twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    சினிமாக்காரன் சாலை- 4: தோப்பிலொரு சினிமா நடக்குது ஏலேலங்கிளியே...

    |

    -முத்துராமலிங்கன்

    'போங்கடி நீங்களும் உங்க காதலும்,' 'தெரியாம உன்னை காதலிச்சுட்டேன்', ‘இன்னுமா நம்மள நம்புறாங்க,' 'நாங்கெல்லாம் ஏடாகூடம்' போன்றன உள்ளிட்ட 210 படங்கள் கடந்த ஆண்டு ரிலீஸாகின. சென்சார் வரை வந்து ரிலீஸாகாத படங்களின் எண்ணிக்கையும் இதைவிட அதிகமாக இருக்கும்.

    ‘ஆண்டவா காப்பாத்து' இதுவும் ஒரு படத்தின் பெயர்தான். வாரம் தோறும் ஐந்து படங்கள் வந்துகொண்டே இருந்ததால் தமிழ் சினிமா ரசிகனின் அலறலும் இந்த ஆண்டவா காப்பாத்துதான்!

    ஷங்கரின் ‘ஐ' முருகதாஸின் ‘கத்தி' போன்ற மெகா ஜிகா பட்ஜெட் படங்களையும் எழுபது, எண்பது லட்ச ரூபாய் சின்ன பட்ஜெட் படங்களையும் கலந்து கட்டிப்பார்த்தால் கடந்த ஆண்டு தமிழ்சினிமாவில் விதைக்கப்பட்ட பணம் சுமார் 500 முதல் 600 கோடி இருக்கும் என்கிறது ஒரு 'புள்ளி'விபரம். இதில் பத்திரமாக தயாரிப்பாளர்களின் வீடு திரும்பிய பணம் பத்து சதவிகிதம் கூட இருக்காது.

    Muthuramalingan's Cinemakkaran Saalai part 4

    ஆனாலும் இந்த ஆண்டு கர்மசிரத்தையாய், இன்னும் அதிகமானவர்கள் படத் தயாரிப்பில் இறங்கியிருக்கிறார்கள்.

    ‘இவர்களிடமிருந்து சினிமாவைக் காப்பாற்ற அல்லது சினிமாவிடமிருந்து இவர்களைக் காப்பாற்ற தயாரிப்பாளர் சங்கம் என்னதான் செய்திருக்கிறது அல்லது செய்யவிருக்கிறது?' என்று 7 வது முறையாக செயற்குழு உறுப்பினராகியிருக்கும் விஜயமுரளி அவர்களிடம் கேட்டுக்கூட முடிக்கவில்லை. பெட்டி பெட்டியாய் கொட்டித் தீர்த்தார்.

    Muthuramalingan's Cinemakkaran Saalai part 4

    புதுசாய் படம் எடுக்க வருபவர்களைப் பற்றி அவர் சொன்ன கதைகளை எழுத தனியாக ஒரு ஜெயமோகன், எஸ்.ராமகிருஷ்ணன் சைஸ் புத்தகங்கள்தான் போடவேண்டும்.

    அதில் ஒரு சில சுருக்கமாக...

    ‘முந்தின ஆண்டு எடுத்த 210-ல் 200 படங்கள் தோற்றுப் போயிருந்தாலும், அடுத்த ஆண்டில் களம் இறங்குபவர்கள் தோற்ற படங்களை கணக்கில் எடுத்துக் கொள்ளாமல் வெற்றி பெற்ற ‘கோலிசோடா' மாதிரி ஒரு படத்தை தாங்கள் எடுக்கவிருப்பதாகவே அனைவரும் ஒரேமாதிரி, உறுதியாக நம்புகிறார்கள்.

    இங்கே டீக்கடை வைப்பவர் முதல் பிக்பாக்கெட் அடிப்பவர் வரை அனைவரும் முறையே தொழில் கற்றுக் கொண்டே பின்னர் களம் இறங்குகிறார்கள். ஆனால் படம் எடுக்க வருபவர்கள் மட்டும் ஏனோ முன்னனுபவம் இல்லாமல் குதித்து பண இழப்பையும் அவமானத்தையும் சுமக்கிறார்கள்.

    Muthuramalingan's Cinemakkaran Saalai part 4

    பிலிம் இனி தேவையில்லை என்று டிஜிடல் சினிமா வந்த பிறகு நிலைமை இன்னும் படுமோசம்.

    நேற்று ஒரு சின்ன கூட்டம் என்னைப் பார்க்க வந்திருந்தார்கள். அப்பா, சித்தப்பா தயாரிப்பாளர்கள், அண்ணன் டைரக்டர், தம்பி ஹீரோ, இவர்களுடன் இன்னும் சில உறவுக்கார வில்லன்கள் என்று ஒரு ஏழெட்டுப் பேர்.

    ‘ஏனுங்க. புரடியூசர் கவுன்சில் இதுதானுங்களே.. இங்க மெம்பராகனும்னா எவ்வளவு பணம் கட்டோனும்?'

    கேள்வியில் அப்பாவித்தனம் இருந்ததால், படத் தயாரிப்பு குறித்து சில ஆலோசனைகள் கூறலாமே என்ற எண்ணத்தில் ‘எப்ப படத்தை ஆரம்பிக்கப் போறீங்க?' என்றேன்.

    அதற்கு அவர் சொன்ன பதில் என்னை தூக்கிவாரிப் போட்டது.

    Muthuramalingan's Cinemakkaran Saalai part 4

    ‘என்னது எப்ப ஆரம்பிக்கப் போறீங்களாவா? படத்தை முடிச்சிட்டு முதல்ல கோவை, ஈரோடுல ரிலீஸ் பண்ணலாமுன்னு தியேட்டர் புக் பண்ணப் போனா அங்க சென்சார் சர்டிபிகேட் இருந்தாதான் தியேட்டர்ல போடுவோமுன்னு சொல்லிட்டாங்க. சரி சென்சார் பண்ண என்ன செய்யலாமுன்னு விசாரிச்சப்பதான், புரடியூசர் கவுன்சில்ல மெம்பரா இருந்தாத்தான் சென்சார் பண்ணுவாங்களாம்னு சொன்னாங்க. இன்னும் கியூப், டியூப்ல்லாம் சொல்லி என்னென்னமோ குழப்புறாங்க. கொஞ்சம் ஒத்தாசை பண்ணுங்க' என்று அவர் நீளமாய் பேசி முடிக்க, ‘அடடே அவிங்களா நீங்க? என்று ஒரு வழியாய் நிலவரத்தைப் புரிந்து கொண்டேன்.

    இப்போதெல்லாம் சென்னையைத் தாண்டி, கோவை, ஈரோடு, மதுரை போன்ற நகரங்களில் கூட டிஜிடல் கேமராக்களும், மற்ற தொழில் நுட்ப சாதனங்களும் சல்லிசான விலைக்கு படப்பிடிப்புக்கு கிடக்கின்றன. இயக்குநர்களும், நடிகர்-நடிகைகளும் எங்கும் நீக்கமற நிறைந்திருக்கிறார்கள். ஊரில் 'வெல்கம்' ஸ்டுடியோ வைத்திருந்தவர்களெல்லாம் ஒளிப்பதிவார்களாகி ரொம்ப நாளாச்சி.

    'ராம்கோபால் வர்மா, கார்த்திக் சுப்பாராஜ் இவங்கள்லாம் ஒரு படத்துலகூட வேலை பாக்காமலே டைரக்டரானவங்க தெரியுமில்ல' என்ற கருத்தோடு ஊருக்கு பத்துப்பேர் டைரக்டராக அலைகிறார்கள்.

    ‘மாப்ள முதல்ல பாத்தப்ப அடுத்த வேளை சோத்துக்கே வழியில்லாத மாதிரி இருந்த தனுஷை யாருக்கு புடிச்சிச்சி? அடுத்து பாக்கப்பாக்க புடிச்சிப்போய் இன்னைக்கு ஹிந்தியில இறங்கி ரவுசு காட்டுற அளவுக்கு கெத்து ஹீரோவாயிடலை? அதே மாதிரி ஃபேஸ் கட்டுதாண்டா உனக்கு. உங்க அப்பனை கரெக்ட் பண்ணு. அப்பிடியே நம்ம தேனி, கம்பம், கூடலூரைச் சுத்தியே படத்தை முடிச்சிரலாம்'.

    Muthuramalingan's Cinemakkaran Saalai part 4

    ‘ஹீரோயினுக்கு எங்கடா போறது?'

    ‘நீ ரொம்ப நாளா ஏங்கிட்டுத் திரியுறயே ‘மலைச்சாரல்' ஆடல்-பாடல் குரூப் கவிதா, சும்மா எடுப்பா... சினிமான்னா உயிரையே குடுப்பா..."

    ‘அப்பிடீன்ற... அப்ப என் அப்பன்கிட்ட என் சொத்தைப் பிரிச்சி எழுதி வாங்கியாவது படம் பண்றோம்'

    இப்படி ஒன்றிரண்டல்ல. ஐந்து, பத்து என்று வளர்ந்து கடந்த ஆண்டில் இப்படி தயாரான படங்கள் சுமார் முப்பத்துக்கும் மேல் இருக்கும்.

    படத்தை முடித்து ரிலீஸ் என்று வருகிறபோதுதான், இவர்களுக்கு கவுன்சில்,பெப்ஸி, சென்சார், கியூப், பிஎக்ஸ்டி, மற்றும் நிகில்முருகன் போன்ற சமாச்சாரங்கள் இருப்பதே தெரிய வருகிறது.

    தோப்பிலோ, குளத்து மேட்டிலோ, வயல் காட்டிலோ, கரும்புத் தோட்டத்திலோ ஏதோ ஒரு இடத்தில் பேசி முடித்து படம் ஆரம்பிக்கப் போகும் இவர்களை எப்படி கண்டுபிடித்து ‘ஏனுங்க கவுன்சில்ல இருந்து வர்றோம். எங்களை கொஞ்சம் கலந்துபேசிக்கிட்டு, வெவரமா படம் பண்ணுங்க? என்று எப்படி சரி பண்ணுவது?'.

    'நியாயமான கேள்விதான். எனினும் பதில் சொல்லத் தேவையில்லாத கேள்வியும் கூட...

    ‘ஏன் பதில் சொல்லத் தேவையில்லை? என்று கமெண்ட் பாக்ஸில் சின்னதாய் ஒரு கேள்விகேட்டால், பெரியதாய் ஒரு பதில் சொல்வேன். பல பஞ்சாயத்துக்களை கிளப்பப்போகும் பதில் அது!

    (தொடர்வேன்)

    English summary
    The fourth part of Muthuramalingan's Cinemakkaran Saalai discusses about the unorganised local cinemas made by new guys.
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X