமான ஆலமரத்தடி பஞ்சாயத்து இதுதான்.

பூஜை துவங்கி பூசணிக்காய் உடைக்கிற நாள் வரை சினிமா எடுப்பதில் சந்திக்கிற பிரச்சினைகள் போதாதென்று, படம் ரிலீஸாகிற சமயம் யார் எந்த திசையிலிருந்து என்ன காரணத்துக்காக படத்துக்கு தடை கேட்பார்கள் என்று யூகிக்க முடியாத அளவுக்கு நிலைமை கந்தலாகியிருக்கிறது.

'ஆ ஊ' என்றால் ' எங்க சாதியைப் பத்தி என்னமோ வருதாமே, எனக்கு படம் போட்டுக் காட்டிவிட்டு அப்புறமா ரிலீஸ் பண்ணிக்கோ' என்கிறார்கள். படம் ரிலீஸாகிற சமயங்களில் பெரும்பாலான தயாரிப்பாளர் கோவணம் முற்றிலும் அவிழ்ந்து அடுத்து அம்மணமாகும் நிதி நிலையில் இருப்பார்கள். இந்த நேரத்தில் சென்சாரைத் தாண்டிய பிறகு வெளி மனிதர்களுக்கு ஷோ காட்டுவதென்பது சாதாரண காரியமில்லை.

இன்று பிரிவியூ தியேட்டர்களின் வாடகை குறைந்த பட்சம் இருபதாயிரம் ரூபாயாக இருக்கிறது. அப்புறம் படம் பார்க்க வருகிற பஞ்சாயத்து புண்ணியவான்களுக்கு டிபன், காபி கருமாந்திரங்களுக்கு எல்லாம் அழுது முடித்தால் அடுத்து பிச்சை எடுக்க வேண்டிய நிலைதான்.

Cinemakkaran Saalai 19

பாடலில் 'அழுக்கு மூட்டை மீனாச்சி மூஞ்சைக் கழுவி நாளாச்சி' என்று வந்ததும் சலவைத் தொழிலாளர்கள் இயக்குநரையும் தயாரிப்பாளரையும் வெள்ளாவியில் வைத்து வெளுக்கத் துவங்கிவிடுகிறார்கள். அவர்களுக்கு 'சலவைக் கட்டணம்' கட்டிவிட்டால் சைலண்டாகிவிடுகிறார்கள்.

'கொம்பன்' படத்துக்கு இந்தமாதிரியான பிரச்சினை வந்தபோது ஆச்சரியமாக சினிமாக்காரர்கள் ஒன்று திரண்டு 'எதிர்ப்புக் குரல் எழுப்பி' அப்படத்தைக் காப்பாற்றினார்கள். அதற்கு முக்கிய காரணம் அது சூர்யா, கார்த்தி என்ற இருபெரும் நட்சத்திரங்களின் குடும்பப் படமாக இருந்ததுதான். 'நாம கூவுற கூவுக்கு இன்னைக்கு இல்லாட்டியும் அடுத்த வருசமாவது கால்ஷீட் தந்துரமாட்டாங்களா?' என்கிற அவர்களது மைண்ட் வாய்ஸ் நல்லா சவுண்டாவே நமக்கு கேட்கிறது. இதுவே ஒரு அப்பாவி தயாரிப்பாளரின் படமாக இருந்திருந்தால் 'எதிர்ப்புக் குரலர்கள்' சத்தமின்றி காணாமல் போயிருப்பார்கள்.

Cinemakkaran Saalai 19

இன்னொரு பக்கம் இதே சூழலை சந்தர்ப்பவாதமாக எடுத்துக்கொண்டு செல்ஃப் பப்ளிசிட்டி பண்ணும் சினிமாக்காரர்கள்.

விரைவில் வெளிவர இருக்கும் ஒரு படத்தின் இயக்குநர் அடிக்கும் கேவலமான பப்ளிசிட்டி ஸ்டண்ட் ஒன்றைப் பாருங்கள்.

அவர் படத்தில் அஜீத் பெரிய ஆளா விஜய் பெரிய ஆளா என்று இரு கதாநாயகிகளுக்குள் விவாதம் வருகிறதாம். அஜீத் தான் அடுத்த சூப்பர் ஸ்டார் என்பது போல் காட்சி அமைந்திருந்ததால் அதைப் பார்த்த விநியோகஸ்தர் இயக்குநர் கன்னத்தில் அறைந்து விட்டாராம். (இத்தனைக்கும் இவர்தான் படத்தை பத்துப் பைசா தராமல் ஓசிக்கு வாங்கி, தமிழகம் முழுக்க ரிலீஸ் பண்ணியே தருகிறார்!)

அறைந்து முடித்ததும் இருவரும் ஹோட்டலுக்கு கிளம்பிப்போய் சரக்கடித்து பிரியாணி சாப்பிட்டு முடித்து கட்டித் தழுவிக்கொண்டு பிரிந்து சென்றார்களாம்
இப்படி ஒரு செய்தி படத்தின் பப்ளிசிட்டிக்கு பயன்படும் என்று அந்த இயக்குநர் முட்டாள்தனமாக நம்புகிறார். அந்த இயக்குநரே ஒவ்வொரு பத்திரிகையாளராக போன் செய்து 'சார் என்னை அந்த டிஸ்ட்ரிபியூட்டர் அடிச்சிட்டாரு. கன்னம் இன்னும் வலிக்குது சார். கண்டிப்பா இந்த செய்திய உங்க பத்திரிகையில போடுங்க சார்' என்று கேட்கிறாராம்!

அவராவது ஒரு கத்துக்குட்டி டைரக்டர். கமல் எவ்வளவு பெரிய மேதை? அவரே பல சமயங்களில் இப்படிப்பட்ட காரியங்களில் ஈடுபடுகிறாரோ என்ற சந்தேகம் எனக்கு தனிப்பட்ட முறையில் உண்டு.

'உத்தம வில்லன்' ரிலீஸ் தேதி அறிவித்த அன்று இணையங்களில் 'என்னடா கமல் 'உத்தம வில்லன்' ரிலீஸ் தேதியை அறிவிச்சிட்டார். ஆனா இன்னும் ஒருத்தன் கூட படத்துக்கு தடை கேக்கலை?' என்று ஓட்டுகிறார்கள்.

அடுத்த நாள் காலையே வைணவ வகுப்பைச் சேர்ந்த ஏதோ ரங்காச்சாரியோ, விட்டலாச்சாரியோ 'எங்க ஜாதி சங்கத்தை கமல் தவறாக சித்தரிச்சிருப்பது போல கனவு கண்டேன். அதனால படத்துக்கு தடை விதிக்கணும்' என்று ஏதோ நாயர் கடையில வடை கேட்பது போல் அவ்வளவு ஈஸியாக தடை கேட்கிறார். உடனே அதை இணையர்கள் 'இந்தா கமல் களத்துல இறங்கிட்டாருடா' என்கிறார்கள். அட சீனிவாசா...

Cinemakkaran Saalai 19

காசு செலவழித்துச் செய்கிற பப்ளிசிட்டியை இப்படிப்பட்ட பப்ளிசிட்டிகள் தியேட்டருக்கு அதிக கூட்டங்களைக் கொண்டு வந்து சேர்க்கும் என்ற மூட நம்பிக்கையே இந்த அற்ப செயல்களுக்கு காரணமாக இருக்கவேண்டும்.
இப்படிப் படங்களின் மேல் கேஸ் போடச்சொல்லி ஆள் செட் பண்ணிக்கொடுத்து பின்னர் அதை வாபஸ் வாங்கச் செய்வதற்கென்றே சில வக்கீல்கள் இருப்பதாகவும் நம்பத் தகுந்த வட்டாரங்கள் நவில்கின்றன.

வரவர அரசியல்வாதிகள் பொதுக் கூட்டத்துக்கு பிரியாணி பொட்டலம் கொடுத்து ஆள் சேர்ப்பது போல் படங்களுக்கு 'விளம்பரம்' தர ஆள் பிடிக்கிறார்களோ என்று சமீப காலமாக சந்தேகம் தோன்ற ஆரம்பித்திருக்கிறது.

ஒரிஜினலா காப்பியா என்று புரியாமல், பல படங்களைப் பார்த்து தலையைப் பிய்த்துக் கொள்வதுபோல், இன்னும் கொஞ்ச காலத்தில் எது ஒரிஜினல் தடை கேட்பு, எது செட்-அப் தடை கேட்பு என்று தெரியாமல் குழம்பி பைத்தியக்காரர்களாக அலையப் போகிறோமோ என்று கொஞ்சம் பயமாக இருக்கிறது.

'டாக்டர் எங்க இருக்கீங்க?'

(தொடர்வேன்..)

English summary
The nineteenth part of Cinemakkaran Saalai discusses about the various types of publicity stunts in Tamil cinema.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil