For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

'இதற்காகத்தானா ஆசைப் பட்டாய் பாலா?'

By Shankar
|

-முத்துராமலிங்கன்

முன்குறிப்பு; பாலாவின் தாரை தப்பட்டைக்கு விமர்சனம் எழுதிப் பதிவிட்டவுடன், அவரது ரசிகர்கள் என்றும் உதவியாளர்கள் என்றும் சொல்லிக்கொண்டு ஏகப்பட்ட கண்டனங்கள். படத்துக்கு இணையான வன்முறை இந்த எழுத்திலும் இருக்கிறது. அப்ப உங்க யோக்கியதையும் அதுதானா? என்று பொட்டில் அறைந்தது போன்ற கேள்விகள்.

யோசித்துப் பார்த்ததில் அவ்வளவு மூர்க்கம் வந்ததற்குக் காரணம் பாலாவின் மேல் இருந்த, இன்னும் இருக்கும் நேசம்தான் என்பது புரிந்தது. நல்ல படைப்புகளைத் தரமுடிகிற ஒரு கலைஞன், நெற்றி நரம்பு புடைக்கும்படி ஒரு படம் தரலாமா என்கிற ஆவேசத்தின் வெளிப்பாடே அந்தப் பதிவு. இதே பாலுமகேந்திரா பள்ளியில் பயின்ற வெற்றிமாறன் சர்வதேச சினிமாவை நோக்கி பயணிக்கும்போது, அவரை விட பன்மடங்கு திறமை கொண்ட பாலா இப்படி ஒரு சர்வநாச சினிமாவை நோக்கி பீடு நடை போடலாமா?

Cinemakkaran Saalai 28: Bala and Tharai Thappattai

"பாலா ரசிகருங்க ரொம்ப டென்சனாகுறாங்க சார். அதே கட்டுரையை கொஞ்சம் பட்டி பார்த்து டிங்கரிங் பண்னிக்கொடுங்க," என்று ஆசிரியர் அன்புக் கட்டளை இட்டதன் பேரில் சில திருத்தங்களுடன் 'தா.த' விமர்சனம்.

அந்த 8,565 பேரும் இந்தப் படத்துக்கான விமர்சனத்தை எழுதி முடிக்கட்டும் நாம் இறுதியாக எழுதிக்கொள்ளலாம் என்ற முடிவில்தான் இன்றுவரை காத்திருந்தேன். இறுதிமரியாதை செலுத்த வேண்டிய ஒரு படத்துக்கு இறுதியாக எழுதினால்தானே சரியாக இருக்கும்.

சென்சார்காரர்களுக்கு கொஞ்சமாவது சூடு சொரணை என்ற ஒன்று இருந்திருந்தால் இரண்டு மணி நேரம் ஓடக்கூடிய இப்படத்துக்கு ஒரு மணி நேரமாவது 'பீப்' சவுண்டு தந்திருக்கவேண்டும். இதுபோக காட்சி ஆபாசங்களுக்கும், அருவெறுக்கத்தக்க வன்முறைக் காட்சிகளும் 'அய்யகோ என்ன ஆயிற்று தமிழ் சினிமா கொண்டாடிய பிதாமகனுக்கு? என்கிற கேள்வியை எழுப்பிக்கொண்டே இருக்கின்றன.

Cinemakkaran Saalai 28: Bala and Tharai Thappattai

பாலாவிடம் பஞ்சாயத்துக்குப் போவதற்கு முன், சின்னதாக 'தா.த' வின் சதைச் சுருக்கதைப் பார்த்துவிடுவோம்.

சாமிப் புலவர் அரிய கரகாட்டக் கலைஞர். அக்கலை மலிந்து போனதால் மனம் வெறுத்து சதா குவார்ட்டர் அடித்து கும்மிருட்டிலேயே சுருண்டு கிடக்கிறார். அவரது மகன் சன்னாசி குப்பையான மற்றும் வரலட்சுமியினுடையது போன்ற தொப்பையான ஆட்டக்காரிகள் கொண்ட குழுவை வைத்துக் கொண்டு தரங்கெட்ட ஒரு கரக்காட்டக் குழுவை நடத்தி வருகிறார். ஆனால் நல்ல கலை இப்படி நாசமாகிவிட்டதே என்ற அவார்டு ஆதங்கங்களை கேப் கிடைக்கும் போதெல்லாம் கொட்டித்தீர்க்கிறார்.

Cinemakkaran Saalai 28: Bala and Tharai Thappattai

இக்குழுவுக்கு அந்தமானில் ஒரு வார நிகழ்ச்சி நடத்த அழைப்பு வருகிறது. அந்தமானர்கள் நிகழ்ச்சி போக, அடிசனலாக மந்தகாசமான மங்கைகளைப் படுக்கைக்கும்அழைக்க,தன்மானம் பொங்க, வரலட்சுமி வீரலட்சுமியாக மாறி, வீருகொண்டு எழுந்து நிகழ்ச்சியாளர்களை நையப்புடைக்கிறார். நிகழ்ச்சி ரத்தாகி, அங்கிருந்து பசியும் பட்டினியுமாக ஊர் வந்து சேர்ந்து கலைப் பணியைத் தொடர்கிறார்கள்.

இந்த சமயத்தில், மாமன் சன்னாசியை உயிருக்குயிராக காதலிக்கும், 'அவருக்குப் பசி வந்தால் அம்மணமாகக் கூட ஆடுவேன்' என்று அறிவிக்கும் வரலட்சுமியின் தீவிர விசிறி என்று சொல்லிக்கொண்டு, வில்லன் சுரேஷ், பெண் கேட்டு வருகிறார். 'இந்த கேடு கெட்ட தொழிலை விட்டு நீயாவது நிம்மதியாக வாழு' என்று தன் காதலை தியாகம் செய்து சுரேஷுக்கு வரலட்சுமியை கட்டி வைக்க,சுரேஷ், ஒரு அதிபயங்கர கர்ணகொடூர, கதி கலங்க வைக்கிற... இப்படி எத்தனை வில்லத்தனங்கள் இருக்கிறதோ அவ்வளவையும் செய்கிற வில்லன் என்பதை சுமார் ஆறு மாதங்களுக்கு அப்புறம் அறிந்து, அவரை அரிந்து எடுக்கிறார் சன்னாசி.

பாலாவின் ட்ரேட் மார்க் குரல்வளை கடிப்பு உட்பட வன்முறையின் உச்சம் தொட்டு 'பிதாமகனை' மீண்டும் நினைவூட்டும், ஆனால் அதைவிட நூறு மடங்கு விபரீத பயங்கரங்கள் கொண்ட கிளைமாக்ஸுடன் படம் முடிகிறது.

தியேட்டரிலிருந்து வெளியேறும் ஜனங்களின் முகத்தில் எதையோ பறிகொடுத்த பதட்டம். ஒரு கணம் தங்கள் வீட்டு விலாசம் மறந்து விக்கித்து நிற்கிறார்கள். அவர்களது நடையில் சின்ன நடுக்கம் தொற்றிக் கொள்கிறது. 'என்ன மாதிரியான சமூகத்தில் வாழ்கிறோம்?' என்கிற மனுஷ்யபுத்திர, தங்கர் பச்சான்களின் கேள்வி ஒரு கணம் அவர்களுக்கும் வந்துபோகிறது.

Cinemakkaran Saalai 28: Bala and Tharai Thappattai

ராஜாவின் ஆயிரமாவது படம் இப்படிப்பட்டதாய் ஆகிவிட்டதற்காக துண்டை வாயில் கவ்விக்கொண்டு லேசாய் குமுறித் தீர்ப்பதைத் தவிர வேறு வழியில்லை. மற்றபடி எத்தனையோ குப்பைப் படங்களில் ராஜாவின் பாடல்களும் பின்னணி இசையும் வைரமாக மின்னியதைப் போல இதிலும் தனித்து மின்னவே செய்கின்றன.

படம் பார்த்து முடித்ததும், எனக்கு 'அவன் இவன்' பார்த்தபோதே எழும்பிய கேள்வியே இன்னும் அழுத்தமாக எழுந்தது. 'என்னதான் ஆச்சு நம்ம பாலாவுக்கு...? சேது, நந்தா, பிதாமகன்களைச் செதுக்கிய பாலா எங்கே? ஏ,பி,சி குழப்பங்கள் உடைத்து, ஆல்செண்டர் ஆடியன்ஸுக்கும் பால்வார்த்த அவரது மேஜிக்கல் டச் எங்கே போனது?

'நான் கடவுள்' 'பரதேசி' போன்றவை விமர்சனத்துக்குள்ளானவை என்றாலும் கூட அப்படங்களின் சில இடங்களில், அல்லது கதை சொன்ன விதத்தில், குறைந்த பட்சம் தமிழ் சினிமா அறியாத சில பாத்திரங்களைத் துணிந்து முன்வைத்தபோது... என்று இப்படி ஏதாவது சில விதங்களில் பாலா இருக்கவே செய்தார்.

ஆனால் 'தா.த' பாலாவின் படமே அல்ல. இது ஏறத்தாழ எஸ்.ஜே.சூர்யாவின் படம். செக்ஸ், இரட்டை அர்த்த வசனங்கள், அமெச்சூர்த்தனமான இயக்கம் என்று அத்தனையும் இரண்டாம் மூன்றாம் தரத்திலேயே இருந்தன.

உயிருக்குயிராய் நேசித்த மாமன் பொண்ணை இன்னொருவனுக்கு கட்டிக்கொடுக்கும்போது, அவன் எப்படிப்பட்டவன் என்று கூட விசாரிக்காமலா? கட்டிக்கொடுத்து ஆறு மாதம்வரை வரலட்சுமி கணவனுடன் நன்றாக வாழ்கிறாரா? அவர் எந்த ஊரில் இருக்கிறார் என்பது கூட தெரியாமலா சன்னாசி இருந்தான்? என்பது உட்பட படத்தில் லாஜிக் ஓட்டைகள். திரைக்கதையில் ஓட்டைகள் என்பதை விட ஓட்டைகளுக்கு மத்தியில் கொஞ்சூண்டு திரைக்கதை என்று சொன்னால் அது 'தா.த' வுக்கு சரியாகப் பொருந்தும்.

இப்படம் குறித்து இணையங்களில் வரும் விமர்சனங்களில் தொண்ணூறு சதம் பேர் கிழித்துத் தொங்கவிட்டாலும், பத்து சதம் பேர் பாலாவை விட்டுக்கொடுப்பதாய் இல்லை. இன்றைய கரகாட்டக் கலையின் உண்மை நிலையைத்தானே படம் பிடித்துள்ளார். அதில் எப்படி குறை காணமுடியும் என்பது அவர்களது வாதமாக இருக்கிறது.

படம் முழுக்க மட்டமான வியாபார தந்திரம் இருக்கிறதே ஒழிய கரகாட்டக்கலையின் மீதான கரிசனம் கிஞ்சித்தும் இல்லை.

Cinemakkaran Saalai 28: Bala and Tharai Thappattai

'செரச்சி வச்சிருக்கேன்...செரச்சி வச்சிருக்கேன்... ஒண்ணாரூபாய்க்கு பிளேடு வாங்கி செரச்சி வச்சிருக்கேன்' என்று வருகிற பாடலில் வருகிற வக்கிரம்தான் மொத்தப் படத்துக்குமான ஒரு சோற்றுப்பதம். இப்படி ஆடி மகிழ்பவர்கள் கூடப்பிறந்த அண்ணனும் தங்கையும் என்பது 'கூடுதல் சிறப்பு'. நல்ல இடத்தில் கட்டிக்கொடுப்பதற்காக தற்காலிகமாக தங்கையை இப்படி கரகாட்டத்தில் கூட்டிக் கொடுப்பதாக இயக்குநர் தருகிறார் ஒரு சால்ஜாப்பு.

இன்னொரு பக்கம் மாமனாரும், மருமகளும் ஒன்றாக அமர்ந்து படம் முழுக்க குடம் குடமாக குடித்துக்கொண்டே இருக்கிறார்கள்.

வழக்கமாக 'சேது' என் நண்பன்... 'நந்தா' என் தம்பி...'பிதாமகன்' நானேதான்... என்று படத்திலிருக்கிற எல்லா கேரக்டர்களையும் அடையாளம் காட்டுகிற பாலா, இந்தப் படப் பாத்திரங்கள் குறித்து இன்னும் வாய் திறக்கவில்லை. படத்திற்கு ஏற்பட்டிருக்கிற நிலைமையைப் பார்த்தால் இன்னும் சில மாதங்களுக்கு அவர் 'வாயைத் திறந்து எதுவும் பாடமாட்டார்' என்றே தோன்றுகிறது.

அவர் சொன்னாலும் சொல்லாவிட்டாலும், ஒரு காலத்தில் நல்ல கலைஞனாயிருந்த, தற்போது மருமகளுடன் சதா குடித்தபடி வெட்டி வியாக்கியானங்கள் பேசுகிற, கலையில் காம்ப்ரமைஸ் பண்ணிக் கொள்ளமாட்டேன் என்று வாயாலேயே வண்டி வண்டியாக அட்வைஸ் தவில் வாசிக்கிற மாமனார் சாமிப் புலவன்தான் பாலா என்பதை சற்றே 'சங்கட்டத்தோடு' இச்சமூகத்துக்கு அறிவிக்கவேண்டியது எனது கடமையாகிறது.

ஒரு முன்னணி நாளிதழ் இதுதாண்டா சாக்கு என்று 'தியேட்டருக்குப் போகாதே என்று, அரைப்பக்க அளவுக்கு விமர்சனம் எழுதி முந்தைய படங்களில் அவர் வைத்த பிராமண நக்கல்களுக்கு பழி தீர்த்துக் கொள்கிறது. இணையங்களிலும் பாலாவை வைத்து சங்கீத ஞானமே இல்லாதவர்களெல்லாம் தவில் வாசிக்கிறார்கள். இத்தனையையும் மனதில் வெறிகொண்டு ஏற்றி, அடுத்த படத்தில் அரியணை ஏறவேண்டும் பாலா!

-தொடர்வேன்

English summary
Here is cinema critic Muthuramalingan's view on Bala's latest out Tharai Thappattai.
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
We use cookies to ensure that we give you the best experience on our website. This includes cookies from third party social media websites and ad networks. Such third party cookies may track your use on Filmibeat sites for better rendering. Our partners use cookies to ensure we show you advertising that is relevant to you. If you continue without changing your settings, we'll assume that you are happy to receive all cookies on Filmibeat website. However, you can change your cookie settings at any time. Learn more