For Quick Alerts
  ALLOW NOTIFICATIONS  
  For Daily Alerts

  'வருவேன்...யோசிப்பேன்...தெரியல!' - தடுமாறும் விஜய்

  By Staff
  |

  Vijay Press meet
  இன்றைய பத்திரிகையாளர் சந்திப்பில் செய்தியாளர்கள் முன்வைத்த பல கேள்விகளுக்கும் மழுப்பலாகவே பதில் தந்தார் விஜய். அறிமுக உரைக்குப் பிறகு பெரும்பாலும் ஆமாம், இல்லை, நோ கமெண்ட்ஸ், தெரியல, நான் அவ்வளவு பெரிய ஆள் இல்லை போன்றவற்றைத்தான் பதிலாகத் தந்தார்.

  குறிப்பாக இலங்கைத் தமிழருக்கு காங்கிரஸ் இழைத்த துரோகம் பற்றி கேள்விக்கு (ஒரேயொரு நிருபர் மட்டுமே இதைக் கேட்டார். மற்றவர்களுக்கு ராகுல் புராணத்தைத் தாண்டவே மனம் வரவில்லை) நேரடியாக பதில் சொல்ல மறுத்துவிட்டார் விஜய்.

  சிலர் தொடர்ச்சியாக கேள்விகளைக் கேட்டுக் கொண்டே போக, விஜய் பதில் ஏதும் சொல்லாமல் பார்த்தார் (விட்டால்.... 'ஏய்... சைலன்ஸ்!' என்ற தனது புகழ்பெற்ற பஞ்ச் டயலாக்கை பயன்படுத்தியிருப்பார் மனிதர்)

  இன்றைய சந்திப்பில் அவரிடம் வைக்கப்பட்ட கேள்விகள் மற்றும் அதற்கு விஜய் தந்த பதில்கள்-

  காங்கிரஸில் சேருவீர்களா?

  இப்போதைக்கு நான் எந்த முடிவும் எடுக்கவில்லை.

  காங்கிரஸ் பொதுச் செயலாளர் உங்களைப் பார்க்க விரும்பினாரா... அல்லது நீங்கள் தேடிப் போய் பார்த்தீர்களா?

  எனது நண்பர், நலம் விரும்பி ஏற்பாட்டில் போய் பார்த்தேன்.

  நீங்களாகத்தான் விரும்பி பார்த்ததாக ராகுல் காந்தி கூறியிருந்தாரே?

  அதான்... என் நண்பர் ஏற்பாட்டின் படி போய் பார்த்தேன்.

  யார் அந்த நண்பர்?

  நண்பர் அவ்வளவுதான்.

  அவர் சினிமாக்காரரா... அரசியல்வாதியா?

  நண்பர்...(கடுப்புடன்)

  காங்கிரஸ் கட்சியில் உங்களுக்கு என்ன பிடித்திருக்கிறது?

  அந்தக் கட்சி தேசியக் கட்சி. சுதந்திரப் போராட்டம் நடத்திய கட்சி.

  ஈழத் தமிழர்களுக்கு எதிரான கட்சி என்ற உணர்வு நிலவுகிறதே...?

  அதுபற்றி எனக்குத் தெரியாது. ஆனால் தமிழருக்கு எதிராக எது நடந்தாலும் நான் இறங்கிவந்து போராடுவேன். உலகத்தமிழருக்கு நல்லது நடக்க களம் இறங்குவேன்.

  ராகுல் காந்தி தேசிய நதிநீர் இணைப்பைக் கடுமையாக எதிர்க்கிறாரே?

  நோ கமெண்ட்ஸ்.

  சரி...காங்கிரஸில் சேருவீர்களா... மாட்டீர்களா?

  தெரியல.

  காங்கிரசுக்கு வரச் சொல்லி ராகுல்காந்தி அழைப்பு விடுத்தது பற்றி?

  சந்தோஷம்.

  புதுக்கட்சி தொடங்குவீங்களா? அரசியலுக்கு வருவீங்களா?

  எதிர்காலத்தில் அரசியலுக்கு வருவது பற்றி யோசிப்பேன்.

  முதல்ல திமுகவுக்கு ஆதரவா செயல்பட்டீங்க... தயாநிதி மாறனுடன் டெல்லிக்குப் போய் ஸ்டாம்பெல்லாம் வெளியிட்டீங்க. ஆனால் இப்போது காங்கிரஸுக்கு ஆதரவா குரல் கொடுக்கறீங்களே?

  இந்தக் கேள்விக்கு சிறிதுநேரம் அமைதி காத்தார் விஜய். பின்னர், "திமுக அரசு சிறப்பாக செயல்படுது. முதல்வர் கலைஞர் அவர்கள் இந்த வயசுலயும் இளைஞர் மாதிரி துடிப்பா ஆட்சி நடத்துகிறார். தமிழருக்கு ஆதரவான, உறுதியான, வளமான அரசை நடத்தறவங்க கூட நாங்களும் கை கோர்ப்பது பற்றி யோசிப்போம்..." என்றார்.

  அடுத்த கேள்வி... சார் சார் இன்னும் ஒரே கேள்வி... என நிருபர்கள் கூக்குரல் எழுப்பிக் கொண்டிருந்தபோதே, இயக்குநர் சந்திரசேகரன் எழுந்து 'கட்' சொல்லி 'பேக்கப்' பண்ணி அனுப்பினார் நிருபர்களை!!

  உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
  Enable
  x
  Notification Settings X
  Time Settings
  Done
  Clear Notification X
  Do you want to clear all the notifications from your inbox?
  Settings X
  X