»   »  'தசாவதாரம்': வருகிறார் ஜாக்கி சான்

'தசாவதாரம்': வருகிறார் ஜாக்கி சான்

Posted By:
Subscribe to Oneindia Tamil
Jackie chan
கமல்ஹாசன் 10 வேடங்களில் அசத்தியுள்ள தசாவதாரம் படத்தின் ஆடியோ வெளியீட்டு விழாவுக்கு ஆசிய சூப்பர் ஸ்டார் ஜாக்கி சான் வருகிறார். இந்தியத் திரையுலகின் முன்னணி ஸ்டார்களும் இந்த நிகழ்ச்சியில் பங்கேற்கவுள்ளனர்.

ஆஸ்கர் பிலிம்ஸ் ரவிச்சந்திரன் தயாரிப்பில் பிரமாண்டமாக உருவாகியுள்ள படம் தசாவதாரம். கமல்ஹாசன் முதல் முறையாக 10 வேடங்களில் நடித்துள்ளார். உலகிலேயே 10 வேடங்களில் ஒரு நடிகர் நடித்திருப்பது இதுவே முதல் முறையாகும்.

இப்படத்தின் ஆடியோ வெளியீட்டு விழாவில் ஜாக்கி சான் பங்கேற்கிறார். இதுதொடர்பாக ஜாக்கி சானை, ஆஸ்கர் பிலிம்ஸ் ரவிச்சந்திரன் சந்தித்து தேதியை இறுதி செய்து விட்டு வந்திருக்கிறார்.

தமிழ், தெலுங்கு, இந்தி ஆகிய மொழிகளில் இப்படம் உருவாகியுள்ளது. ஏப்ரல் மாதம் 10ம் தேதி தசாவதாரம் திரைக்கு வரும் என்று தெரிகிறது.

கே.எஸ்.ரவிக்குமார் இயக்கி உள்ள இந்த பட ஆடியோ கேசட் வெளியீட்டு விழா விரைவில் சென்னையில் நடைபெற உள்ளது. இது தொடர்பாக ஹாங்காங், கோவ்லோன் நகரில் ஜாக்கி சானை, தயாரிப்பாளர் ஆஸ்கர் ரவிச்சந்திரனும், அவரது சகோதரர் ரமேஷ் பாபுவும் சந்தித்துப் பேசினர்.

ஆடியோ ‌கேசட் வெளியீட்டு விழாவில் கலந்து கொள்ள வேண்டுமென்று அழைப்பு விடுத்தனர். ஹாங்காங்கில் நடைபெற்ற ஒரு விருந்தில் பங்கேற்ற நடிகர் ஜாக்கி சான் இது பற்றி குறிப்பிடுகையில்,

கமல்ஹாசன் நடித்த தசாவதாரம் படத்தின் சில காட்சிகளைப் பார்த்தேன்; ஒரு நடிகர் இவ்வாறு 10 வேடங்களில் நடித்திருப்பது மிகவும் வியப்பில் ஆழ்த்தியது. இந்த திரைப்பட ஆடியோ வெளியீட்டு விழாவில் பங்கேற்பதை பெருமையாக கருதுகிறேன் என்றார்.

மார்ச் மாதம் சென்னை நேரு மைதானத்தில் நடைபெற உள்ள இந்த ஆடியோ கேசட் வெளியீட்டு விழாவில் அமிதாப் பச்சன், ஐஸ்வர்யா ராய், சிரஞ்சீவி, மோகன்லால், மம்மூட்டி, உபேந்திரா, நாகர்ஜுன் போன்றோரும் பங்கேற்பர் என எதிர்பார்க்கப்படுகிறது.

ஜாக்கி சானுடனான சந்திப்பு குறித்து ஆஸ்கர் ரவிச்சந்திரன் கூறுகையில், இது மிகப் பெரிய அனுபவம். கமல்ஹாசனின் நடிப்பின் சில பகுதிகளைப் பார்த்து அசந்து போய் விட்டார்.

தான் தமிழகத்திற்குப் போவது குறித்தும், தசாவதாரம் படத்தின் ஆடியோ விழாவில் பங்கேற்பது குறித்தும் அன்று இரவு ஹோட்டலில் நடந்த பார்ட்டியில் அவரே அறிவித்தார். அந்த நிகழ்ச்சியில் முக்கிய விருந்தினர்கள் 100 பேர் கலந்து கொண்டனர்.

இந்தியாவில் நடைபெறும் பட விழாவுக்கு தன்னை அழைத்திருப்பது குறித்து பெருமையுடன் குறிப்பிட்டார் ஜாக்கி சான்.

நேரு ஸ்டேடியத்தில் ஆடியோ வெளியீட்டு விழா நடைபெறும். அமிதாப் பச்சன், ஐஸ்வர்யா ராய், சிரஞ்சீவி ஆகியோர் தங்களது வருகையை உறுதி செய்து விட்டனர். ரஜினிக்கும் அழைப்பு விடுக்கவுள்ளோம் என்றார்.

ஜாக்கி சானுடன் ஒரு படத்தில் நடித்த மல்லிகா ஷெராவத், தசாவதாரத்திலும் நடித்திருப்பது குறிப்பிடத்தக்கது.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil