»   »  குசேலன் கதை என்ன?

குசேலன் கதை என்ன?

Subscribe to Oneindia Tamil
Rajini
சூப்பர் ஸ்டார் ரஜினி நடிக்கப் போகும் குசேலன் படத்தின் கதையை அறிய அவரது ரசிகர்கள் படு ஆர்வமாக இருக்கிறர்கள். இந்தப் படத்தின் கதை மலையாளப் படத்தின் கதையின் தழுவல் என்ற போதிலும், ரஜினியின் நிஜக் கதையின் சாயலும் இதில் இருக்கும் என்று புதுத் தகவல் வெளியாகியுள்ளது.

மலையாளத்தில் படு பிரபலமான கதாசிரியர் சீனிவாசன். கதாசிரியராக மட்டுமல்லாது, சிறந்த நடிகராகவும் அறியப்படுபவர் சீனிவாசன். இவரது கதையில் உருவான கத பறயும் போள் படத்தின் ரீமேக்தான் குசேலன்.

இப்படத்தின் மூலம் ரஜினியும், சீனிவாசனும் முதல் முறையாக கரம் கோர்க்கிறார்கள். ஆனால் கிட்டத்தட்ட 30 வருடங்களுக்கு முன்பே இருவரும் நண்பர்கள் ஆனவர்கள்.

அதாவது சென்னையில் ரஜினிகாந்த் நடிப்புப் பயிற்சிப் பள்ளியில் சேர்ந்தபோது அவருக்கு ஒரு வருடம் கழித்து வந்து சேர்ந்தவர் சீனிவாசன். அப்போதே இருவருக்கும் நல்ல பழக்கம். இன்று அந்தப் பழக்கம் இருவரையும் குசேலன் படத்தின் மூலம் திரை ரீதியாகவும் இப்போது இணைகிறார்கள்.

முன்பெல்லாம் ரஜினி படம் என்றால் அவர் என்ன ஸ்டைலை புகுத்தப் போகிறார் என்பதுதான் பெரும் எதிர்பார்ப்பாக இருக்கும். ஆனால் சமீப காலமாக கதை என்ன என்ற ஆர்வம் அதிகரித்து வருகிறது.

அந்த வரிசையில் குசேலன் படத்தின் கதையும் எதிர்பார்ப்புக்குள்ளாகியுள்ளது. முதலில் கத பறயும் போள் படத்தின் கதையைப் பார்ப்போம்.

பாலன். கிராமத்தில் வசிக்கும் பாலனுக்கு மனைவி, 2 குழந்தைகள். முடி திருத்தும் தொழிலாளியாக காலத்தை ஓட்டிக் கொண்டிருக்கிறார். அவருடன் கூடவே ஒட்டிக் கொண்டிருப்பது வறுமை. முடி திருத்தும் தொழிலாளி என்பதால் சுழலும் நாற்காலி, நாலா பக்கம் கண்ணாடி என கற்பனை செய்ய வேண்டாம். ஒரு உடைந்த நாற்காலி, ரசம் போன கண்ணாடி சகிதம் கடையை நடத்தி வருகிறார் சீனிவாசன்.

ஒரு நாள், பாலனின் கடைக்கு எதிரே அட்டகாசமான வசதிகளுடன் கூடிய அதி நவீன கடை வந்து சேர பாலனின் பிழைப்பில் மண் விழுகிறது. அதுவரை பாலனிடம் முடி திருத்தம் செய்து கொண்ட பலரும் புதுக் கடைக்குப் போய் விடுகின்றனர்.

இதைப் பார்த்த பாலன், தானும் ஒரு புதிய சுழலும் நாற்காலியைப் போட முடிவு செய்து தச்சரிடம் போய் மரம் கடனாக கேட்கிறார். அவரோ முகத்தில் அடித்தாற் போல பேசி விடுகிறார். அவமானத்துடன் திரும்புகிறார் பாலன்.

குழந்தைகளின் படிப்புக்கான கட்டணத்தைக் கூட கட்ட முடியாமல் அவதிப்படுகிறார் பாலன். இந்த நேரத்தில் ஊருக்கு சூப்பர் ஸ்டார் அசோக் ராஜ் வருவதாக தகவல் பரவுகிறது. அங்கு நடக்கும் ஷூட்டிங்கிற்கு வருகிறார் அசோக் ராஜ்.

அசோக் ராஜ் வருகையை அறிந்த பாலன் பரவசம் அடைகிறார். காரணம், அசோக்ராஜ், பாலனின் பால்ய கால நண்பன். தனது மனைவியிடம் அசோக்ராஜும், தானும் நல்ல நண்பர்கள் என்று கூறி சந்தோஷமடைகிறார்.

அதைக் கேட்டு வியக்கும் பாலனின் மனைவி ஊர் பூராவும் தம்பட்டம் அடித்து விடுகிறார். அவ்வளவுதான் ஒரே நாளில் ஹீரோவாகி விடுகிறார் பாலன். ஊர் மக்கள் அவரிடம் அசோக் ராஜ் குறித்து கேட்டுக் கேட்டுப் பூரிப்படைகிறார்கள். இருவரும் இப்போதும் நெருக்கமாக இருப்பதாக நினைக்கிறார்கள் அவர்கள்.

ஆனால் தனக்கும் அசோக் ராஜுக்கும் ரொம்ப காலமாக தொடர்பே இல்ைல என்பதை சொல்ல முடியாமல் தவிக்கிறார் பாலன். இந்த நிலையில் முதலில் மரம் கடன் தர மறுத்த தச்சர், இப்போது தேடி வந்து பாலனிடம் மரத்தைக் கொடுக்கிறார்.

அதேபோல, பாலனின் குழந்தைகள் படிக்கும் பள்ளிக்கூட நிர்வாகமும், பிள்ளைகளுக்கு பீஸ் கட்டாமல் போனாலும் பரவாயில்லை. அசோக்ராஜை எப்படியாவது பள்ளி நிகழ்ச்சிக்கு கூட்டி வாருங்கள் என்று கேட்டுக் கொள்கிறது.

குழப்பமடைகிறார் பாலன். எப்படி அசோக் ராஜை சந்திப்பது, சந்தித்தாலும் ஞாபகம் இருக்குமா என்ற குழப்பம் அவருக்கு.

இந்த நிலையில் ஷூட்டிங்குக்கு வந்த அசோக்ராஜை ஊர் மக்கள் தங்ளது ஊர் நிகழ்ச்சியில் தலைமை ஏற்க அழைத்து வருகிறார்கள். நிகழ்ச்சிக்கு வரும் அசோக்ராஜ், தனது பழைய நட்பை நினைவு கூர்ந்து பேசுகிறார். பாலன் குறித்து அவர் பேசப் பேச, கேட்டுக் கொண்டிருக்கும் பாலனுக்கு நெகிழ்ச்சி.

கண்களில் நீர் வழிய, அசோக்ராஜை நெருங்கிவிடலாமா என்று பாலனுக்கு தோன்றுகிறது. ஆனாலும் அதை மனதோடு வைத்துக் கொண்டு வீட்டுக்குத் திரும்பி விடுகிறார்.

இந்த நிலையில் பாலன் இருப்பதை அறியும் அசோக்ராஜ் வேகமாக அவரது வீட்டுக்கு வருகிறார். பாலனிடம் மனம் விட்டுப் பேசுவார். ஏன் என்னை இத்தனை காலமாக தொடர்பு கொள்ளாமல் போனாய் என்று உரிமையுடன் கோபித்துக் கொள்கிறார்.

பிறகு பாலனின் குடும்பத்தோடு வீட்டை விட்டு வருகிறார். வெளியே குவிந்திருக்கும் ஊர் மக்களும், பத்திரிக்கையாளர்களும் அந்தக் காட்சியை பரவசத்தோடு பார்க்கிறார்கள்.

இதுதான் கத பறயும் போள் படத்தின் கதை. இப்படத்தில் பாலனாக நடித்திருக்கும் சீனிவாசனுக்குத்தான் கதையில் முக்கியத்துவம். ஆனால் தமிழில் ரஜினிக்கு முக்கியத்துவத்தைக் கூட்டியுள்ளனர்.

கத பறயும் போள் படத்தின் கதை என்ற போதிலும் கூட ரஜினியின் பெங்களூர் நட்பு வட்டாரம் குறித்த கதையும் இதில் இடம் பெறப் போகிறதாம். தனது மறக்க முடியாத சில நண்பர்களின் கேரக்டர்களையும் ரஜினி இதில் சேர்க்கவுள்ளதாக தெரிகிறது.

நடிகராக வேண்டும் என்று கூறி தன்னைக்கு சென்னைக்கு அனுப்பி வைத்த நண்பர்களுக்கு இப்படத்தை அஞ்சலியாக்கப் போவதாக கூறியுள்ளாராம் ரஜினி. தனக்காக உழைத்த, தன்னைக்கு சென்னைக்கு அனுப்பி வைத்ததோடு மட்டும் நில்லாமல், செலவுக்கு பணமும் அனுப்பி வைத்த பெங்களூர் நண்பர்களுக்கு இந்தப் படம் சரியான காணிக்கையாக இருக்கும் என்று ரஜினி நெகிழ்ச்சியுடன் கூறியுள்ளாராம்.

மொத்தத்தில் இப்படம் நட்புக்கு மரியாதையாக இருக்கும் என நம்பலாம்.

Please Wait while comments are loading...

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil