»   »  ஒரு தந்தையின் மிரட்டல்

ஒரு தந்தையின் மிரட்டல்

Subscribe to Oneindia Tamil

இளைய சூப்பர் நடிகரின் லேட்டஸ்ட் படம் குறித்து ஜாலியாக கிண்டலடித்து ஒளிபரப்பான டிவி நிகழ்ச்சியால் டென்ஷன் ஆன நடிகரின் தந்தை அந்த நிகழ்ச்சி தயாரிப்பாளரைக் கூப்பிட்டு மிரட்டி, மன்னிப்பு கேட்க வைத்த சம்பவம் கோலிவுட்டில் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.

எல்லா தமிழ் சாட்டிலைட் டிவிகளிலும் ஒரு நிகழ்ச்சி தவறாமல் இடம் பெறுகிறது. அதாவது ஏதாவது ஒரு படத்தை எடுத்துக் கொண்டு அந்தப் படத்தை அப்படியே கிண்டலடித்து, நக்கலடித்து, அதில் நடித்தவர்களை கோமாளித்தனமாக சித்தரித்து அைத ஒரு நாடகம் போல காட்டுகிறார்கள்.

இந்தக் காட்சிகளுக்கு இடை இடையே சினிமா காமடிக் காட்சியோ அல்லது பாடலோ இடம்பெறும். இந்த நிகழ்ச்சி சூப்பர் டென், லொள்ளு சபா என ஏதாவது ஒரு பெயரிட்டுக் கொள்கிறார்கள்.

இதில், குறிப்பிட்ட ஒரு சேனலில் வரும் இந்த காமெடிக் களேபரத்தில், குறிப்பிட்ட பார்ட்டிக்குப் பிடிக்காத நடிகர்களைப் போட்டு வாங்கி விடுவார்கள். அந்த நடிகர்கள் வசனம் பேசும் முறை, நடிக்கும் முறை ஆகியவற்றை படு கேவலமாக கிண்டலடித்து அசிங்கப்படுத்தி விடுவார்கள்.

சரி மேட்டருக்கு வருவோம். சமீபத்தில் வெளியான அந்த இளைய சூப்பர் நடிகரின் படத்தை ஒரு சேனல் தனது நையாண்டிக் காமெடி நிகழ்ச்சியில் சரமாரியாக நையாண்டி செய்திருந்தது.

இதைப் பார்த்த நடிகரின் தந்தை கடுப்பாகி விட்டார். அந்த நிகழ்ச்சியின் இயக்குநர் ராம்பால் என்பவரை அழைத்து வருமாறு கூறியுள்ளார். ராம்பாலும் என்னவோ, ஏதோவென்று பதறியடித்து வந்துள்ளார்.

அவரை கண்ணாபின்னாவென்றுத் திட்டித் தீர்த்துள்ளார் தந்தை. நிகழ்ச்சியை உடனடியாக நிறுத்தி விட வேண்டும். இல்லாவிட்டால் உங்களுடைய டிவிக்கு ஒரு படத்தின் டிரைலரையும், விளம்பரத்தையும் வர விடாமல் செய்து விடுவேன் (தந்தை நடிகர் அவர் தொழில் சம்பந்தப்பட்ட சங்கத்தின் தலைவர்) என்று மிரட்டியுள்ளார்.

தந்தை விட்ட டோஸில் வெளிறிப் போன ராம்பால், அங்கிருந்து திரும்பியுள்ளார். இந்த சம்பவத்தத் தொடர்ந்து, அந்த நிகழ்ச்சியை மட்டும் மறு ஒளிபரப்பு செய்யாமல் விட்டு விட்டதாம் (வழக்கமாக ஒரு நிகழ்ச்சியை இரண்டு முறை போடுவார்கள்)

அத்தோடு விடவில்லையாம். நடிகரின் வீட்டுக்கும் அந்த நிகழ்ச்சியின் இயக்குநர் வரவழைக்கப்பட்டுள்ளார். நடிகரிடம் மன்னிப்பு கேட்குமாறு அங்கு நடிகர் முன்பு வைத்து இயக்குநரை மிரட்டியுள்ளனர்.

இந்த விவகாரம் உண்மையா என்று சம்பந்தப்பட்ட டிவி நிர்வாகத்திடம் கேட்டபோது கருத்து எதையும் தெரிவிக்க மறுத்து விட்டது. ஆனால் அந்த இயக்குநர் நடந்தது உண்மைதான், ஆனால் இதற்கு மேல் எதுவும் கேட்காதீங்க என்று நழுவி விட்டார். இன்னும் பயத்திலிருந்து தெளியவில்லையாம் அவர்.

தந்தை நடிகரின் இந்த அடாவடி மிரட்டல் முதல் முறையல்ல. இதற்கு முன்பு பத்திரிக்கையாளர்கள் பலரும் தந்தையாலும், நடிகராலும் கூப்பிட்டு குத்துப்பட்டு அவமானப்படுத்தப்பட்டுள்ளனர்.

நடிகர் ஆரம்ப காலத்தில், குச்சி போல இருந்தபோது, குப்பை குப்பையாக பல படங்களில் நடித்துக் கொண்டிருந்தார். அப்போது வார இதழ் ஒன்றில் எழுத்தாளர் சுஜாதா (அவர்தான் அந்தப் பத்திரிக்கையின் அப்போதைய எடிட்டரும் கூட) அந்த நடிகரின் ஒரு படம் குறித்து விமர்சனம் எழுதியிருந்தார்.

அதில், அந்தப் படத்தில் இடம்பெற்ற இரட்டை அர்த்த வசனங்கள், மாமியாருடன், ஹீரோ பாத்ரூமில் சேட்டை செய்வது போன்று இடம் பெற்ற காட்சி ஆகியவற்ைற கடுமையாக கிண்டலடித்து விமர்சனம் எழுதியிருந்தார்.

மேலும், இப்படிப்பட்ட மூஞ்சிகளையெல்லாம் காசு கொடுத்து மூன்று மணி நேரம் பார்க்க வேண்டிய தலையெழுத்து தமிழர்களுக்கு என்றும் கடுப்பாக கூறியிருந்தார்.

அவ்வளவுதான் அடுத்த நாளே தந்தை நடிகர் சில தடி தடியான ஆட்களுடன் அந்த பத்திரிக்கை அலுவலகத்திற்கு விரைந்து சென்று ரகளையில் ஈடுபட்டார். கண்ணாடிக் கதவுகளை அடித்து நொறுக்கிய அவர்கள், உடனடியாக அந்த விமர்சனத்திற்கு மறுப்பு கொடுத்து செய்தி வெளியிட வேண்டும் என்று மிரட்டினர்.

இதையடுத்து அந்த பத்திரிக்கை அடுத்த இதழில் இப்படி எழுதியது. இளம் நடிகர்களிலேயே இந்த நடிகர்தான் மிகச் சிறந்தவர், அழகானவர், திறமையானவர்.

தோற்றத்திலாகட்டும், பாடி லாங்குவேஜாலிகட்டும், முகப் பொலிவிலாகட்டும் இவர்தான் அருமையானவர். குறிப்பாக முக பாவனையில் இவருக்கு நிகர் இவரேதான். இப்படிப்பட்ட நடிகர் நடித்த படத்தைப் பார்த்து ரசிப்பது நாம் செய்த பாக்கியம் என்று வஞ்சப் புகழ்ச்சியாக வெளியிட்டது. அப்புறம்தான் அந்த தந்தை, தனது ஆட்டத்தைக் குறைத்துக் கொண்டாராம்.

அதேபோல, சந்திரமுகி வந்தபோது நம்ம நடிகரின் படமும் வந்து, அரவமே இல்லாமல் தியேட்டரை விட்டு ஓடிப் போனது. அப்போது இரு பத்திரிக்கைகளில் அந்தப் படம் குறித்த விமர்சனம் வந்தது.

குப்பைப் படம் என்ற ரீதியில் இருந்த அந்த விமர்சனத்தால் கொதிப்படைந்த தந்தை, தனது பி.ஆர்.ஓ. மூலமாக அந்த இரு பத்திரிக்கைகளின் நிருபர்களையும் வரவைழத்து தாறுமாறாக திட்டி அனுப்பினார்.

இதேபோல, நடிகரின் இன்னொரு படம் குறித்து காட்டமாக கருத்துக்களைத் தெரிவித்த ஒரு நிருபரை தனது செல்வாக்கைப் பயன்படுத்தி (நடிகரும், பத்திரிக்கை அதிபரின் மகனும் கல்லூரித் தோழர்களாம்) வேலைய விட்டே தூக்கி விட்டார்.

புலம்புகிறார்கள் தந்தையால் பாதிக்கப்பட்ட நிருபர்கள்.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil