twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    அவதார கலைஞன் கருணாநிதி - கமல்

    By Staff
    |

    முதல்வர் கருணாநிதிக்கு சென்னையில் நடந்த பாராட்டுவிழாவில் பேசிய நடிகர் கமல்ஹாசன், கருணாநிதியை அவதாரக் கலைஞன் என்று புகழாரம் சூட்டினார்.

    கமல் பேசுகையில், "இந்த விழாவில், மீண்டும் நான் அடக்கத்தை கற்றேன். நடிகர் திலகம் சிவாஜி வசனம் பேசி நடித்த அந்த காட்சியை திரையில் பார்த்தபோது, நான் எல்லாம் எங்கே? என்று நினைத்தேன்.

    அதைப் பார்த்து என் கண்கள் பனித்தன. திரும்பி பார்த்தால், ஒரு குழந்தை (கருணாநிதி) தேம்பி தேம்பி அழுது கொண்டிருந்தது. பதவியை எல்லாம் பார்க்காமல், நட்புக்காக அவர் கண்ணீர் விட்டது என்னை உருக்கியது.

    பகுத்தறிவுவாதி, அதுவும் விடுதலை என்று பெயர் வைத்திருப்பவர், கலைஞர் ஒரு அவதாரம் என்றார். என்ன அவதாரம் என்பதை ரஜினி தெரிவிப்பார் என்றார். எங்களை எல்லாம் ஒட்டுமொத்தமாக உருக்கி எடுத்த கலைஞர் அவதாரம் அவர்.

    அவரிடம் குடியிருக்க நிலம் கேட்டோம். தந்தார். எந்த ஒரு விழாவிலும் அவருக்கு நன்றி சொல்ல நாம் கடமைப்பட்டு இருக்கிறோம்.

    இந்த சரித்திரத்துடன் கலக்கும் தகுதி எனக்கு இருக்கிறதோ, இல்லையோ, கலந்துகொள்ள அழைத்ததற்காக நன்றி. வாழ்த்தும் வயதும், தகுதியும் இல்லை. என் அருகில் அமர்ந்திருந்த அமிதாப்பச்சன், கலைஞருக்கு 87 வயதா? என்று ஆச்சரியப்பட்டார். அவருடன் பேசிப்பாருங்கள். 27 வயதாக மாறுவார் என்றேன். அமிதாப், எங்கள் குடும்பத்தில் ஒருவர். மூத்த அண்ணன்…" என்றார் கமல்.

    சிறந்த மனிதாபிமானி - அமிதாப் பச்சன்

    விழாவில் அமிதாப் பச்சன் பேசுகையில், தமிழ் சினிமா எப்போதும் ஒழுக்கம் நிறைந்ததாகவும், திறமை மிக்கதாகவும், தொழில்நுட்பத்தில் சிறந்து விளங்கியும் வருகிறது.

    இந்தியாவில் சிறந்த படங்கள் எடுக்கப்படும்போதெல்லாம், அவற்றில் பெரும்பாலானவை தமிழகத்திலிருந்துதான் வெளிவந்திருக்கின்றன. தமிழ் திரையுலகில் உள்ள இதுபோன்ற திறமைகள் மும்பை படவுலகத்தில் கூட இல்லை. அதை தமிழ் திரையுலகத்திடம் இருந்து நாங்கள் கற்றுக் கொள்ள வேண்டியுள்ளது.

    இந்த உணர்ச்சிகரமான மாலைப் பொழுதில் உங்களது முதல்வரின் பார்வை மற்றும் பேனா வழியாக ஒரு சிறப்பான கலைப்பயணத்தை நான் பார்க்கிறேன்.

    முதல்வரது பேனா வலிமையானது… தமிழகத்தில் சிறந்த திரைப்படங்கள் வெளி வருவதற்கு மட்டும் அது காரணமாக இல்லை. தமிழகத்தில் ஒரு சமூக மாற்றத்தையே கொண்டு வந்திருக்கிறது. அதற்கு உங்களுக்கு நாங்கள் பெரிதும் நன்றிக் கடன்பட்டிருக்கிறோம்" என்றார்.

    சிலை வைக்க வேண்டும் - விஜய்

    நடிகர் விஜய் பேசியதாவது:

    "கலைஞர் பல வருடங்களுக்கு முன்பு எழுதிய ஒரு பாடலில், எல்லோருக்கும் இருக்க இடம் வேண்டும் என்று ஒரு வரி வரும். இன்று அந்த வரியை அவர் நிறைவேற்றி விட்டார்.

    சினிமா தொழிலாளர்களுக்கு வீட்டு மனை வழங்குவது சாதாரண விஷயம் அல்ல. நம் கனவு நிஜமாகி இருக்கிறது. சினிமா மீதும், சினிமா கலைஞர்கள் மீதும் அவர் எவ்வளவு பாசம் வைத்து இருக்கிறார் என்பதை இது காட்டுகிறது.

    வீடு கட்டப்படும் இடத்துக்கு, 'கலைஞர் நகர்" என்று பெயர் வைத்தால் மட்டும் போதாது. அந்த இடத்தில், அவருடைய சிலையை வைக்க வேண்டும். அவருடைய 100-வது வயதில், இதேபோல் ஒரு விழா எடுத்து, அவருடன் சேர்ந்து அந்த சிலையை நான் ரசிக்க வேண்டும்" என்றார்.

    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X