அஜித் - ஆதிக் கூட்டணியில் அடுத்த படம்.. ஏகே 64 ஷூட்டிங் எப்போதான் தொடங்குது?.. வெளியான தகவல்
சென்னை: அஜித்குமார் நடிப்பில் கடைசியாக வெளியான விடாமுயற்சி, குட் பேட் அக்லி ஆகிய இரண்டு படங்களுமே சுமாரான வரவேற்பைதான் பெற்றது. குட் பேட் அக்லியை பொறுத்தவரை அவரது ரசிகர்களுக்கு மகிழ்ச்சிதான். ஆனால் விமர்சன ரீதியாக படம் பலத்த அடியை சந்தித்தது. இருப்பினும் வசூலில் நல்லபடியான ரிசல்ட்தான் வந்தது. இந்நிலையில் அவர் நடிக்கவிருக்கும் அடுத்த படம் குறித்த தகவல் வெளியாகியிருக்கிறது.
அஜித்குமார் நடிப்பில் வருடத்தில் அவரது இரண்டு படங்கள் வெளியாவது நீண்ட காலத்துக்கு பிறகு இப்போதுதான் இந்த வருடத்தில்தான் நடந்தது. விடாமுயற்சி, குட் பேட் அக்லி ஆகிய இரண்டு படங்களில் விடாமுயற்சி படம் ஏகே ரசிகர்களை கவரவில்லை. அஜித்துக்கு மாஸ் சீன்களே இல்லை என்பதால்தான் அந்தப் படத்தை அவர்கள் ரசிக்கவில்லை என்பதே பெரும்பாலானோரின் கருத்து என்பது குறிப்பிடத்தக்கது. அதுமட்டுமின்றி மகிழ் திருமேனியை அவர் போக்கில் விட்டிருந்தாலே தரமான படம் வந்திருக்கும் எனவும் ஒருதரப்பினர் சொன்னார்கள்.
அஜித்தின் குட் பேட் அக்லி: அதேசமயம் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கிய குட் பேட் அக்லி திரைப்படம் ஏகே ரசிகர்களிடம் மிகப்பெரிய வரவேற்பை பெற்றது. அதிலும் இயக்குநரே அடிப்படையில் அஜித்தின் ரசிகர் என்பதால்; ஒரு பக்கா ஃபேன் பாய் படமாக அதனை எடுத்திருந்தார். ஆனால் பொதுவான ரசிகர்களுக்கு படம் சுத்தமாக எடுபடவில்லை. அவர்கள் படத்தை கழுவி கழுவித்தான் ஊற்றினார்கள்.

ஓவர் டோஸ் : மேலும் படம் முழுக்க அஜித் நடித்த பழைய படங்களின் ரெஃபரன்ஸ்களை வைத்திருந்தார். அது கொஞ்சம் இல்லை நிறையவே ஓவர் டோஸ் ஆகிவிட்டது. ஒருகட்டத்தில் சலிப்பும் தட்ட ஆரம்பித்தது. அதுமட்டுமின்றி ரெட்ரோ பாடல்களை பயன்படுத்துகிறேன் என்கிற பெயரில் சம்பந்தமே இல்லாமல் ப்ளேஸ் செய்திருக்கிறார் என்பதும் ரசிகர்களின் கருத்தாக இருந்தது. இருப்பினும் படத்தின் வசூலில் எந்த பாதிப்பும் ஏற்படவில்லை.
அடுத்த படம்: அடுத்தும் அஜித்தை வைத்து ஆதிக் ரவிச்சந்திரன் படம் இயக்க வாய்ப்புகள் அதிகம் இருப்பதாக கூறப்பட்டது. அது இப்போது கிட்டத்தட்ட உறுதியாகிவிட்டதாகவே கூறப்படுகிறது. பிரமாண்ட பட்ஜெட்டில் உருவாகவிருக்கும் இப்படத்தில் ஸ்ரீநிதி ஷெட்டி ஹீரோயினாக நடிக்கலாம் என்றும்; இது துறைமுகத்தை அடிப்படையாக வைத்து உருவாகக்கூடிய கதை என்றும் ஒரு பேச்சு ஓடிக்கொண்டிருப்பது கவனிக்கத்தக்கது.
புதிய தகவல்: இந்நிலையில் அந்தப் படம் பற்றிய புதிய தகவல் ஒன்று வெளியாகியிருக்கிறது. அதன்படி இந்த ஆண்டு இறுதியில் படத்தின் ஷூட்டிங்கை தொடங்க ஆதிக் பிளான் செய்திருப்பதாகவும்; முதலில் ஒரு ஷெட்யூலில் கலந்துகொண்டு; ஜனவரி மாதம் நடக்கவிருக்கும் கார் பந்தயத்தை முடித்துவிட்டு முழு மூச்சாக ஷூட்டிங்கில் ஏகே பங்கெடுக்கவிருக்கிறார் என்றும் தகவல்கள் ஓடிக்கொண்டிருக்கின்றன. அதேபோல் அனிருத் இந்தப் படத்துக்கு இசையமைக்க வாய்ப்புகள் அதிகம் இருப்பதாகவும் கருதப்படுகிறது.


Click it and Unblock the Notifications











